கர்ப்பப்பை கோளாறா ...? குழந்தை பாக்கியம் வேண்டுமா? அவசியம் செய்ய வேண்டிய வழிபாடு

  கோமதி   | Last Modified : 13 Mar, 2018 06:02 pm


மாதங்களில் நான் மார்கழி என்ற கண்ணன், மரங்களில் நான்  அரச மரம் என்கிறான். மரங்களில் அரசன் என்று போற்றப்படும் அரசமரத்தை மும்மூர்த்திகளின் அம்சமாகவே நமது சாஸ்த்திரங்கள் போற்றுகின்றன. அரச மரத்தின் வேர் பாகமாக பிரம்மனும், நடு பாகமாக மஹா விஷ்ணுவும், மேல் பகுதியாக சிவனுமாக விளங்குவதால், அம்மூவரையுமே மனதார தியானித்து,மரத்தை வலம் வந்தால்,அவர்களையே வலம் வருவதாக ஐதீகம்.

அப்படி வலம் வரும் போது,

மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபினே

அக்ரதச் சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:

அதன் பொருளாவது,அடியில் பிரம்மனும். நடுவில் விஷ்ணுவும், நுனியில் சிவபெருமானும் நிலைபெற்ற அரச மரமே உனக்கு நமஸ்காரம் என்று சொல்லி 108 முறை வலம் வரவேண்டும்.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள்,காலை வேளையில் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் அரச மரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி  குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது நம்பிக்கை. அரச மரம் வெளியிடும் தூய்மையான பிராணவாயு நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். அந்த நேர்மறை சக்தியானது, நமது அறிவாற்றலை வளர்ப்பதோடு, மனம் தெளிவடைய உதவி செய்யும். அரசமரத்தடியில் அமர்ந்து, இறைவனின் நாம ஜெபம் செய்தாலோ, தெய்வ சம்பந்தமான  ஸ்தோத்திரம் பாராயணம் செய்தாலோ கை மேல் பலன் கிடைக்கும்.

அரச மரம் மட்டுமின்றி அரச மர நிழலுக்கும் மகத்துவம் அதிகம்.அம்மரத்தின் நிழல் படும் நீர் நிலைகளில் வியாழன், அமாவாசை ஆகிய நாட்களில் நீராடுவது பிரயாகை திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலனைக் கொடுக்கவல்லது என்கிறது சாஸ்திரங்கள்.

எந்த கிழமை ..என்ன பலன்?

அரச மரத்தை ஞாயிறன்று வலம் வந்தால் நோய் அகலும், திங்களன்று வலம் வந்தால் வீட்டில்  மங்களம் பெருகும்.செவ்வாய் கிழமை அன்று ஆலமரத்தை வலம் வருவதால் நம்முடைய தோஷங்கள் விலகும். புதன்கிழமை வலம் வருவதால் வியாபாரம் பெருகும்.  வியாழன் கல்வி செல்வத்தையும், வெள்ளிகிழமை வலம் வருவது சகல சௌபாக்கியங்களையும் கொடுக்கும். சனிகிழமை அரசமரத்தை வலம் வருவதால், சர்வ கஷ்டங்களும் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும்.

எத்தனை முறை வலம் வரலாம்?


அரசமரத்தை வலம் வரும் எண்ணிக்கைக்கும் அதற்கேற்றார் போல் பலன் உண்டு.

மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும் வசமாகும்.

ஐந்து முறை வலம் வந்தால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

பதினொரு முறை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்கும்.

மற்ற நாட்களை விட,சனிக்கிழமைகளில் அரச மரத்தை சுற்றுவது மிகவும் நல்லது.மேலும் சனிக்கிழமை மட்டுமே அரசமரத்தை தொட்டு வணங்க வேண்டும். மற்ற நாட்களில் அரச மரத்தை கையால் தொடக் கூடாது.

அமாவாசை திதியும், திங்கட் கிழமையும் இணைத்து வரும் நாள் அமாசோமாவரம் என்று பெயர். அற்புதம் நிறைந்த அந்த நாளில் அரச மரத்தை வணங்கினால்  நலம் அனைத்தும் கிடைக்கப் பெறுவோம்.

 மாலை வேளைகளில் அரச மரத்தை வலம் வருதல் கூடாது என்பதையும் நினைவில் கொள்வோம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.