ஏவல், செய்வினைகளால் அவதிப்படுவோர் வணங்க வேண்டிய கோவில்

  கோமதி   | Last Modified : 12 Jun, 2018 12:34 pm
those-suffering-from-evil-spirits-need-to-worship-this-kali

பெண் தெய்வங்களில் காளி என்பவள் உக்கிரத் தெய்வமாக குறிக்கப்பட்டுள்ளது. இயல்பில் கருணை ததும்பும் விழிகளுடன், சாந்தம் பொங்கும் திருமுகத்தினை பார்த்துப் பழகிய நமக்கு ரவுத்திரம் கொப்பளிக்கும் விழிகளும்,உக்கிரமான தோற்றத்தைப் பார்த்தால் பயம் வரத்தானே செய்யும். ஆனால் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும் என்று சொல்வார்கள். அன்னையும் அப்படித் தான் தீவினை புரிந்து அடாதச் செயல்களை செய்யும் கயவர்களுக்கு தான் காளி. மற்றபடி அன்னையும் மங்களம் நிறைந்தவள் தான்.

பத்ரகாளியின் அம்சமான பிரத்யங்கிரா தேவியும் பார்ப்பதற்கு அச்சம் தரும் தோற்றத்தை உடையவளாக இருப்பினும், தன்னை துதிப்பவர்களுக்கு 16 வகை செல்வங்களையும் தந்து பெரு வாழ்வு வாழ வைப்பாள். பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற அனைத்து தீயவினைகளும் இவளைக் கண்டால் ஒடுங்கும். சர்வமங்களங்களையும் அருளும் தயாபரியான இவளின் நாமத்தை சொன்னால், எந்தவித பயமும் நம்மை நெருங்காது.

பிரத்யங்கிரா தேவி தோன்றிய விதம்

‘நானே கடவுள்’ என்று மூன்று உலகையும் நடுக்க செய்த ஹிரண்யகசிபுவை வதம் செய்ய திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தார். ஹிரண்யனை வதம் செய்த  பின்னரும் நரசிம்ம மூர்த்தியின்  உக்கிரம் தணியவில்லை. இதனை தாங்க முடியாத தேவர்கள், அஞ்சி நடுங்கி பரமேஸ்வரனை தஞ்சமடைந்தனர். சிவபெருமான் பாதி பறவை உருவத்தையும் பாதி யாளி உருவத்தையும் கொண்ட பிரமாண்ட சரபேஸ்வரராக உருவெடுத்தார். கூரிய நகங்களையும் பற்களையும் கொண்ட சரபரும் நரசிம்மமும் சண்டையிட்டனர். நீண்ட நாட்கள் நீடித்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய சரபர் தனது இறக்கைகளில் ஒன்றாக இருந்த காளியை, உக்கிரமான பிரத்யங்கரா தேவியாக அவதாரமெடுக்க செய்தார்.

சரபரின் நெற்றிக் கண்ணிலிருந்து உக்கிரப் பிரத்தியங்கிரா என்ற பத்திரகாளி உதித்தாள். பிரத்தியங்கிராவும் சூலினியும்,சரபேஸ்வரரின் இரு பெரும் சக்திகளாக விளங்குபவர்கள். சரபரின் மனைவியரான இருவரும் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். இறுதியில் சாந்தமான நரசிம்மர், தான் சிவபெருமானுடன் சண்டையிட்டதை எண்ணி வருந்தி, சிவனை 18 ஸ்லோகங்களால் துதிக்க, அந்த ஸ்லோகங்களே சரபேஸ்வரரின் அஷ்டோத்திர நாமாக்கள் என போற்றப்படுகிறது. இவளை உபாசிப்பவர்கள் கடன், சத்ரு தொல்லைகளிலிருந்து மீள்வர்.

பிரத்யங்கிரா தேவியின் திருக்கோயில்

கும்பகோணத்திலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில், இருக்கிறது ஐவர்பாடி. பஞ்ச பாண்டவர்கள் இத்தலம் வந்து தேவியை பூஜித்து அருள் பெற்றதால் இப்பெயர் நிலைத்துள்ளது. பின்னாளில் இதுவே பேச்சு வழக்கில்  அய்யாவாடி என்று மாறி விட்டது.

பகைவர் கண் திருஷ்டி, தொல்லை தீர்க்க - ஸ்ரீ பிரத்யங்கரா தேவி

இத்திருத்தலத்தில் அன்னை  சிங்க முகத்துடனும் கரிய உடலுடனும் சிறிய கண்களுடனும் கைகளில் சூலம், கபாலம், டமருகம், பாசம் போன்ற ஆயுதங்கள் ஏந்தி, நீல நிற ஆடை உடுத்தி, தனது வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து சிங்கத்தின் மீது சிம்மவாகினியாய் வீற்றிருந்து திருவருள் பாலிக்கின்றாள். பஞ்ச பாண்டவர் இந்த தேவியை பூஜித்ததன் சாட்சியாக இந்த திருத்தலத்தில் உள்ள தல விருட்சம் ஐந்து விதமான இலைகளை கொண்டு காட்சியளிக்கிறது.

அய்யாவாடி பிரத்யங்கிராதேவியை வணங்குபவர்கள்,  முற்பிறவி வினைகள், தீராத நோய்கள், குழப்பங்கள், கஷ்டங்கள் தீர்க்கப்பட்டு  மேன்மையான வாழ்க்கை வாழ்வதற்கு  இங்கு நம்பிக்கையோடு வரும் பக்தர்களே சாட்சி. கலியுகக் கடவுளான அன்னையை உபாசிப்பவர்கள் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவர். பிரத்யங்கரா தேவியை பூஜிப்பவரை, தம்மை பூஜிப்பவர்களாகவே தேவர்கள் எண்ணி அருள்பாலிப்பர்.

‘‘ ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலாஜிஹ்வே கராள
தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கிரே க்ஷம் ஹ்ரீம் ஹூம்பட்’’

என்ற இவளது மூல மந்திரத்தை தினமும் தொடர்ந்து ஜெபித்து, இவளது தியான மந்திரம், அஷ்டகம், பஞ்சகம் சொல்லி வழிபட குடும்பத்தில் அமைதி நிலவும். பகைவர் தொல்லைகள் அறவே தீரும். தீவினைகள் நெருங்காது. அனைத்து தோஷங்களும் விலகி ஓடும் என்கிறார்கள் பலனடைந்தவர்கள். அமாவாசை, பௌர்ணமி தினங்களில்,இந்த திருத்தலத்தில் நடைபெறும் யாகத்தில் கலந்துக் கொண்டு அன்னைக்கு  மிகவும் பிரீதியான மிளகாயை காணிக்கையாக செலுத்தினால் மிகச் சிறந்த பலன்களை தருவாள் அன்னை மகா பிரத்யங்கரா தேவி.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close