ஆடி மாதம் தேடி செல்ல வேண்டிய கோயில்கள் எவை தெரியுமா?

  கோமதி   | Last Modified : 18 Jul, 2018 02:02 am
a-di-special-the-temple-on-tuesday-where-we-have-to-go

ஆடிமாதம் வந்துவிட்டாலே அம்மன் கோயில்களில் திருவிழா கூட்டம் . ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளுமே திருக்கோயில்களில்  சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்தபடி இருக்கும். தீ மிதி சடங்குகளுக்கும் குறைவில்லை. சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள  ஸ்வர்ணாம்பிகை உடனுறை அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை தன்னகத்தே ஈர்த்து அருள்பாலிக்கிறது.

வில்வலன் மற்றும் வாதாபியை அகத்தியர் அழித்த தலம் என்பதால் தற்போது சென்னையின் முக்கிய பகுதியாகிவிட்ட இந்த இடம் , வில்லிவாக்கம்  எனப் பெயர் பெற்றது.

 வில்லிவாக்கம் பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்தத் திருத்தலத்தில் மூலவர் : அகஸ்தீஸ்வரர் , தாயார் : ஸ்வர்ணாம்பிகை , வில்வம் இங்கு தல விருக்‌ஷம், தீர்த்தம் : அங்காரக தீர்த்தம். வில்வாரண்யம் இத்திருத்தலத்தின் புராணப்  பெயர்

அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி தந்த தல புராணம்

திரேதாயுகத்தில் பார்வதி தேவிக்கும் பரமேஸ்வரனுக்கும் திருக்கயிலையில் திருமணம் நடைபெற்றது. சிவசக்தி திருமணத்தைக் காண முப்பது முக்கோடி தேவர்கள், கந்தர்வர், யக்ஷர், கிங்கரர், கின்னரர், கிம்புருடர், சிவகணங்கள், ரிஷிகள், முனிகள், மானிடர், அரக்கர் கயிலையில் ஒன்று சேர்ந்ததால் வடபுலமான கயிலை தாழ்ந்தது. தென் நாட்டை சமன்படுத்த தெற்கு நோக்கி செல்ல சிவபெருமான் சித்தர்களின் தலைவரான குறுமுனி அகத்தியருக்கு கட்டளையிட்டார்.
    
அதுமட்டுமில்லாமல் கயிலை சிவசக்தி திருமணக் கோலத்தை, அகத்தியர் வேண்டும்போது எல்லாம், காட்டுவதாக வரமும் அளித்தார்.

 

சிவபெருமானின் கட்டளைக்கேற்ப  தென்திசை வந்தார் அகத்தியர். அப்போது இங்கு  தங்கி சிவபூஜை செய்தார். அவருக்கு வில்வலன், வாதாபி என்னும் சகோதர அசுரர்கள் தொல்லை கொடுத்தனர். அவர்களை அகத்தியர் வதம் செய்து விட்டார். இதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட்டார். தொடர்ந்து தனது பூஜைகள் சரிவர நடக்க சிவனிடம் பாதுகாப்பு கேட்டார். அவரது பூஜைக்கு இடையூறு வராமல் காக்க, வீரபத்திரரை அனுப்பிய சிவபெருமான் அகத்தியரின்  தோஷத்தை நிவர்த்தி செய்தார்.

அகத்தியரின் காவலுக்காக வந்த வீரபத்திரர் இத்தலத்தில் இன்றும் காட்சி தருகிறார். அகத்தியர் வழிபட்ட சிவன் அகஸ்தீஸ்வரர் என்ற பெயரில்  இங்கு மூலவராக அருள் பாலிக்கிறார்.

அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலின் சிறப்பு

இந்த திருத்தலத்தில் குருபகவான், அம்பிகையின் நேரடிப்பார்வையில் இருக்கிறார். எனவே இங்கு அம்பிகையை வேண்டி வணங்கிட  நமக்கு நிச்சயம் குரு பார்வை கிடைக்கும். மேலும் குருவால் உண்டாகும் தோஷங்கள் நிவர்த்தியாகிறது என்பது ஐதீகம். நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது . எனவே இந்த கோயிலில் தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். இதனால்  இந்த தீர்த்தத்துக்கு – குளத்திற்கு அங்காரக தீர்த்தம் என்பது பெயர். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தாமதம் ஆகிறவர்கள் தொடர்ந்து இத்திருக்கோயில் வந்து வழிபட திருமணத் தடை நீங்குகிறது.மன பயம் உள்ளவர்களின் பயத்தையும் இந்த திருத்தல தரிசனம் நீக்குகிறது.

தாயாருக்கு ஸ்வர்ணாம்பிகை பெயர் வந்தது எப்படி ?

அகத்தியருக்கு சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தபோது, அம்பாள் திருமணக்கோலத்தில் தங்க நகைகள் அணிந்திருந்தாள். எனவே இந்த திருத்தலத்தில்  தாயாருக்கு , ‘ஸ்வர்ணாம்பிகை’ எனப் பெயர் வந்தது.

குபேர திசை நோக்கும் ஐஸ்வர்ய வீரபத்திரர்:

அகஸ்தீஸ்வரர் கோயிலின் தென்புற வாசல் எதிரேயுள்ள தனிக்கோயிலில் காட்சி தருகிறார் வீரபத்திரர்.
கோரைப்பல்லுடன் இடது கையில் தண்டம் ஏந்திய இவரது அருகில் வணங்கிய கோலத்தில் தட்சன் இருக்கிறான். முன்மண்டபத்தில் பத்திரகாளி சன்னதி உள்ளது. பவுர்ணமி தோறும் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவர் சிவ அம்சம் என்பதால், சிவராத்திரியன்று இரவில் ஒரு காலமும், பிரதோஷ வேளையிலும் சிறப்பு பூஜை நடக்கிறது.
இந்த திருக்கோயிலில் வீரபத்திரர், குபேர திசையான வடக்கு நோக்கியிருப்பதால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க இவரிடம் வேண்டிக்கொள்வது  என்பது ஐதீகம்.  செல்வம் தரும் வீரபத்திரர் என்பதால் , ‘ ஐஸ்வர்ய வீரபத்திரர்' என்பது இவரது திருப்பெயரானது .

 அகத்தியருக்கு சிவன், தான் கொடுத்த வாக்கின்படி  ஒரு ஆடி மாத செவ்வாய்க் கிழமையன்று திருமண கோலத்தில்  காட்சி தந்ததாக ஐதீகம். எனவே இங்கு ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

தீர்த்தக் கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். அருகில் வடக்கு நோக்கி வலம்புரி விநாயகர் இருக்கும் இந்த திருக்கோயிலை, செவ்வாய்க்கிழமை கோயில் என்றே  அழைக்கிறார்கள். ஆடியில் நாம் நாடி தேடி செல்ல வேண்டிய திருக்கோயில் ஸ்வர்ணாம்பிகை உடனுறை அகஸ்தீஸ்வரர் திருக்கோயில். அங்காரகன் அருள் பெறுவோம்.

ஆடி மாத ராசி பலன் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக்  செய்யுங்கள்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close