மஹாளயபட்சத்தில் பித்ரு கடன் தீர்ப்போம் - உலகிற்கு வழிகாட்டும் இந்து தர்மம்

  கோமதி   | Last Modified : 06 Oct, 2018 06:22 pm
let-us-c-our-ancestors-on-mahalaya-patcham-the-hindu-dharma-that-guides-the-world

நாம் வாழும் வாழ்க்கையானது பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகளை அள்ளி வழங்கி வருகிறது. நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் இன்பம் துன்பம் இரண்டுக்கும் அடிப்படையாக உள்ளது கர்ம வினைகள் மட்டுமே. கர்ம வினைகளில் பித்ரு கடன் எனப்படும் முன்னோர் கடன் முக்கியமானது. இயற்கை எய்திய முன்னோர்களின் ஆத்மா மகிழ்வாய் நமக்குத் தொடர்ந்து ஆசீர்வாதம் வழங்கிட நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கர்ம வினைகளை தவறாது செய்ய வேண்டும். இதற்கான கால கட்டமே மஹாளயபட்சம்.

சூரியன் கன்யா ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மஹாளயம் என்று பெயர்.

ஆத்மாக்களுக்கு மரியாதை செய்யும் மஹாளயபட்ச புண்ணிய காலம் 

'ஆத்மா வை புத்ர நாம ஆஸீத்’ என்கிறது வேதம். இந்த வாக்கியம், நமக்கும் நம் முன்னோர்களுக்குமான தொடர்பைத் தெளிவுற விளக்குகிறது. நம் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்றாலும், அடுத்து வேறு பிறவி எடுத்தாலும், நம்மிலும் நம் சந்ததியிலும் அவர்களின் தொடர்பு தொடர்ந்து இருந்து வருவதால் நம் முன்னோர்களுக்கான நன்றியை, மரியாதையை, வணக்கத்தை, கடமையை சிராத்தம், தர்ப்பணம் முதலான சடங்காகச் செலுத்தி வருகிறோம். அத்தகைய தருணத்தின்போது, பித்ருக்களின் பசிக்கும் தாகத்துக்குமாக எள்ளையும் தண்ணீரையும் நாம் அர்ப்பணிக்கிறோம். இப்படி நமது முன்னோர் கடன் தீர்க்க  உகந்த காலம் மஹாளயபட்சம்.

பித்ருக்கள் யார்?

மறைந்த  தாய் தந்தை மற்றும் அவர்களின் முன்னோர்கள்  பித்ருக்கள் எனப் போற்றப்படுகிறார்கள் ஆத்மாக்கள் ஆகிப்போன முன்னோர்கள்  வாழ்வது பித்ருலோகத்தில்! ஒவ்வொரு மாதமும் அமாவாசை முதலான முக்கியமான நாட்களில் அவரவரின் வீடுகளுக்குப் பித்ருக்கள் வந்து, வாசற்படிக்கு முன் நின்று, தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதித்துச் செல்கிறார்கள் என்றும், ஒருவேளை சிறப்பாகத் தர்ப்பணம் செய்யாமல் விட்டு, அதனால் அவர்கள் மனவருத்தம் அடைந்தால், அது சாபமாக மாறி நம்மைப் பாதிக்கிறது என்கிறது சாஸ்திரங்கள்.

அமாவாசை வழிபாட்டுக்கும்  மஹாளயபட்சத்துக்கு என்ன வித்தியாசம் ?

பொதுவாக தாய் தந்தையரை இழந்தவர்கள், இறந்தவர்களின் திதியைக் கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் காரியங்கள் செய்வது வழக்கம்.மாதந்தோறும் அமாவாசை அன்று செய்யும் முன்னோர் கடனுக்கு கூடுதலாக செய்யப்படும் சிறப்பு, இந்த திதி வைத்து பித்ரு கடன் தீர்ப்பது. இப்படி உரிய் திதிகளில் காலங்களில் ஒருவேளை தங்களின் பித்ரு கடன் தீர்க்க இயலாதவர்கள் கட்டாயம் மஹாளயபட்சத்தின் போது நீத்தார் கடன் தீர்க்க் வேண்டும்.

புரட்டாசி மாதத்தில், பௌர்ணமியை அடுத்த தேய்பிறை நாட்கள் முழுவதுமே மிகப் பெரிய ஆற்றல் நிறைந்தவை. இவற்றை மஹாளயபட்ச புண்ய காலம் என்பார்கள். தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி (தாயார் உயிருடன் இருந்தால் பாட்டி, கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டி), தாய் வழித் தாத்தா பாட்டி என மூன்று தலைமுறையினர் அனைவருக்குமாக இந்தக் காலங்களில் தர்ப்பணம் செய்யலாம்.

அப்படிச் செய்யும்போது, நமக்கும் நம் சந்ததிக்குமான நன்மைகள் அனைத்தும் கிடைக்கும் என்பது உறுதி! சிலருக்குக் கர்ப்பத்திலேயே கரு கலைந்திருக்கலாம்; சிறு குழந்தையாக இருக்கும்போதே இறந்திருக்கலாம்; சிலர், விபத்து போன்று அகால மரணம் அடைந்திருக்கலாம். அந்த ஆத்மாக்கள் அனைத்தையும் திருப்தி அடையச் செய்வதற்கான சிறந்த நாளே மஹாளயபட்சம்.

மஹாளய பட்ச காலம் முழுவதும் தர்ப்பணம் செய்தே ஆக வேண்டுமா?

மஹாளய பட்சத்தில், அனைத்து நாட்களிலும் தர்ப்பணம் செய்வது விசேஷம். இயலாதவர்கள், மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடனும் முன்னோர் கடனை அளிப்பது மிகுந்த பலனைத் தரும். மஹாளய காலத்தில் அன்னதானமும் பசுவுக்கு அகத்திக் கீரை, புல், பழமும் அளிக்கலாம். இதனால் பித்ரு தோஷம் நீங்கும். புண்ணிய க்ஷேத்திரங்களுக்கோ, புண்ணிய நதிக்கரைகளிலோ பித்ரு கடன் தீர்க்க இயலாதவர்கள் , அவரவர் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் தங்களது கடமையை நிறைவேற்றலாம்.
மஹாளயபட்ச அமாவாசையில் தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக, 'ஏஷாம் ந மாதா ந பிதா... குசோதகை:’ என்று மந்திரம் சொல்லப்படும்.
இதன் பொருள் உணர்ந்து சொல்லும் போது நம்மை மீறி நமது மனம் இளகிடும். இதோ அதன் பொருள் 

'எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ... இதுபோன்று யாருமே அற்ற அநாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’

பெருமைக்குரியது மாத்திரமல்ல மானுட இனத்திற்கே மகத்தான வழிகாட்டும் பொருளுக்குரியது நமது இந்து தர்மம். மஹாளயபட்ச அமாவாசை மூன்னோர் கடன் தீர்ப்போம். வாழ்க்கையின் சகல நன்மைகள் பெறுவோம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close