நோய் தீர்க்கும் பன்னீர் இலை விபூதி பிரசாதம்

  கோமதி   | Last Modified : 20 Feb, 2018 07:25 pmஒவ்வொரு கோவிலுக்கு என்று தனி சிறப்பு உண்டு. அது அங்கு வீற்றிருக்கும் இறை சக்தி முதற்கொண்டு அங்கு வழங்கப்படும் பிரசாதங்கள் வரை அடங்கும். அப்படி பார்த்தோமானால்  திருப்பதி என்றதும் பெருமாளுக்கு நிகராக அங்கு கொடுக்கப்படும் லட்டு தான் நம் அனைவரின் நினைவிற்கும் வரும். அது போல பழனிக்கு சென்று வந்தவர்களிடம் நாம் தவறாமல் கேட்பது பழனி பஞ்சாமிர்தம். சபரிமலைக்கு சென்று வருபவர்கள் தவறாமல் கொண்டு வருவது அரவணப் பாயாசமும்,அபிஷேக நெய்யும்.இதே போல் திருசெந்தூர் முருகன் கோவிலுக்கும் ஒரு சிறப்பு உண்டு.

வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனி சிறப்பாக பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்கப்படுகிறது. இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம், தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.


அப்படி என்ன சிறப்பு பன்னீர் இலை விபூதிக்கு?

திருச்செந்தூரில் சூரபத்மாதியர்களை வதம் செய்து விட்டு,வெற்றி வீரனாக, தேவ சேனாதிபதியாக  நின்ற முருகப் பெருமானின் பெருமைகளை துதித்த வேதங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலாண்டவரின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக தோன்றின.

எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் இந்த வேத மந்திர சக்திகள் நிறைந்து இருக்கிறது என்பது நம்பிக்கை. பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன. பன்னிரெண்டு கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னிரு திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகம்.

இலை விபூதி மகிமை

ஆதி சங்கரருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், அபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார். வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்த சங்கரரின் கனவில் இறைவன் தோன்றி, “என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான ஜெயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, திருசெந்தூர் வந்தடைந்த, ஆதிசங்கரர், இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, அவருக்கு இறை தரிசனம் கிட்டியது.

இலை விபூதியைப் அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.

தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியாதா?என்ற கேள்வி நம் மனதில் எழக் கூடும். மக்களுக்கு இலை விபூதியின் பெருமையை வெளிப்படுத்த இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் தான் இந்த சம்பவம்.

அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது மனமுருகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார்.அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி நெக்குருகி பாடியுள்ளார்.


 சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர்  இலை விபூதியின் பெருமையை சொல்லி இருக்கிறார்.

இன்றளவும் விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறாது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பன்னீர் இலை விபூதியை பக்தர்கள் தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று அதை பொக்கிஷமாக  பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி,வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்துகொண்டு பயனடைகிறார்கள்.

நாமும் சரவண பவாய நமஹ என்று ஓதி இலை விபூதியைத் தரித்து அந்த சேவற்கொடியோன்  பாதம் பணிவோம்.


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.