கணவரை பிரியாமலிருக்க சுமங்கலிகள் செய்ய வேண்டிய பூஜை

  கோமதி   | Last Modified : 14 Mar, 2018 09:53 am


கயிலாயத்தில்,ஒரு சமயம் ஈசனின்  கண்களை விளையாட்டாகப் பார்வதி தேவியார் பொத்தியதால், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது.அந்த கணம் உலகில் வாழும் ஜீவன்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளானதால், கோபம் கொண்ட இறைவன், பார்வதியை பூலோகம் சென்று தவம் செய்யும்படி கட்டளையிட்டார். பூலோகம் வந்த பார்வதி, காஞ்சி மாநகருக்கு வந்து கம்பா நதிக்கரையில் அமர்ந்து மண்ணால் சிவலிங்கம் நிறுவி விரதம் மேற்கொண்டு பூஜித்துக் கொண்டிருந்தாள்.

தேவியை சோதிக்க விரும்பிய ஈசன், கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுக்க செய்தார். வெள்ளம்  பார்வதி தேவி பூஜை செய்யும் லிங்கத்தையும்  அடித்துச் செல்ல வந்தது. உடனே தேவி சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இறைவனை வேண்டினாள். இறைவனும் நேரில் காட்சி கொடுக்க, இறைவனுடன் பார்வதியும் இணைந்தாள்.

அன்னை காமாட்சியே  இந்த விரதத்தினை மேற்கொண்டதால் காரடையான் நோன்பு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் பெற்றது.

மஹா பதிவிரதையான சாவித்திரி செந்நெல்லையும் காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெய்யுடன் ஸ்ரீகாமாட்சிஅன்னைக்குச் சமர்ப்பித்து வழிபட்டதால், தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டாள். நோன்பு அன்று காரடை தயார் செய்து, “உருகாத வெண்ணெயும் ஓரடையும் வைத்து நோன்பு நோற்றேன். ஒரு நாளும் என் கணவர் பிரியாமலிருக்க வேண்டும்” என்று சுமங்கலிகள் பூஜையின் போது வேண்டிக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.

சுமங்கலிப் பெண்கள் தங்கள் கழுத்தில் மங்கல நாண் நிலைக்கவும்,தங்களது கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி இந்த விரதம் இருப்பது மரபு.


விரதம் இருக்கும் முறை:


பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் தனது  இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். அரிசி மாவில், இனிப்பு சேர்த்து அடை தயாரிக்க வேண்டும். இதுவே, காரடை ஆகும். அன்று நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்ய கயிறு மாற்றிக்கொள்வர். சாவித்திரியின் கதை கேட்ட பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர் என்பது நம்பிக்கை.

"மாசிக்கயிறு பாசி படியும்' என்பார்கள்.பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் தீர்க்க ஆயுளுக்காகவும் செய்யப்படும் இந்த காரடையான் நோன்பு இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  பூஜை செய்வதற்கான நல்ல நேரமாக இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை குறிக்கப்பட்டுள்ளது.

இந்த நல்ல நேரத்தில் பெண்கள், பூசை செய்து வழிபட்டு, அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து, சரடு அணிந்து கொண்டு இந்த  ஸ்லோகத்தை சொல்லி பிரார்த்திக்க வேண்டும்.

தோரம் க்ரஹணாமி ஸூபகே

ஸஹாரித்ரம் தராம்யஹம்

பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம்

ஸூப்ரீதா பவ ஸர்வதா:

அதாவது, ‘கணவர் நீண்ட காலம் நோய்நொடியில்லாமல் வாழ்வதற்காக, நான் இந்தக் காரடையான் நோன்பு விரத்ததை மேற்கொள்கிறேன். காமாட்சி அன்னையே, நின்னருளால், சரடும் அணிந்துகொண்டேன். என் கணவரைக் காத்தருளும் தெய்வம் நீயம்மா. என்றும் காத்தருள்வாய் அன்னையே!’ என்பது இந்த ஸ்லோகத்தின்  அர்த்தம்.

தம்பதியினர் முழு ஆரோக்கியமான நல் வாழ்வை வாழ்ந்திட காரடையான் நோன்பு நமக்கு வழிக்காட்டும்.

ஓம் நமச்சிவாய.


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.