நலம் பல தரும் பௌவுர்ணமி சத்யநாராயணா பூஜை

  கோமதி   | Last Modified : 28 Jun, 2018 10:51 am

powranami-sathyanarayana-pooja

பௌவுர்ணமியன்று வீட்டில் சத்யநாராயணா பூஜை செய்து வந்தால், வீட்டில் சுபிக்ஷம் பெருகும் என்பது நம்பிக்கை. சத்யநாராயணா பூஜை என்றால் என்ன? அதை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளும் முன் சத்ய நாராயண பூஜையின் மகத்துவத்தை சொல்லும் கதை ஒன்றை பார்ப்போம். 

ஒரு ஊரில் வீப்ரதன் என்பவன் தன் மனைவியுடன் வறுமையில் வாடினான். வீப்ரதனின் கஷ்டங்களை அறிந்த மகான் ஒருவர், ஒருநாள்  வீப்ரதனை பார்த்து, “வீப்ரதா…சௌக்கியமா”?  என்றார். “தாங்கள் யார்.? என்னுடைய பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்.? உங்களை நான் பார்த்ததேயில்லையே.?”. “இந்த உலகத்தில் இருப்பவர்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள். நானும் அவர்களை பார்த்து கொண்டேதான் இருக்கிறேன். நான் அவர்களிடம் பேசமாட்டேனா என்று ஏங்குபவர்கள் பல பேர். நீ என்ன புண்ணியம் செய்தாயோ, நானே உன்னை தேடி வந்து பேசுகிறேன்.”

(வீப்ரதனிடம் பேசுவது அந்த ஸ்ரீமன் நாராயணனே என்பது அவனுக்கு எப்படி தெரியும்.) “உன்னுடைய கஷ்டங்கள் என்ன என்று நீயே பலமுறை என்னிடம் வந்து முறையிட்டு இருக்கிறாய். அதனால் உனக்கு ஸ்ரீசத்தியநாராயணா பூஜைமுறைகளை சொல்கிறேன். அந்த பூஜையை முறைப்படி செய்” என்று பூஜை முறைகளை சொல்லிவிட்டு, வீப்ரதன் மறுவார்த்தை கேட்பதற்குள் சென்றுவிட்டார் அந்த மகான். வீப்தரன்  நேராக தன் மனைவியிடம் “கடவுள் போல ஒரு பெரியவர் நம் கஷ்டங்கள் தீர ஸ்ரீசத்தியநாராயண பூஜையை எப்படி செய்வது என்று கூறினார். அதனால் நாம் உடனே பூஜையை தொடங்க வேண்டும்” என்றான்.

அதற்கு அவளோ, “அடுத்தவேளை உணவுக்கு கூட வழி இல்லாமலும், சாதாரண பூஜைக்கே தேங்காய் பழம் வாங்கி பூஜை செய்வதே பெரிய விஷயமாக இருக்கும்போது, யாரோ ஒரு பெரியவர் சொன்னார் என்பதற்காக அன்னதானம் தந்து பூஜை செய்கிற நிலையிலா நாம் இருக்கிறோம்? என்றாள். “எதுவாக இருந்தாலும் சரி. எப்படியாவது பூஜையை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். வரும் பௌவுர்ணமியன்று அந்த பெரியவர் சொன்னது போல பூஜை செய்வோம். அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன். இறைவன் இருக்கிறான். நாம் ஏன் கவலைப்பட வேண்டும்.? .” என்றான். 

ஒவ்வோரு வீடாக சென்று, “அம்மா… ஸ்ரீசத்தியநாராயண பூஜை செய்ய இருக்கிறேன். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.” என்று யாசகம் கேட்டான் வீப்ரதன். எதிர்பார்த்ததை விட இறைவனின் அருளால் உணவு பொருட்கள் கிடைத்தது. பூஜையை தொடங்கினான். பூஜையிலும் அன்னதானத்திலும் கலந்துக் கொள்ளும்படி எல்லோரையும் அழைத்தான். வந்தவர்களோ, “பரேதேசியாக இருப்பவன், சத்தியநாராயண பூஜையை செய்கிறானாம். செய்தால் கோடீஸ்வரனாக மாறிவிடுவானா?” என்று வயிற்றெரிச்சலோடு பூஜையில் கலந்து கொண்டார்கள். அந்த பக்கமாக வந்த வழிப்போக்கன் ஒருவனும் பூஜையில் கலந்துக் கொண்டான். பூஜை நல்லபடியாக முடிந்தது. வீப்ரதனும் அவனுடைய மனைவி, குழந்தைகளும் வந்தவர்களுக்கு சிரித்த முகத்துடன் உணவை பரிமாறினார்கள். விருந்து முடிந்து எல்லோரும் புறப்பட்டார்கள். 

ஆனால் அந்த வழிபோக்கன் மட்டும் வீப்ரதனிடம், “சாமீ... நான் ஒரு வழிப்போக்கன். பசி என்னை வாட்டியெடுத்தால் இந்த பூஜையில் நீங்கள் அழைக்காமல் நான் கலந்துக் கொண்டு, நீங்கள் தந்த அன்னதானத்தில் சாப்பிட்டேன். அதற்காக என்னை மன்னிக்கவும். பூஜை சிறப்பாக இருந்தது. எல்லாம் நல்லப்படியாகவே அமைந்தது. உணவுக்காக தேடி வந்த எனக்கு, ஸ்ரீசத்தியநாராயண பூஜை தரிசனத்தை காட்டினீர்கள். இப்பூஜையை காண கண்கோடி வேண்டும். அத்தனை சிறப்பாக நடத்தினீர்கள். என் கண்களுக்கும் வயிற்றுக்கும் விருந்தளித்த தாங்களும், தங்கள் குடும்பமும் எல்லா செல்வமும் பெற்று நோய்-நொடியின்றி பல்லாண்டு வாழ வேண்டும்” என்று வாழ்த்தினான்.

பூஜையின் பயனாக வீப்ரதன், எடுக்கும் முயற்சியெல்லாம் வெற்றியாக அமைந்தது. அவன் ஆரம்பித்த வியபாரமும் லாபம் தந்தது. பல கோடிகளுக்கு அதிபதியானான். பூஜையில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட வழிபோக்கனின் மகளுக்கு திருமணம், நல்ல வேலைவாய்ப்பு என்று ஒரு நிலையான இடத்திற்கு வந்தான். பூஜையே செய்யா விட்டாலும், வீப்ரதன் நடத்திய பூஜையில் நல்ல எண்ணத்துடண் கலந்து கொண்டதற்கே மேன்மை பெற்றான் வழிப்போக்கன். மற்றவர்களோ வீப்ரதனின் பூஜை மற்றும் அன்னதானத்தை கேலி பேசியப்படி கலந்துக் கொண்டார்கள். அதனால் அவர்கள், முன் இருந்ததை போலவே காலத்தை கழித்தார்கள். 

புனிதமான நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போது, நம்முடைய எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும்.  ஸ்ரீசத்தியநாராயண பூஜையை பௌவுர்ணமியன்று செய்தால், குடும்பத்தில் தடைப்பட்ட   சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடைபெறும். 

பூஜை முறை:

பௌர்ணமி அன்று மாலை, குளித்துவிட்டு பூஜை அறையை மெழுகி, தாமரை மலர் கோலமிட வேண்டும். மாலை 4.30- 6.00மணிக்குள் பூஜையை தொடங்கி முடித்துவிடவேண்டும். தாமரைக் கோலத்தின் மீது, ஒரு பலகையிட்டு, கும்பம் வைக்க வேண்டும். அதில் நூல் சுற்றி, அதற்கு வஸ்திரம் கட்டி, நிறைகுடத்தில் இருந்து நீர் நிரப்பி, அதன் மேல் மலர்கள் தூவ வேண்டும். ஸ்ரீசத்தியநாராயணர் படம் ஒன்றை கும்பத்தின் அருகில் வைக்க வேண்டும். படத்தின் முன் கோதுமை மாவுடன், வாழைப்பழம், நெய், பால், தேன் கலந்து செய்த அப்பத்தை நைவேத்யமாக படைக்க வேண்டும்.

மனதில் இஷ்ட தெய்வம் குலதெய்வம், விநாயகர், துர்க்கை, வருணபகவான், நவக்கிரகங்களை நினைத்து வணங்கியதுடன், ஸ்ரீசத்தியநாராயணனையும் வணங்கவேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஸ்ரீமன் நாராயணனை குறித்து 108 போற்றி பாடல்களையும் பாடலாம். பூஜையின் முக்கிய அம்சமாக அன்னதானம் செய்ய வேண்டும்.

பக்தியுடன், உள்ளப்பூர்வமாக ஸ்ரீசத்தியநாராயணனை வணங்கி இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறலாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.