அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! –தைப்பூச ஜோதி தரிசனம்

  கோமதி   | Last Modified : 31 Jan, 2018 02:32 pm


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர் ராமலிங்க வள்ளலார். அவர் நிறுவிய சத்தியஞான சபையில் தைப்பூசத்தன்று ஜோதி தரிசன விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வடலூரில் திருவருட்பிரகாச வள்ளலாரால் கட்டப்பட்டது சத்திய ஞான சபை. இங்கு 1872-ம் ஆண்டு தைப்பூச நாளில் அன்பர்களுக்கு ஜோதியைக் காட்டியருளியதால், அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளில் ஏழு மாய திரைகள் நீக்கப்பட்டு அன்பர்களுக்கு ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. 

ராமையா- சின்னம்மை தம்பதியருக்கு மகனாக  அருட்செல்வர், இராமலிங்க சுவாமிகள் 5-10-1823 ஆம் ஆண்டு வடலூரில் அவதரித்தார்.

வள்ளலாருக்கு சபாபதி, பரசுராமன் என்ற சகோதரர்களும்; சுந்தராம்பாள், உண்ணாமுலை என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இளமை முதலே இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் ஆன்மிக நாட்டத்தில் கொண்டிருந்த வள்ளலார் பெரியோர்களின் வற்புறத்தலால் தன் சகோதரி உண்ணாமுலை அம்மையின் மகள் தனகோடியை மணந்தார். மனைவியை ஆன்மிக வழியில் ஈடுபடுத்தினார்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்ற சித்தாந்தத்தை மேற்கொண்ட வள்ளலார், 1865-ல் உலகை நல்வழிப்படுத்துவதற்கு உருவாக்கியதுதான் சமரச சுத்த சன்மார்க்க சங்கமாகும்

பசித்தவர்களுக்கு அன்னமிட 23-5-1867-ல் உருவாக்கப்பட்டதுதான் சத்ய தரும சாலை. இதை அமைத்து அன்னதானத்தை வள்ளலார் துவக்கினார். அதற்கு அன்று அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்று வரை 145 ஆண்டுகளாக எரிந்து கொண்டே உள்ளது. சத்யஞான சபை என்ற கோவில் 25-1-1872-ல் அமைக்கப்பட்டது. இறைவன் ஒளிமயமானவன் என்ற உண்மையை நமக்கு உணர்த்தவே இது நிறுவப்பட்டது,

நமது உடல் அமைப்போடு ஒப்பிடும் வகையில் எண் கோண வடிவில் சத்யஞான சபை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தெற்கு வாயில் வழி உள் சென்றால், வலப்புறம் பொற்சபையும் இடப் புறம் சிற்சபையும் உள்ளன. பஞ்சபூதங்களைக் குறிக்கும் ஐந்து படிகள் உள்ளன. அவற்றைக் கடந்து உள்ளே சென்றால், சதுர வடிவ பீடத்தின்மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபத்தை நம்மால் காண முடியும். அதற்குப் பின்னே 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக் கண்ணாடி உள்ளது. கண்ணாடியை மறைக்கும் வண்ணம் ஏழு நிறங்களைக் கொண்ட ஏழு திரைச்சீலைகள் தொங்கவிடப் பட்டுள்ளன. இந்தத் திரைகளை விலக்கி, கண்ணாடியில் தெரியும் தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம் எனப்படுகிறது.

இந்த ஏழு வண்ணத் திரைகளுக்கும் தத்துவங்கள் உண்டு.

கருப்புத்திரை- மாயையை விலக்கும்.

நீலத்திரை- உயர்ந்த நோக்கத்திற்கு ஏற்படும் தடையை விலக்கும்.

பச்சைத்திரை- உயிர்களிடம் அன்பு, கருணையை உண்டாக்கும்.

சிவப்புத்திரை- உணர்வுகளைச் சீராக்கும்.

பொன்னிறத்திரை- ஆசைகளால் ஏற்படும் தீமைகளை விலக்கும்.

வெள்ளை திரை - ஆதிசக்தி

ஆறு வண்ணங்களும் இணைந்த ஏழாவது  திரை- உலக மாயைகளை விலக்கும்.

இந்த ஏழு திரைகளை விலக்கி ஞான ஒளியைக் காண்பதே ஜோதி தரிசனமாகும்.


வடலூரிலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்தில்தான் தனது இறுதி காலத்தில் மரணமில்லாப் பெருவாழ்வை அடைவதற்கான வழிபாட்டைத் துவங்கினார் வள்ளலார்.  

பல்வேறு ஆன்ம சாதனைகளையும் சமுதாயத் தொண்டையும் செய்த வள்ளலார், இறுதியாக தை மாத வெள்ளிக்கிழமை (30-1-1874) நள்ளிரவு 12.00மணியளவில், மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தின் அறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டு  இறைஜோதி மயமானார்.

திருவருட்பிரகாச வள்ளலார் இறைவனிடம் வேண்டிய ஒன்பது பேறுகள்

திருவருட்பிரகாச வள்ளலார் இறைவனிடம் ஒன்பது பேறுகளை வேண்டுகிறார். நான் ஒருவரிடம் நின்று ஈயென்று (கொடு) கேளாத இயல்பு;என்னிடம் ஒருவர் எனக்கு இதைக்கொடு என்றபோது அதற்கு இல்லை என்று சொல்லாமல் இடுகின்ற திறம்; இறையாய் நீ என்றும் எனை விடா நிலை; என்றும் உன் நினைவை விடாத நெறி; அயலார் நிதியை என்றும் விரும்பாத மனம்; மெய்ந்நிலை என்றும் நெகிழாத திடம்; உலகில் சீ என்றும் பேய் என்றும் நாய் என்றும் பிறர்தமை தீங்கு செய்யாத தெளிவு; வாய்மை, தூய்மை...ஆகிய ஒன்பது பேறுகளையும் தந்து, உமது திருவடிக்கு ஆளாக்குவாய் என்று அவர் இறைவனை வேண்டிய  அந்தப் பாடல் இதோ ....

''ஈஎன்று நான் ஒருவரிடம் நின்று கேளாத

இயல்பும் என்னிடம் ஒருவர் ஈது

இடு என்ற போது அவர்க்கு இலைஎன்று சொல்லாமல்

இடு கின்ற திறமும் இறையாம்

நீ என்றும் எனைவிடா நிலையும் நான் என்றும் உள்

நினைவிடா நெறியும் அயலார்

நிதியொன்றும் நயவாத மனமும் மெய்ந் நிலையென்றும்

நெகிழாத திடமும் உலகில்

சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்தமைத்

தீங்கு சொல் லாத தெளிவும்

திறம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்

திருவடிக்கு ஆளாக்கு வாய்

தாய் ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள் வளர்

தலம் ஓங்கு கந்த வேளே!

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வ மணியே!'' இது, திருவருட்பா - தெய்வமணி மாலையில் 9-வது பாடலாக அமைந்திருப்பது சிறப்பு

வள்ளலார் போதித்த வாழ்க்கையின்  பத்து நெறிகள்

கடவுள் ஒருவரே. அவர் அருட்பெரும் ஜோதிமயமானவர்.

மக்களிடம் ஜாதி- சமய வேறுபாடு கூடாது.

மாமிசம் உண்பதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.

ஏழைகளின் பசி போக்க வேண்டும்.

ஜீவகாருண்யம்தான் அன்பு வடிவமான ஆண்டவனை அடைய சுலபமான வழியாகும்.

உயிர்கள் யாவும் சமமானவை.

அவற்றை அரவணைக்கும் ஆன்மநேய ஒருமைப்பாடு எல்லாரிடமும் வர வேண்டும்.

தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுக்கக் கூடாது.

உடலும் உள்ளமும் இறைவன் வாழும் ஆலயங்களாகும். இறந்தவர்களை தகனம் செய்யாமல் புதைக்க வேண்டும்.

உண்மையான அன்பால் கடவுளை வழி பாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண வேண்டும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.