முன்னோர் கடன் தீர்க்கும் பரணி மகாளயம்

  கோமதி   | Last Modified : 28 Sep, 2018 03:42 pm

barani-mahaalayam-our-duty-to-our-fore-fathers

இந்து தர்மத்தில் மகாளயபட்சம் எனப்படுவது, 15 நாள் முன்னோர் விரத காலம். இதன் முக்கிய நாளான பரணி மகாளயம் இன்று. இந்த நாள் பித்ரு கடன் தொடர்பானது  என்பதால், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம் உள்ளிட்ட கடற்கரைத் தலங்களுக்கும், காசி, ஸ்ரீரங்கம் (அம்மா படித்துறை), பாபநாசம் (நெல்லை) ஆகிய நதிக்கரை தலங்களுக்கும் சென்று, முன்னோர்களுக்கான காரியங்களைச் செய்து, அங்குள்ள இறைவனையும் வழிபட்டு வருவது முக்கியம்.

சிக்கல்கள் தீர்க்கும் பித்ரு கடன் 

முக்கிய விஷயங்களைத் துவங்கியதுமே தடங்கல் வந்து விடும். குறிப்பாக, திருமணம், தொழில் சார்ந்த விஷயங்களில் சிரமங்கள்,.  வறுமை ,நோய் நொடி,மன நிம்மதியின்மை  இப்படி பல துன்பங்களுக்கு காரணம், இவர்கள் குடும்பத்துக்கு முன்னோர் சாபம் இருப்பது தான். முன்னோர் ஆத்மாக்கள் அமையடைந்தால் இந்த துன்பங்கள் தீரும் என்பது ஐதீகம். பித்ரு கடன்  தீர அன்னதானமும், பசுக்களைப் பராமரித்தலும் மிகப்பெரிய கைங்கர்யம்.இந்த நாளில், சத் சங்கம் ஏற்பாடு செய்து  பகவத் கீதையின் மூன்றாவது அத்தியாயமான கர்மயோகத்தை விவரம் அறிந்தவர்களைக் கொண்டு, பொருள் விளக்கத்துடன் பாராயணம் செய்ய வைப்பது, சிறந்த கைங்கர்யம். இதனால், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் அதைக் கேட்பவர்களின் முன்னோர் பலனடைவர்.

சத்சங்கத்தால் ஏற்பட்ட பலன் :

ஜடன் என்பவன், தீய  பழக்க வழக்கங்களை கொண்டிருந்தான்.அதிக பாபங்களால் செல்வங்களை இழந்தான். பொருள் சம்பாதிக்க வெளியூர் சென்று  திரும்பிய போது, ஒரு மரத்தடியில் தங்கினான். அங்கு வந்த திருடர்கள் அவனைக் கொன்று, பொருளுடன் ஓடி விட்டனர். அவன் செய்த பாவங்களால் நரகத்தை அடைந்தான்.அங்கே அவனுக்கு முன்பே இறந்து போன, அவனது அண்ணனைக் கண்டான். அவனும், பூமியில் வாழ்ந்த காலத்தில் பாவச் செயல்கள் புரிந்தவன். இருவருமாய் தங்கள் செயல்களுக்காக வருத்தப்பட்டபடியே நரகத்தில் தரப்பட்ட வேதனைகளை அனுபவித்தனர்.

ஜடனுக்கு ஒரு மகன் உண்டு; அவன் மிகவும் நல்லவன். தினமும் பகவத்கீதை பாராயணம் செய்பவன். வெளியூர் சென்ற தன் தந்தை, கொள்ளையர்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தியை அறிந்து, அவருக்குரிய கர்மானுஷ்டங்களைச் செய்வதற்காக காசிக்கு கிளம்பினான். செல்லும் வழியில், தந்தை கொல்லப்பட்ட அதே மரத்தடியில் தங்கினான். அங்கிருந்த படியே, கீதையின் மூன்றாவது அத்தியாயத்தை பாராயணம் செய்தான்.அப்போது ஜடனின் ஆவி பேசியது... "மகனே... உன் கீதை பாராயணத்தால் நான் நற்கதி பெற்று விட்டேன். இனி, நீ காசிக்கு செல்ல வேண்டிய அவசியம் கூட கிடையாது. வீடு திரும்பி, உன் பெரியப்பா மற்றும் நரகத்தில் கஷ்டப்படும் முன்னோர்களுக்காக, இந்த அத்தியாயத்தைப் பாராயணம் செய். அவர்களும் நற்கதி அடையட்டும்...' என்றான். ஜடனின் மகனும் அவ்வாறே செய்து, தன் முன்னோர்கள் அனைவரையும் கடைத்தேற்றினான்.

முன்னோர்கள் செய்த பாவம், நம் தலைமுறைகளையும் தொடராத வண்ணம், பரணி மகாளயத்தன்று பித்ரு கடன் தீர்த்து வாழ்வில் நிம்மதியுடன் நலம் பெற வாழ்வோம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.