இன்று சங்கடஹர சதுர்த்தி – சங்கரன் மகனை தொழுவோம்

  கோமதி   | Last Modified : 03 Apr, 2018 12:24 pm


விநாயகர் என்றால், ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவர்’ என்று பொருள். ஆரம்பிக்கும் எந்த சுபகாரியங்களும் தடையில்லாமல் நடக்க அவர் அருள் இருந்தால் தான் முடியும் . அதனால் தான் எந்த ஒரு பூஜையோ, நிகழ்ச்சியோ தொடங்கும் முன்னர் மஞ்சளிலாவது ஒரு பிள்ளையாரைப் பிடித்து வைத்து வணங்கி பின் வேலையை ஆரம்பிப்பார்கள்.  

விநாயக பெருமானை வணங்க அனைத்து நாட்களுமே சிறந்தது என்றாலும் சங்கடஹர சதுர்த்தி அன்று அவரை வணங்குவது இன்னும் சிறப்பாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாக குறிப்பிடப்படுகிறது.பொதுவாக இந்த சதுர்த்தி,ஆதவன் மறைந்து சந்திரன் தோன்றும் மாலை நேரத்தில் வரும்.

புராண கதை

ஒரு முறை, பிரம்மன், சிவபெருமானை தரிசிக்க திருக்கயிலாயத்திற்கு சென்றார். அப்போது அங்கே ஒரு கனியுடன் வந்திருந்தார் நாரதர். பிரம்மதேவனுக்கு அன்று நேரம் சரியில்லை. சும்மா இல்லாமல், அந்த தெய்வீகக் கனியை முருகனுக்கு கொடுக்கும் படி சிவபெருமானிடம் கூறினார்.

நாடகத்தை அரங்கேற்றுவதில் வல்லவரான சிவனும் அந்தப் பழத்தை முருகனிடம் வழங்கினார். இதைப்பார்த்த மூத்த பிள்ளையான விநாயகருக்கு எரிச்சல் வந்தது. அவர் பிரம்மதேவனை கோபத்துடன் பார்த்தார். விநாயகரின் கோப பார்வை கண்ட  பிரம்மன் அஞ்சி நடுங்கி விநாயகரை நோக்கி, முழு முதற்பெருமானே, என் பிழையை பொருத்தருள வேண்டும் என்று சொல்லி இரு கரம் குவித்து, தலை தாழ்த்தி உடம்பை அஷ்ட கோணலாக்கி பணிந்து நின்றார். இக்காட்சியை பார்த்த சந்திரன், முனிவர்கள், ரிஷிகள் கூடியிருந்த சபையில் அடக்கமின்றி ஏளனமாய் சிரித்தான்.

 பிரம்மனை பார்த்து, இகழ்ச்சியுடன் சிரித்த சந்திரனின் மீது விநாயகர் கோபப்பார்வை திரும்பியது. அவர் சந்திரனை பார்த்து, ‘பெரியோர்கள் கூடியுள்ள சபையில், அடக்கமின்றி சிரித்த சந்திரனே! உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகக்கடவது. உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும்’ என்று சபித்தார்.

நிலைமை கை மீறி போவதை உணர்ந்த இந்திரனும், தேவர்களும், சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டினர். விநாயகரும்,‘வருடத்தில் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள்’ என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்து விட்டார். மேலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன். அவர்கள் புண்ணிய பேறுகளை அடைவர் என்றும் திருவருள் புரிந்தார்.

ஒவ்வொரு மாதமும் சங்கடஹரசதுர்த்தி வந்தாலும், விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் ‘மகாசங்கடஹர சதுர்த்தி’அன்று வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும்என்பது நம்பிக்கை.

விரதம் இருக்கும் முறை

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு முன் விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். நமக்கு தெரிந்த எளிமையான விநாயகர் துதி சொல்லி சிறு அருகம் புல் சாற்றி வழிபட்டாலும், பலன் உண்டு. கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.

மாலையில் மீண்டும் நீராடி கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும்.

மனிதர்கள் மட்டுமின்றி தேவர்களும் இந்த விரதத்தை கடைப்பிடித்து பலனடைந்துள்ளார்கள். பகவான் கிருஷ்ணர், செவ்வாய், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளை பெற்றனர். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால், அவர் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளை தருவார். தேவை  தூய்மையான பக்தியும்,நம்பிக்கையும் தான்.


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.