நவராத்திரி ஸ்பெஷல் - சிவ தாண்டவங்கள் நிறைந்த நவராத்திரி

  கோமதி   | Last Modified : 09 Oct, 2018 02:08 pm
navarathri-special-shiva-tandavas-in-navaratri

அன்னை ஆதிசக்தி மகிஷாசுரமர்த்தினிக்கு தொடர்ந்து ஒன்பது நாட்கள்  பூஜை செய்து வழிபடும் தெய்வீகத் திருவிழா நவராத்திரி.ஆன்மீகம் மணக்கும் இந்த நவராத்திரியில் சிவ தாண்டவங்கள் நடக்கின்றன.உலகை ஆளும் எம்பெருமான் ஈசனின் ஆடல்களே சிவதாண்டவம்.  நவராத்திரி ஒன்பது நாட்களிலும் எம்பெருமான் ஈசன் ஒன்பது வகையாக ஆடுகிறார். சிவபெருமானின் ஆட்டத்தின்போது வரையப்படும் கோலங்களிலிருந்து ஒவ்வொரு தேவியாக வெவ்வேறு பெயருடன் நவதுர்க்கையாக வெளிப்படுகிறாள் அம்பிகை.சிவபெருமானின் ஒன்பது வகை தாண்டவங்களையும், சிவதாண்டவம் மூலம் எழுந்தருளும் நவ தேவியர் பற்றி இந்தப் பதிவில் அறியலாம்.

முதல் நாள்:  சைலபுத்ரி

ஆனந்த தாண்டவம். வலது காலைத் தரையில் ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் கோலம். இதில் வரையப்பட்ட கோலம் ரிஷி மண்டல கோலம். இந்த கோலத்தில் இருந்து  எழுத்துகள் வெளிப்பட்டன. நவதுர்க்கைகளில் சைலபுத்ரி அல்லது சைலஜா என்ற தேவி முதல் நாளுக்குரிய தேவியாகிறாள்.

இரண்டாம் நாள்:கூஷ்மாண்டாதேவி

ஸந்தியா தாண்டவம். பகலும் மாலையும் கூடும்வேளையில் இடதுகால் விரலால் பரமசிவன் இடும் கோலத்தின் பெயர் ஸப்த ஒலிக்கோலம். இக்கோலத்திலிருந்து வெளிப்பட்ட கூஷ்மாண்டாதேவி இரண்டாம் நாள் வழிபாட்டுக்குரியவள்.

மூன்றாம் நாள்: ப்ரம்மச்சாரிணி

திரிபுரதாண்டவம். பரமேஸ்வரன் இடது கால் பெருவிரலால் வரைந்த கோலம் அஷ்டவசுக் கோலம். இந்த மூன்றாம் நாளுக்குரிய தேவி ப்ரம்மச்சாரிணி என்ற பெயருடன் விளங்குகிறாள்.

நான்காம் நாள்: சந்த்ரகண்டா தேவி

ஊர்த்துவ தாண்டவம். ஈஸ்வரன் திருவாலங்காடு என்ற இடத்தில் தனக் குச்சரியாக ஆடிய காளியை இந்தத் தாண்டவத்தின் மூலம்தான் தோற்கச் செய்தார். ஒரு காலைத் தரையில் ஊன்றி மற்றொரு காலை தோளுக்கு இணையாக உயர்த்தி ஆடும் நடனம். இந்த ஆட்டத்தில் வரையப்பட்ட பிரணவ ஒலிக் கோலத்திலிருந்து தோன்றிய சந்த்ரகண்டா தேவி நான்காம் நாளுக்குரிய தேவியாவாள்.

ஐந்தாம் நாள்:  ஸ்கந்தமாதா தேவி

புஜங்க தாண்டவம். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற தேவர்களும் அசுரர்களும் முயற்சித்தபோது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதன் வீரியத்தை தேவர்களால் தாங்கமுடியாமல் தவித்திருந்த நிலையில் ஈசன் அக்கொடிய நஞ்சை விழுங்கி நீலகண்டன், நஞ்சுண்டேஸ்வரன் என்ற பெயர்களைப் பெற்றார். அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் எனப்படும். ஈசன் புஜங்க தாண்டவக் கோலம் வரைந்தார். இதிலிருந்து ஸ்கந்தமாதா என்ற பெயருள்ள தேவி ஐந்தாவது நாளுக்குரிய தேவியாவாள்.

ஆறாவது நாள்: காத்யாயனி தேவி

சிறந்த சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசித்தபோது, அதற்கேற்ப சிவன் ஆடி முனிவரை மகிழ்வுறச் செய்தார். அதனால் இதற்கு முனி தாண்டவமென்ற பெயர் ஏற்பட்டது. சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட முனி தாண்டவக் கோலத்திலிருந்து தோன்றிய காத்யாயனி தேவி ஆறாவது நாளின் தேவியானாள்.

ஏழாவது நாள்: காலராத்ரி தேவி

பூத தாண்டவம். பரமேஸ்வரன் யானை உருவில் வந்த அசுரனைக் கொன்று, அந்த யானைத் தோலைப் போர்த்திய உடலுடன், கைகளில் பல வகை ஆயுதங்களை ஏந்தி பூத தாண்டவக் கோலம் வரைந்தபடி ஆடுகிறார். இந்தக் கோலத்தில் உருவான தேவி ஏழாவது நாளுக்குரிய காலராத்ரி தேவி எனப்படுகிறாள்.

எட்டாவது நாள்:  மஹாகௌரி தேவி

தண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர்கள், அசுரர்களினால் அல்லல் அடைந்து சிவனை வேண்ட, பரமசிவன் தீய சக்திகளை அழித்து ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவம் எனப்படும். இந்தக் கோலத்திலிருந்து உருவான தேவி மஹாகௌரி என்ற பெயர் கொண்டவள். நவராத்திரியின் எட்டாவது நாளில் வழிபட வேண்டிய தேவியாவாள்.

ஒன்பதாம் நாள்: சித்திதாத்திரி தேவி

நவரசங்களையும் மிக அழகாக வெளிப்படுத்திய நவரசக் கோலத்திலிருந்து, சிருங்காரத் தாண்டவம் ஆடிசிவன் மகிழ சித்திதாத்திரி என்ற தேவி தோன்றினாள். இவளே ஒன்பதாம் நாள் வழிபாட்டுக்குரிய தேவியாவாள். 

அன்னையை பூஜிக்கும் நவராத்திரி காலத்தில் நவ தேவியர் தரிசனம்  நம் வாழ்வில் பெருமகிழ்ச்சியை நிலைத்திட உதவும் சக்தி வாய்ந்தது என நம்பப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close