வைகாசி திருநாளில் முருகனை வணங்குங்கள் ....முன்னேற்றம் கிடைக்கும்

  கோமதி   | Last Modified : 28 May, 2018 11:57 am


ஓடும் காலச் சக்கரத்தில் நாம் இறை சக்தியை விட்டு விலாகாமல் இருக்க நமது முன்னோர்கள் சில வழி முறைகளையும், வழிபாட்டு நெறிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறர்கள். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுளுக்கு என்று ஏற்படுத்தி நாமே அறியாமல் நம்மை ஆன்மீக நெறிக்குள் வைத்துள்ளனர்.

தமிழ்க் கடவுள் முருகனுக்கு உகந்த மாதமாக வைகாசி மாதம் சிறப்பிக்கப்படுகிறது. தேவர்களைக் காக்க தேவ சேனாதிபதியாக முருகப்பெருமான் அவதரித்த மாதம் வைகாசி என்பதால், இந்த மாதம் முழுவதுமே முருகப்பெருமானின் பெருமைகளால் நிறைந்திருக்கும். “சுக்குக்கு மிஞ்சிய கஷாயம் இல்லை – சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை” என்பார்கள். வைகாசி மாதம் விரதம் இருந்தால், முருகப்பெருமானின் அருள்  நம்முடைய வாழ்க்கையை பூரணத்துவமாக்கி விடும் என்பது ஆன்மீக பெரியவர்களின் வாக்கு.

புத்த மதத்தில் இந்நாள் புத்தரின் அவதார நாளாகவும், புத்தர் ஞானம் பெற்ற நாளாகவும் கொண்டாடப்படுகிறது.


வைகாசி விசாகம் பற்றிய புராண கதை:

அசுர வேந்தன் சூரபத்மன் தனது வலிமையை பெருக்கிக்கொள்ள, சிவபெருமானை நினைத்து கடுமையாக தவம் இருந்தான். இந்த தவத்தை மெச்சிய ஈசனும் , சூரபத்மன் முன் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும்?. என்று கேட்டார். “எனக்கு மரணமே வரக்கூடாது. அத்தகைய வரமே நான் விரும்புவது” என்று சூரபத்மன் சிவபெருமானிடம் கேட்க, அதற்கு இறைவன், “தோன்றும் யாவும் மறையக் கூடியதே. எல்லோருமே இறவா வரத்தை பெற்றால் உலகமே தாங்காது. ஆகவே இந்த வரத்தை உனக்கு தர முடியாது” என்றார்.  “அப்படியா…? சரி. அப்படியானால் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவனால் எனக்கு மரணம் வரக்கூடாது” என்று கேட்டான் சூரபத்மன்.

இறைவனும் “அவ்வாறே ஆகட்டும்” என்று ஆசி வழங்கினார். வரத்தை பெற்ற பிறகு சூரபத்மனின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. பூலோக மக்களையும், தேவர்களையும் கண்மூடிதனமாக தொல்லைப்படுத்திகொண்டு இருந்தான். இதனால் பொறுமை இழந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தங்களை காப்பாற்றும்படி வேண்டினார்கள். சிவபெருமான், தன் நெற்றிகண்ணால் ஆறு தீப்பொறிகளை தோன்றச் செய்து, அந்த தீப்பொறிகளை வாயுபகவானிடமும், அக்னிபகவானிடமும் தந்து, அதை கங்கையாற்றில் விடும் படி உத்தரவிட்டார்.


கங்கை தேவி அந்த தீப்பொறியை இமயமலைசாரலில் உள்ள சரவணப்பொய்கையில் சேர்ந்தார். அந்த சரவணபொய்கையில் இருந்த ஆறு தாமரை மலர்களில், அந்த தீப்பொறி சேர்ந்து ஆறு குழந்தைகளாக உருவெடுத்தது. அந்த ஆறு குழந்தைகளை கார்த்திகை பெண்கள், தங்களின் குழந்தையாகவே பாவித்து வளர்ந்தார்கள். கார்த்திகை பெண்கள் முருகப்பெருமானை வளர்த்ததால் “கார்த்திகேயன்” என்ற பெயரும் பெற்றார்.

பிறகு சக்திதேவியின் சக்தியால் அந்த ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தையாக வடிவெடுத்தது. இதனால் முருகப்பெருமானுக்கு ஆறுமுகன் என்ற பெயர் ஏற்பட்டது. பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் சாபத்தால்,அவரின்  குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள்.

சிவபெருமானின் அறிவுறுத்தலின் அறுவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர்.

பராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் வைகாசி விசாகத்தின்போது இந்த நிகழ்வு,  10 நாட்கள் கொண்டாட்டமாக  சிறப்பிக்கப்படுகிறது.  

சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன.

சூரபத்மனை அழித்து தேவர்களுக்கு மனநிம்மதியை தந்த ஆறுமுகப் பெருமான்,அன்றிலிருந்து இன்றுவரை தம்மை வணங்கும் பக்தர்களுக்கு வெற்றியை தந்து அருள்பாலிக்கிறார்.

வைகாசி விசாகத்திருநாளை முன்னிட்டு முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் ,ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.


இவ்விரத்தினை மேற்கொள்ளவதால் நல்ல மணவாழ்க்கையும், குழந்தைப்பேறு கிட்டும். மேலும் நோயில்லா நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

 

வேலுண்டு வினையில்லை ....மயிலுண்டு பயமில்லை!


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.