சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் தேரோட்டம், ஆடித்தபசு திருவிழா

  இரமேஷ்   | Last Modified : 25 Jul, 2018 04:01 pm
sankarankovil-shree-komathi-amman-therottam

ஹரியும் அரனும் ஒன்றே என உலகுக்கு உணர்த்த விரும்பிய கோமதியம்மன் இறைவனை வேண்டி ஒற்றைக் காலில் தவமிருந்தாள். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார். இந்த வைபவமே ஆடித்தபசு திருவிழாவாக ஆண்டுதோறும் சங்கரன் கோவிலில் கொண்டாடப்படுகிறது. இம்மாதம் வருகிற 27ம் தேதியன்று சங்கரன் கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொண்டாடப்படுகிறது.

சங்கன் மற்றும் பதுமன் எனும் நாக அரசர்களுக்குள் சிவனே பெரியவர், திருமால் பெரியவர் என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடவே நாகராஜாக்களும் அதனுள்ளேயே இருந்தனர்.

பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். தகவல், பாண்டிய மன்னனுக்கு சென்றது. லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோயில் எழுப்பினான். அந்த கோவில்தான் சங்கரன்கோவில். ஹரியும் சிவனும் ஒன்றே என்று மக்களுக்கு உணர்த்த அம்மன் தவமிருந்த தலம் சங்கரன் கோவில். ஆடி பவுர்ணமி உத்திராட நட்சத்திர தினத்தில் ஸ்ரீசங்கரநாராயண தரிசனம் அன்னை கோமதிக்கு கிடைத்தது. இதை உணர்த்தும் விதமாக இங்கே ஆடித்தபசு பிரம்மோற்சவம் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடி தபசுக்கான கொடியேற்றம் , ஆடி பவுர்ணமிக்கு 10 நாட்களுக்கு முன் சதுர்த்தி திதியில் பூரம் நட்சத்திர தினத்தில் காலை வேளையில் கோமதி அம்மன் சந்நிதி முன்பாக அமைந்துள்ள தங்கக்கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யபடுகிறது.

ஒரு கால் ஊன்றி தவம் கோமதி அம்பாள் தபசுகோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள். தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் அம்பாளுக்குக் காட்சி தருகிறார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார். அம்மனுக்கு காட்சி தரும் இறைவன் ஆடி பவுர்ணமி தினத்தில் மாலையில் உத்திராட நட்சத்திர வேளையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசங்கர நாராயண மூர்த்தியாக , தபசு கோலத்தில் உள்ள அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார். பின் இரவு வேளையில் வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுக்கு ஸ்ரீசங்கரலிங்க சுவாமியாக காட்சியளிக்கிறார். இது ஸ்ரீகோமதி அம்பாளுக்கான மிக முக்கியமான விழா, இதுவே சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் சிறப்பு.

இன்று கலை தேரோட்டம் நடைபெற்றது. 27.7.2018 ஆடி 11ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஸ்ரீ சங்கரநாராயணர் காட்சியும், இரவு 9 மணிக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி காட்சி நடைபெற்று சுவாமி அம்பாள் திருக்கோயில் அடைந்து இரவு 11 மணிக்குள் கோவில் நடை சாத்தப்படுகிறது. ஆடித்தபசு அன்று இரவு 12 மணி முதல் அதிகாலை 3.50 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுவதால் இந்த வருட தபசு காட்சிகள் முன்னதாகவே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close