உலகை காக்கும் நாயகிக்கு வளைகாப்பு - ஆடிப்பூர திருவிழா

  கோமதி   | Last Modified : 13 Aug, 2018 08:41 am
baby-shower-for-the-mother-of-the-world-a-festival-of-adipura

ஆடிப்பூரம் – 13.08.2018 

ஆடி மாத விசேஷங்களில் ஒன்று ஆடிப்பூர திருநாள். இந்த திருவிழா ,சைவம் மற்றும் வைணவ திருத்தலங்கள் இரண்டிலும் மிக விசேஷமாக கொண்டாடப்படும் விழாவாகும். ஆடிப்பூரம் அம்மனின் அவதாரத் திருநாளாகும்.பெண்மை நிறைவடைவது தாய்மையிலே என்றொரு சொல் வழக்கு உண்டு.இந்த உலக மக்கள் எல்லோருமே அந்த ஆதிசக்தி தேவியின் குழந்தைகள் தானே. எனவே உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு இந்த நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது.  இன்றைய தினத்தில் எல்லா கோவில்களிலும் அம்மனுக்கு வளையல் சாற்றுவார்கள். மேலும் அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பும் கோலாகலமாக  நடத்துவார்கள். அன்னைக்கு வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

திருமணத் தடை உள்ள கன்னிப்பெண்களும், குழந்தைச் செல்வம் வேண்டுவோரும்,இந்த வளையல் சாற்று விழாவில் கலந்து கொண்டு பிரசாதமாக கொடுக்கப்படும் வளையலை அணிந்துக் கொண்டால்,அவர்களின் வேண்டுதல் பலிக்கும் என்பது நம்பிக்கை. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா ‘முளைக்கொட்டு விழா’ என்ற பெயரில் மிகச் சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. குழந்தை பேற்றுகான பரிகார தலமாக கருதப்படும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மனுக்கும் ருது சாந்தி விழா நடைபெறும். விழாவின் போது பெண்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, அதனை அர்ச்சித்து பிரசாதமாக பெற்றுக் கொள்வார்கள்.
    
பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாக பச்சை பயிறை தண்ணீரில் நனைய வைத்து,ஆடிப்பூரத்தன்று நன்கு முளைக்கட்டியுள்ள பயிறை குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து விட்டு நம்பிக்கையோடு சாப்பிட்டால் வாரிசு உருவாகும் என்பது செட்டிநாட்டு நகரத்தார் மக்களின் நம்பிக்கை. 

வைணவக் கோவில்களில் ஆடிப் பூர திருவிழா

ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். துளசி பிருந்தாவனத்தில், அவதரித்த ஆண்டாளின் இயற்பெயர் கோதை என்பதாகும்
இந்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்றுவருவது மிகவும் நன்மை தருவதாகும். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய மலர் மாலையை தானே சூடிக் கொண்டு அழகு பார்த்து, தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து சூடிக் கொடுத்த சுடர்க்கொடியானாள் ஆண்டாள். ஆடிப்பூர திருநாளில் ஆண்டாளை தரிசிப்பவர்கள் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்.
இந்த நாளில் அம்மன் கொலுவீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அன்னைக்கு வளையல் சாற்றி அவள் அருள் பெறுவோம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close