நவராத்திரி ஸ்பெஷல் - கொலு மேடையும் ,பொம்மைகளும் – தாத்பரியம் என்ன?

  கோமதி   | Last Modified : 09 Oct, 2018 02:08 pm
navarathiri-special-kolu-and-the-toys-logic-behind-that

நவராத்திரியின் சிறப்பே பல விதமான, மண்ணாலான பொம்மைகளை வைத்து கொலு வைப்பது தான். அவரவர் வசதிப்படி முப்பெரும் தேவியை குறிக்கும் விதமாக  மூன்று படிகளோ,அல்லது சக்தியின் சக்கரத்தை குறிக்கும் விதமாக  ஐந்து படிகளாகவோ. சப்தமாதர்களை குறிக்கும் ஏழு படிகளோ, நவகிரகங்களை குறிக்கும் ஒன்பது படிகளாகவோ வைக்கலாம். 

கொலு வைப்பதற்கு முன் கொலு மேடைக்கு பூஜை செய்வது முக்கியம். ஒரு நூல் சுற்றிய கும்பத்தில்,பச்சை அரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜை செய்ய வேண்டும்.கொலு படிகளுக்கான தாத்பரியத்தை நாம் அறியும் போது,அதில் மிகப் பெரிய வாழ்வியல் அர்த்தத்தை நம்மால் உணர முடியும். புல்லாய், புழுவாய் பிறந்து, மனிதனாகப் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற உண்மையை உணர்த்தவே, நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.

பொதுவாக கொலுப் படிகளில் பொம்மைகளை அடுக்கும் போது, கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை கொலுப்படியில் வைத்த பிறகு தான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பராசக்தி தேவியே சொல்லி இருப்பதாக தேவி பாகவதம் சொல்கிறது.

முதல் படி, அதாவது கீழ் படியில் – ஓரறிவு உடைய உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்.

இரண்டாம் படியில் – இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள்.

மூன்றாம் படியில் - மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள்.

நான்காவது படியில் - நான்கு அறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்.

ஐந்தாம் படியில் – ஐந்து அறிவு கொண்ட நான்குகால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள்.

ஆறம் படியில் - ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள். 

ஏழாம் படியில் – சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள்.

எட்டாம் படியில் - தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள்.

ஒன்பதாம் படியில் – முதலில் விநாயகரை வைத்த பிறகு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்.இதில், சரஸ்வதி-லஷ்மிக்கும் நடுவில் அன்னை சக்திதேவி இருக்குமாறு வைக்க வேண்டும்.

கொலுவில் பொம்மைகள் வைக்கும் வழக்கம் எப்படி உருவானது ?

சுரதா என்ற அரசரிடம், அவரது எதிரிகள் வலிய போர் செய்ய வந்தார்கள். அவர்களிடம் போர் புரிந்து ஜெயிப்பது என்பது ஆகாத காரியம் என்பதை உணர்ந்த அரசர், தன் குருவான சுமதாவிடம் ஆலோசனை கேட்டார். காளியை வணங்கினால் எதிரிகள் காணாமல் போவார்கள் என்று குருதேவர் அறிவுறித்தினார்.அதன்படி காளிதேவியை மண்ணால் சிலைசெய்து வழிப்பட்டார் மன்னர் சுரதா.காளிதேவி, அரசரின் தவத்தால் மகிழ்ந்து,மன்னருக்கு எதிரிகளை வெல்லும் சக்தியை அருளினாள். அத்துடன் “பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணில் என்னை வடிவமைத்து பூஜித்ததால், உனக்கு சகல நலங்களும், வளங்களும் கிடைக்கும்.” என்ற ஆசி வழங்கினாள் .இதுவே கொலுவில் மண்ணால் செய்யப்படும் பொம்மைகள் இடம் பெற காரணமாகும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close