நவராத்திரி ஸ்பெஷல் கவலைகள் தீர்க்கும் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன்

  கோமதி   | Last Modified : 09 Oct, 2018 02:06 pm

navratri-special-kulasekaran-pattinam-mutharamanan-to-solve-the-concerns

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக ,தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்  ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது, குலசை தசரா விழா உலக பிரசித்தி பெற்றது. குலசை தசரா திருவிழாவின் போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.தூத்துகுடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா விழா மாபெரும் ஆன்மிகத் திருவிழா. இத்திருவிழா நடைபெறும் முத்தாரம்மன் திருக்கோயில் பற்றி இந்தப் பதிவில் அறிந்து கொள்வோம். இறைவனும் இறைவியும் தங்கள் உருவத்தைச் சிற்பிக்கு அடையாளம் காட்டிட, அதை அப்படியே சிலையாக வடித்து பிரதிஷ்டை செய்த அற்புதம் நடந்த திருத்தலம் இது.

திருச்செந்தூர் - கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் 12-வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது குலசேகரன் பட்டினம். பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகரப் பாண்டியனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருளாசி செய்தது இந்த  இடம்  என்பதால் , குலசேகரப் பாண்டிய மன்னன் பெயராலேயே குலசேகரன் பட்டினம் என்ற பெயர் பெற்றது. 

கனவில் தரிசனம் தந்த அன்னை

முத்தாரம்மன் திருக்கோயில் கருவறையில் முத்தாரம்மனின் திருவடியில், சுயம்புவாய்த் தோன்றிய சிறிய அம்மன் சிலைகள் தான் முன்பு வழிபாட்டில் இருந்தது. சுயம்பு வடிவ சிலைகள் மிகவும் சிறிய அளவில் இருந்ததால் இதைப் பெரிய சிலையாக வடிப்பது எப்படியென்று பக்தர்கள் குழம்பினர்.அப்போது ஒருநாள், கோயில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், ‘மகனே... எங்களது உருவத்தைப் பெரிதாக வடிக்கத் தெரிந்த சிற்பி மைலாடியில் இருக்கிறான். அவனைப் போய் பார் ’ என்று சொல்லி மறைந்தாள்.அதே இரவில், குமரி மாவட்டம் மைலாடியைச் சேர்ந்த சுப்பையா சிற்பியின் கனவில் ஞானமூர்த்தி சுவாமியுடன் காட்சி கொடுத்த முத்தாரம்மன், ‘மகனே.. எங்களின் தோற்றத்தை உற்று நோக்கு. எங்களின் இந்த வடிவத்தை ஒரே கல்லில், ஒரே பீடத்தில் வடித்துக் கொடு. சிலையைப் பெற்றுச் செல்ல குலசேகரன் பட்டினத்திலிருந்து பக்தர்கள் வருவார்கள்’ என்று சொல்லி மறைந்தாள். இப்படி தனது திருவுருவ தரிசனம் கொடுத்து அந்த திருவுருவமே இன்றைக்கு சிலையாக மாறி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள் அன்னை .

ஒரே பீடத்தில் அம்மன் - சுவாமி

அம்மனே காட்சி கொடுத்து, தனது வடிவத்தைச் சிலையாக வடித்துக் கொடுக்கச் சொன்னதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய சுப்பையா சிற்பி, பொழுது விடிந்ததுமே சிலையை வடிக்கத் தொடங்கினார். கனவில் கண்ட காட்சியைக் கண்முன்னே நிறுத்தி முத்தாரம்மன் - ஞானமூர்த்தி சுவாமி சிலைகளை ஒரே கல்லில் ஒரே பீடத்தில் தத்ரூபமாய் வடித்து முடித்தார் சிற்பி.அந்த நேரத்தில், அம்மன் கொடுத்த வாக்குப்படி குலசை பக்தர்களை அழைத்துக்கொண்டு மைலாடி வந்து சேர்ந்த முத்தாரம்மன் கோயில் அர்ச்சகர், சிற்பியின் வீட்டில் ஞானமூர்த்தீஸ்வரருடன் சேர்ந்த முத்தாரம்மன் சிலை தயாராய் இருந்தது கண்டு வியந்தார். ஊர்மக்களும் மெய்சிலிர்த்துப்போனார்கள். அங்கிருந்து மேளதாளம் முழங்க சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று முத்தாரம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்து கோயிலும் எழுப்பினார்கள் குலசை மக்கள். அப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைதான்  இன்றைக்கு கருவறையில் பிரதான வழிபாட்டில் உள்ளது.

அஷ்ட காளிகளின் ஆட்சி

குலசேகரன் பட்டினத்தில் எட்டுத்திக்கும் அஷ்ட காளிகளின் ஆட்சி நடக்கிறது.. அஷ்ட காளிக்கும் (எட்டு காளிகள்) ஆலயங்கள் உள்ளது. 1) வீரகாளியம்மன் 2) பத்ரகாளியம்மன் 3) கருங்காளியம்மன் 4) முப்புடாரி அம்மன் 5) முத்தாரம்மன் 6) உச்சினிமாகாளியம்மன் 7) முன்றுமுகம் கொண்ட அம்மன் 8) வண்டி மறித்த அம்மன் என்று அஷ்டகாளிகளுக்கும் ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்த அஷ்டகாளிகளில் முதன்மையானவர் முத்தாரம்மனாகும். முத்தாரம்மனைத் தரிசித்து வர நம்முடைய நஷ்டங்கள், கஷ்டங்கள்,  தரித்திரங்கள் தீர்ந்து நலம் பல பெற்றிடலாம்.

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close