நவராத்திரி ஸ்பெஷல் - ராமபிரான் அனுஷ்டித்த நவராத்திரி

  கோமதி   | Last Modified : 09 Oct, 2018 02:08 pm

navarathri-special-ramapiraan-navarathri

சீதையை ராவணன் கடத்திச் சென்ற பிறகு மிகுந்த துயரத்துடன் இருந்த ராம லட்சுமணனை திரிலோக சஞ்சாரியான நாரதர் சந்தித்தார். ஸ்ரீராமனின் முகவாட்டத்தைக் கண்ட நாரதர்,ராமனின் அவதார நோக்கத்தையும்,சீதையை அடையும் வழியையும் கூரினார்.  ''ரகுகுல திலகா! நீ வருத்தத்துடன் இருப்பதற்கான காரணத்தை நான் அறிவேன். திரிலோக சஞ்சாரியாக நான் சஞ்சரிக்கும் வழியில் சொர்க்கத்துக்கும் சென்று வந்தேன். அங்கே எனக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. அந்த விவரங்களை உன்னிடம் தெரிவிக்கவே வந்தேன்'' என்று கூறியவர் தொடர்ந்து ''மகாலட்சுமியின் அம்சமான சீதை முற்பிறவியில் ஒரு முனிவரின் மகளாக வேதவதி என்ற பெயரில் தோன்றியவள். தவத்தில் இருந்தவளைக் கண்டு மோகம் கொண்ட ராவணன், அவளை அடைய ஆசை கொண்டு அவளுடைய கையைப் பிடித்து இழுக்க முயற்சித்தான்.

கோபம் கொண்ட வேதவதி, 'நாராயணனை மணக்க தவம் புரியும் என்னைக் கண்டு மோகித்து, என் கையையும் பிடிக்கத் துணிந்த உன்னை நான் கொல்வதற்காக மறுபடியும் கர்ப்பவாசம் இல்லாமல் பூமியில் தோன்றுவேன்' என்று சாபம் கொடுத்துவிட்டு, அக்னியில் விழுந்து உயிரை  மாய்த்துக் கொண்டாள். அவள்தான் சீதையாக அவதரித்து இருக்கிறாள். தான் அழிவதற்காகவே ராவணன் சீதையைக் கடத்திச் சென்றிருக்கிறான். மகாவிஷ்ணுவின் அவதாரமான நீயும் ரகுவம்சத்தில் தோன்றி இருக்கிறாய். உன்னால் ராவணன் அழியப்போவது உறுதி என்று நினைத்து தேவலோகத்தில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்'' என்று கூறியவர், ''ராமச்சந்திரா! ராவணனை அழிப்பதற்கான வழியைச் சொல்கிறேன். நீ புரட்டாசி மாதம் வரும் நவராத்திரியில் விரதம் இருந்து, அம்பிகையை பூஜை செய்தால், அம்பிகை உனக்கு அளவற்ற சித்திகளைத் தருவாள். இந்திரனும், விஸ்வாமித்திரர் போன்ற மகரிஷிகளும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து அம்பிகையை வழிபட்டு பலன் அடைந்திருக்கின்றனர். எனவே நீயும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பாய்'' என்று கூறி விரதம் அனுஷ்டிக்கும் முறைகள் பற்றியும் கூறினார். 

நாரதர் கூறியபடியே நவராத்திரி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மால்யவான் மலையில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராமர் பிரதமை முதல் விரதம் இருந்து பூஜைகளை நடத்தினார். எட்டாவது நாள் அஷ்டமி தினத்தில் நள்ளிரவு வேளையில் மால்யவான் மலையின் உச்சியில் அம்பிகை சிம்ம வாகனத்தில் தோன்றி ராமருக்கு தரிசனம் தந்தாள். ராமனின் பூர்வ அவதாரங்களை உணர்த்தியதுடன், ராவணனை சம்ஹாரம்  செய்ய அருள் புரிந்து மறைந்தாள்.

நம் வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களையும் நீக்க வல்லது நவராத்திரி விரதம். இந்த ஒன்பது நாட்களும் ஆன்றோரின் வழிகாட்டுதலோடு அம்பிகையை வணங்கி நலம் பெறுவோம்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.