ஸ்ரீ ராம நவமி அன்று இந்த இரண்டும் செய்வது மிக மிக விசேஷம்

  கோமதி   | Last Modified : 23 Mar, 2018 04:26 pm



ஒரு மனிதன் தனது வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், எப்படி அன்பினால் பகைவனையும் வெல்லாம் என்பதற்கு ஸ்ரீ ராமரின் வாழ்க்கையே சாட்சி. தனிமனித ஒழுக்கத்தை போதனையோடு நில்லாமல் , மக்களுள் ஒருவராக வாழ்ந்து, உணர்த்திய ஒப்பற்ற அவதாரம் ஸ்ரீ ராம அவதாரம். பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் நிகழ்ந்த ராம அவதாரமே ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.

அஷ்டமி, நவமி திதிகள் ஒரு நாள் இறைவனிடம் சென்று, "மக்கள் எங்களை ஒதுக்குகின்றனரே., நாங்கள் என்ன பாவம் செய்தோம்?'' என்று வருந்தியது. இறைவன் அவர்களுக்கு மனமிரங்கி  "உங்களுக்கும் ஏற்றம் தருகிறேன். அனைத்து மக்களும் உங்கள் இருவரையும் கொண்டாடச் செய்கிறேன்'' என்று வாக்களித்தாராம்.

பகவான் தான் கொடுத்த வாக்கின்படியே நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள் அவ்விரு திதிகளையும் கொண்டாட அருள் புரிந்தார்.

வட மாநிலங்களில் பத்து நாள் திருவிழாவாக  ஸ்ரீராம நவமியை மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். தென் பகுதியிலும் வைணவ ஷேத்திரங்களில் ராமநவமி உற்சவமாகவே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


ராமநவமி அன்று காலை எழுந்து நீராடி, வீடுகளில் மாவிலை கட்டி  மாக்கோலம் போடுவதில் ஆரம்பிக்கிறது ராமநவமி கொண்டாட்டம்.

பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்து, ராமர் பட்டாபிஷேக படத்திற்கு பூச்சூடி, பொட்டு வைத்து பூஜைகள் செய்யப்படும். நைவேத்தியங்கள் படைத்து ராம நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும். நம் முன்னோர்கள் பின்பற்றும் வழி முறைகளில் காரண காரியத்தை ஆராய்ந்து பார்த்தால் அதில்,ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.

மனித குல திலகமான ஸ்ரீராமர் பிறந்தது அனல் சுட்டெரிக்கும் வெய்யில் காலத்தில் என்பதால் தான் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடைபருப்பு, விசிறி போன்றவற்றைத் தானமாகக் கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

ராம நாமம் எல்லையற்ற ஆன்ம சக்தியை நமக்கு வழங்கக் கூடியது. அதனால் ஸ்ரீ ராமநவமியன்று, "ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா' என்று 108 முறை உடலும் மனமும்  ஒன்றி சொன்னால் எல்லையற்ற மன நிம்மதியும், புண்ணியமும்  கிட்டும்.மேலும்  ராமநவமியில் விரதமிருப்பதால் திருமாலின் துணைவியான லட்சுமியின்  கடாட்சம், நாட்பட்ட வியாதிகள் நீங்குதல்,நம்மை எதிர்த்து நிற்கும்  பகைவரும் நண்பராதல், தொலைந்த பொருட்கள் கிடைத்தல், பிள்ளைப் பேறு போன்ற எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

ராம நவமி அன்று,ஸ்ரீராம நாமம் ஜெபிப்பதும்,ராம நாம சங்கீர்த்தனத்தில் கலந்துக் கொள்வதும், , ஸ்ரீராமபிரானுடைய திருநாமத்தை எழுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும். குறிப்பாக அன்று ஸ்ரீ ராமஜயம் எழுதுவது, மற்றும் உபவாசம் இருப்பது இரண்டும், மிக மிக விசேஷம் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர். ராம நவமி அன்று செய்யும் பூஜை புனஸ்காரங்களின் புண்ணியம் , 24 ஏகாதசி அன்று பூஜை செய்தால் கிடைக்கும் புண்னியத்திற்கு சமம்.

ராம நவமி அன்று விரதம் இருந்து, பஜனைகள், ராமாயணச் சொற்பொழிவுகளில் கலந்துக் கொள்ளலாம்.இயலுமானால் பஜனைகளில் கலந்துக் கொள்ள வரும் பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவைகளை வழங்கலாம்.


ராமர் என்றதும் ஆஞ்சநேயர் நினைவிற்கு வராமல் இருப்பாரா?. ஹனுமான் இல்லாமல் ராமாயணமா?.இரத்தின காவியமான ராமாயணத்தை  படிக்கும் இடத்தில் ஆஞ்சநேயர் அருவமாக எழுந்தருளுவார் என்பது ஐதீகம். இதனால்தான் பொதுவாக ராமாயண காலசேட்ப இறுதியில் ஆஞ்சநேய உற்சவத்துடன் பூர்த்தி செய்வதை  சம்பிரதாயமாக வைத்துள்ளனர். ஸ்ரீராம நவமிக்கு பத்து தினங்களுக்கு முன்பே, ராமாயணம் படிக்கத்துவங்கி ஸ்ரீராம நவமி அன்று, ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்துடன் நிறைவு செய்ய வேண்டும்.

 

ஜெய் ஸ்ரீ ராம்!


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.