நவராத்திரி ஸ்பெஷல் - மக்கள் வெள்ளத்தில் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா

  கோமதி   | Last Modified : 09 Oct, 2018 02:07 pm
navarathri-special-dussehra-festival-in-kulasekharanpattinam-amidst-of-people-flooding

நாடு முழுவதும்  நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றது. தமிழகத்தில்  தூத்துகுடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நவராத்திரி திருவிழா படு கோலாகலாமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் பல இலட்சக்கணக்கான மக்கள் பெருமளவில் கூடிக் கொண்டாடும் விழா இது.

தசரா திருவிழாவின் போது குலசை முத்தாரம்மனுக்கு  வேண்டுதல் வைத்து 41 நாள்கள் விரதம் இருக்கிறார்கள். புரட்டாசி மாதம் அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமை திதியில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்குகிறது. கொடியேற்ற நாளுக்கு முந்தைய இரவில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரத் தேவதைகளுக்குக் காப்புக் கட்டப்படுகிறது. முதல் நாளில் அம்பாள் துர்க்கை திருக்கோலத்திலும் மூன்றாம் நாள் பார்வதி திருக்கோலத்திலும், நான்காம் நாள் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், ஐந்தாம் நாள் நவநீதிகிருட்டிணர் திருக்கோலத்திலும், ஆறாம் நாள் மகிசாசுர மர்த்தினி திருக்கோலத்திலும், ஏழாம் நாள் ஆனந்த நடராசர் திருக்கோலத்திலும், எட்டாம் நாள் அலைமகள் திருக்கோலத்திலும் ஒன்பதாம் நாள் கலைமகள் திருக்கோலத்திலும் வீதியுலா வருகின்றாள். தசராத் திருவிழாவில் ஒவ்வொரு திருக்கோலத்தில் அம்பாளைத் தரிசிப்பதால் பல்வேறு பயன்கள் கிடைக்கிறது.

வேடம் அணிவதிலேயே அதிகப்படியாக விரதம் இருக்க வேண்டியது காளியம்மன் வேடத்துக்குத்தான். இதற்காக நாற்பது நாட்கள் ஒரே நேரத்து சாப்பாடுடன், மிக கடுமையான விரதம் இருப்பார்கள் பக்தர்கள். இதுதவிர விநாயகர், சிவன், கிருஷ்ணர், அம்மன், முருகன், சுடலைமாடன், போலீஸ், குரங்கு, கரடி, அசுரன் என பல வகையான வேடங்களை அணிந்து பக்தர்கள் விரதம் இருப்பார்கள். இதுபோன்ற வேடம் அணிபவர்கள், தசரா விழா தொடங்கியது முதல் 10 நாட்கள் விரதம் இருப்பார்கள்.இப்படி பக்தர்கள் மாறு வேடம் வேடமணிந்து  பொதுமக்களிடம் காணிக்கை பெற்று தசரா நாளில் முத்தாரம்மன் வாசலுக்கு வந்து நேர்ச்சை செலுத்துகிறார்கள்.

குலசையில் கொண்டாடப்படும் தசரா விழாவிற்குப் பின்னணியில் ஒரு புராணக் கதை உள்ளது. முன்னொரு காலத்தில் வரமுனி என்றொரு முனிவன் இருந்தான். அவன் தவ வலிமை மிக்கவன். அதே நேரம் அளவுக்கு மீறிய அகந்தையோடு இருந்தான்.ஒரு நாள் அவனது இருப்பிடம் வழியாக அகத்திய முனிவர் வந்தார். தன்னுடைய ஆணவத் திமிரால் அகத்திய முனிவரை மதிக்கத் தவறியதோடு மட்டுமின்றி அவமரியாதையும் செய்தான். இந்த அவமதிப்பால் மனம் மனம் நொந்த அகத்தியர் , வரமுனியைப் பார்த்து  " எருமைத்தலையும் மனித உடலும் பெற்று அழிவாயாக " என் சாபமிட்டார்.

அகத்திய மாமுனிவரின் சாபத்தால் ,வரமுனி எருமைத்தலையும் மனித உடலும் பெற்றான். இருந்த போதிலும்  தொடர்ந்து  விடாமுயற்சியால் மீண்டும் கடுந்தவத்தைத் தொடர்ந்து பலப்பல வரங்களைப் பெற்றான். வரங்களைப் பெற்ற வரமுனி மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தினான். வரமுனி தர்மத்தை மறந்து தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல்வேறு இடையூறுகளைச் செய்ய துவங்கினான். முனிவராக வாழ்வைத் தொடங்கிய அவன், தன் வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினான். அவன் மகிசாசுரன் ஆனான் -  "மகிசம்" என்றால் எருமை என்று பொருள். " மகிசாசுரன்" என்றால் எருமைத்தலையுடைய அசுரன் என்று பொருள்.

மகிசாசுரனின் இடையூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் வேள்வி நடத்திக் கடும் தவம் புரிந்து மகிசாசுரனின் இடையூறுகளை நீக்கித் தர அன்னையிடம்  வேண்டினர். மாமுனிவர்களின் கடுந்தவத்தைக் கண்டு உளம் இரங்கினாள் அன்னை. மாமுனிவர்களின் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராது மாய அரண் ஒன்றை அன்னை உருவாக்கினாள். மாமுனிவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து தங்கள் வேள்வியை முறைப்படி தொடர்ந்தனர். அவர்கள் நடத்திய வேள்வியால் ஒரு பெண் குழந்தை தோன்றியது அது லலிதாம்பிகை என அழைக்கப்பட்டது. அந்தப் பெண் குழந்தை 9 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து 10 ஆம் நாள் அன்னைப் பரசக்தியின் மறுவடிவாக லலிதாம்பிகை என்ற பெயரில் மகிசாசுரனை அழிக்கப் புறப்பட்டாள். இப்படி மகிசாசுரனை அழித்த 10 ஆம் நாள் தசரா என்றழைக்கப்படுகிறது.அன்னைப் பராசக்தியாக வேள்வியில் வளர்ந்த ஒன்பது நாட்களும் நவராத்திரி என்றழைக்கப்படுகிறது.

நவராத்திரி விழாவின் முதல் நாள் முத்தாரம்மன் துர்க்கையாகவும், இரண்டாம் நாள் விஸ்வகர்மேஸ்வரராகவும், மூன்றாம் நாள் பார்வதிதேவியாகவும், நான்காம் நாள் பாலசுப்பிரமணியராகவும், ஐந்தாம் நாள் கிருஷ்ணராகவும், ஆறாம் நாள் மகிஷாசுரமர்த்தினியாகவும், ஏழாம் நாள் நடராஜராகவும், எட்டாம் நாள் மகாலட்சுமியாகவும், ஒன்பதாம் நாள் சரஸ்வதியாகவும் காட்சி தந்து வீதி உலா வருவாள் அன்னை.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close