ஆனைமுகனை எப்படி வழிபடலாம் ?

  கோமதி   | Last Modified : 16 Jul, 2018 12:48 am

how-can-we-worship-vinayagar

முழுமுதற்கடவுள் விநாயகர் நம்முடைய அனைத்து செயல்களுக்கும் வழிகாட்டுபவர். விநாயகப்பெருமானை வழிபடும் போது மிகவும் பணிவுடன் உடலைச் சாய்த்து நின்று முதலில் கைகளால் நம் நெற்றியின் இருபொட்டுகளிலும் குட்டிக்கொள்ளவேண்டும்.பின் வலது காதை இடது கையாலும், இடது காதை வலது கையாலும் பிடித்து மூன்று முறை தோப்புக் கரணம் போட வேண்டும்.அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் காட்டி வணங்கி மூன்று முறை வலம் வரவேண்டும்.
ஆனைமுகனிடம்  நமது  தீவினைகளை சிதற வேண்டுமென வேண்டி சிதறுத் தேங்காயை உடைக்கவேண்டும்.

விநாயகர் சன்னதியில்  தலையில் குட்டிக்கொள்ளுவதின் பின்னணியில் முக்கியமான கருத்து ஒன்றை சொல்கிறது ஒரு புராணக்கதை: 

வட இந்தியாவில் இருந்துதென்னிந்தியா நோக்கி அகத்திய மாமுனி  வந்து கொண்டிருந்த போது அவர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதி நீரை காகம் வடிவில் வந்து விநாயகர் கவிழ்த்தார். அதைத் தொடந்து 
பிராமண சிறுவன் வடிவில் விநாயகர் அகத்தியர் முன் வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார்.அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து தென்னகத்தில் செழுமை பசுமை ஏற்படுத்த காவிரியை உருவாக்க , கமண்டலத்தில் கொண்டுவந்த கங்கை நீரை கொட்டுவதற்கே கமண்டலத்தை கவிழ்த்து விட்டதாக  விளக்கம் கொடுத்தார்.

விநாயகர் கொடுத்த விளக்கத்தை உணர்ந்து தான் செய்த தவறுக்கு வருந்தி அகத்தியர் தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். இதுவே விநாயகர் வழிப்பாட்டில் தலையில் குட்டிக்கொள்ளும் வழக்கம் வந்ததன் பின்னணி:
ஆனைமுகன் முன்பு தலையில் குட்டிக் கொண்டு வணங்குவதால் நெற்றியின் இரு பொட்டுகளிலும் குட்டிக்கொள்வதால் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்கு சுரக்கும் என்பதை இன்றைய விஞ்ஞானம் உறுதிபடுத்தியுள்ளது.

தோப்புக்கரணம் போடுதல் குறித்தும் புராண குறிப்பு உள்ளது:

கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்தான். விநாயகர் அசுரனை அழித்து தேவர்களைக் காத்தார்.இதனைத் தொடந்து  தேவர்கள் விநாயகரை பயபக்தியுடன் தோப்புக்கரணம் போட்டு வழிப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகவே இன்றுவரை  விநாயகர் முன் தோப்புக்கரணம் போட்டு வருகிறோம் நாம்.

மேலும் தோப்புக்கரணம் போடுவதால் மூட்டு மற்றும் கால்களுக்கு வலிமை உண்டாகிறது. நினைவாற்றலை அதிகப்படுத்துவதுடன், நாடி சுத்தியாகிறது

அருகம்புல் மாலை அணிவித்து ஆனைமுகனை வழிபாடு செய்வதன் புராண பின்னனி:

அனலாசுரன் என்ற அசுரன் மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றி எரித்து விடுவான்.விநாயகர் மக்களைக் காக்கும் பொருட்டு அனலாசுரனுடன் போரிட்டார். ஆனால் அந்த அசுரனை விநாயகரால் வெல்ல  முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விநாயகர் அந்த அசுரனை விழுங்கிவிட்டார். வயிற்றுக்குள் சென்ற அசுரன் அனலைக் கக்கினான்.

வெப்பத்தால்  தவித்த  விநாயகரை குளுமைப்படுத்த குடம்குடமாக கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆனாலும் ஆனைமுகனின்  வயிற்றெரிச்சல் அடங்கவில்லை.
அந்த சமயத்தில்  ஒரு முனிவர் அருகம்புல்லை தலையில் வைத்து வழிபட  விநாயகரின் வயிறு குளுமையானது. எரிச்சல் அடங்கியது. அந்த நாள் முதல் அருகம்புல் விநாயகர் வழிபாட்டில் இன்றியமையாதது ஆகிவிட்டது.

சிதறுகாய் உடைத்தல் வெறும் சடங்கு அல்ல இதற்கும் புராணத்தில் ஒரு சம்பவம் சொல்லப்பட்டிருக்கிறது : 

காசியப முனிவரின் மகனாக விநாயகர் மகோற்கடர் என்ற பெயரில் அவதரித்தார். ஒரு நாள் யாகத்திற்கு சென்ற போது அசுரன் ஒருவன், விநாயகரைத் தடுத்து நிறுத்தினான். அப்போது பிள்ளையார் யாகத்திற்கு கொண்டு சென்ற கலசங்களின் மீதிருந்த தேங்காய்களை அசுரன் மீது வீசி அவனை பொடிப்பொடியாக்கினார்.இதன் தொடர்ச்சியாகவே சிதறு போடுகிறோம் நாம்.
இதன் தாத்பர்யம் பொருள் மிகுந்ததாக உள்ளது.
விநாயகர் அசுரனை தேங்காயால் சிதற அடித்து தகர்த்ததால், சிதறுகாய் உடைத்து வழிபடும் முறை ஏற்பட்டது.

நம் தீவினைகள் தீர்ந்திட ஆனைமுகனை வழிபடுவோம்.ஆனந்தம் காண்போம்.
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close