ஆயிரம் கரங்களுடைய ஞாயிறைப் போற்றும் ஆவணி ஞயிற்றுக்கிழமை விரதம்

  கோமதி   | Last Modified : 14 Sep, 2018 03:32 pm

fasting-that-glorifies-avani-month-s-sunday

தமிழ் மாதங்கள் அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தது.அனைத்து மாதங்களிலும் விரதம்,வழிபாடு செய்வதற்கு  உகந்த நாட்களும் கிழமைகளும் உள்ளன. ஆடி வெள்ளி, புரட்டாசி சனி, கார்த்திகை சோமவாரம் வரிசையில் ஆவணி ஞாயிறும் குறிப்பிடத்தக்க விரத நாளாகும்.ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுக்கலாம்.அதிலும் ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு,காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். தேக ஆரோக்கியத்திற்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து தொடங்குவது மிகவும் விசேஷம் என சொல்லப்படுகிறது.

இதற்கு காரணம் ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு என்பதால், நமக்கு ஆத்மபலத்தைத் தருகிறார் சூரியன்.  இதனை சிறப்பிக்க தான் ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். குரு‌ஷேத்திர போரில், மனம் சஞ்சலப்பட்டு  இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க,கீதையை உபதேசம் செய்த  கிருஷ்ணர், இம்மாதத்தில் தான் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே ஞாயிறுக்கிழமை விரதம் வழக்கப்படுத்தப்பட்டது.

தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொண்டு, சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெற்றால்,குறையொன்றும் இல்லாத வாழ்க்கை தான். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில்ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட எதிரிகளை வெல்லும் மன திடத்தை தருவார் ஆதித்யன்.

அகத்தியரின் வழிகாட்டுதலின்படி, ராமர் ஆதித்ய ஹிருதயம் என்ற அற்புதமான மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ததால் தான் எளிதில் ராவணனை வென்றார் என்கின்றன புராணங்கள். ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரிய பகவானை  முறைப்படி சூரிய நமஷ்காரம் செய்து வணங்கினால்,சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம் என்பது நம்பிக்கை. 

ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்ய முடியாவிட்டாலும்,காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி “ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமோ சதா” எ ன்று கூறி மூன்று முறை வணங்கினாலே போதும், தன்னுடைய ஆயிரம் பொற்கரங்களால் ஆயிரம் பலன்களை அள்ளித்தருவான் ஆதவன்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.