தெய்வத் திருமணங்கள் நடந்தேறும் பங்குனி உத்திர திரு நாள்

  கோமதி   | Last Modified : 29 Mar, 2018 01:08 pm


நாளை (30.3.2018 வெள்ளிக்கிழமை)  பங்குனி உத்திர பெரு விழா 

மாதம்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாத உத்திர நட்சத்திர நாளுக்கு  அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாளே பங்குனி உத்திரம்.

ஒரு சமயம் சிவபெருமான் காட்டிற்கு சென்று தவமிருக்கத் துவங்கினார்.அவருடைய துணைவியார் உமாதேவியும்  காஞ்சிபுரம் சென்று தவத்தில் ஈடுபட்டார். உலகத்தின் உயிரோட்டமான இவர்கள் இருவரும் பிரிந்து இருந்ததினால் ,எல்லா  உயிர்களின் ஓட்டமும் நின்று விட்டன.

இந்த நிலையை மாற்ற நினைத்த தேவர்கள்,மன்மதனை கூப்பிட்டு ,அவனுடைய காதல் கணையை எய்தி சிவபெருமானை மயக்க சொன்னார்கள்.மன்மதன் சிவபெருமானை நோக்கி மன்மத பானங்களை வீசினார்.அவை சிவபெருமானின் தவத்திற்கு இடையூறை ஏற்படுத்தியதால்,  கோபம் கொண்ட சிவபெருமான் தன் நெற்றி கண்ணால் மன்மதனை எரித்தார்.தன் கணவனுக்கு  ஏற்பட்ட நிலைமையால் ,நிலைகுலைந்த ரதி தேவி , தன்  கணவனைக்  காப்பாற்றும்படி கிருஷ்ணனிடம் பிராத்தித்தார்.

ரதி தேவியிடம், சிவபெருமானை விரதங்களால் பிராத்திக்குமாறு கூறினார் கிருஷ்ணர் .அதன்படியே,  ரதி தேவியும் சிவபெருமானை பிராத்தித்தாள்.சிவபெருமான் மனமிரங்கி,மன்மதனை உயிருடன் மீட்டுக் கொடுத்தார்.

பங்குனி உத்திர திரு நாளில், சிவபார்வதி படத்தை அலங்கரித்து,சித்ரான்னங்கள்,சர்க்கரை பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து,வழிபட வேண்டும்.

பங்குனி உத்திர நாளின் சிறப்புகள்:

ஒரு பங்குனி உத்திர நட்சத்திர திருநாளில் தான் திருப்பரங்குன்றத்தில்  முருகன் - தெய்வானை திருமணம் நடைபெற்றது.

மகாலட்சுமியும் பங்குனி உத்திர நாளில் தான் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.

இந்த நாளில் தான் பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் மனைவியை அடைந்ததும் பங்குனி உத்திரமே. சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம் பங்குனி உத்திரம்.

ராமபிரான் - சீதாதேவி, பரதன் - மாண்டவி, லட்சுமணன் - ஊர்மிளை, சத்ருக்னன் - ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினமும் இது தான்.

இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்ததும் பங்குனி உத்திரத்தில் தான்.

இந்த திருநாளில் தான் மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணமும் நடந்தது. இந்த நாளில் தான் ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது .

தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் அவதரித்ததும் பங்குனி உத்திர நட்சத்திரத் திருநாளில் தான். இதேப் போல அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில்தான்.

 காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றதும் இந்த நாளில் தான்.

சுந்தரமூர்த்தி  நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்ததும் இதே பங்குனி உத்திரத்தில் தான். இறைவனுக்கே பிடித்தமான பிரியமான பங்குனி உத்திரத்திருநாளில் நமக்கு பிடித்த சிவாலயங்கள் செல்வோம். சிவனருள் பெறுவோம்.

இந்நாளில் திருமணம் வேண்டுவோர், முருகனுக்கு விரதம் இருந்து முருகனின்  கந்த சஷ்டி கவசம்,கந்த குரு கவசம்  சொல்லி வழிபட வேண்டும்.

ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

தென்னாடு உடைய சிவனே போற்றி! போற்றி!

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி! போற்றி!


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.