மங்களம் அருளும் மாவிளக்கு பூஜை

  கோமதி   | Last Modified : 09 Nov, 2018 03:44 pm

pooja-to-get-the-prosperity

நமது இந்து மதத்தின் பல சிறப்பம்சங்களில் மாவிளக்கு வழிபாடும் ஒன்று. இடித்தெடுத்த பச்சரிசி,வெல்லம்,ஏலக்காய் போன்ற கலவையில் விளக்கு செய்து,நெய் கொண்டு  தீபம் ஏற்றுவதே மாவிளக்கு ஆகும்.

மாவிளக்கு வழிபாடு அம்மன் கோவில்களில் மிகவும் விசேஷம்.அம்மன் கோவில்களில் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற மாவிளக்கு ஏற்றுவது வழக்கம். அம்பாளும் மனம் மகிழ்ந்து,தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சகல செல்வங்களையும் தருவாள் என்பது நம்பிக்கை.  குறிப்பாக ஆறு,குளம் உள்ள ஊர்களில் இருக்கும் அம்மனுக்கு நோய்கள் தீரவும், கஷ்டங்கள் குறையவும்,மாவிளக்கு ஏற்றி நோத்திக் கடன் செலுத்துவது இரட்டிப்பு பலனைத் தரும்.இதில் அரிசி அதாவது அன்னமாவது,பிராணமயம். பிரம்ம ஸ்வரூபமான அன்னமே,உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குகிறது. அடுத்து,வெல்லத்தின் குணம் இனிமை. அம்பிகையின் குணாம்சம் இனிமை. நம் மக்கள் அனைவரின் ஜீவனுக்குள்ளும் இனியமையான அம்பிகை உறைகிறாள்.

இந்து மத சாஸ்திரத்தில்,அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.ஹோமங்களிலும் நெய்யே வார்க்கப்படுகிறது. ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார்.அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது.மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமான அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவே மாவிளக்கு ஏற்றுகிறோம்.

மாவிளக்கை அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு 1முறையாவது ஏற்றுவது குடும்பத்தை செழிக்க செய்யும். ஆடி,தை வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு போடுவதை இன்றும் பல குடும்பங்களில் சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.சிலர் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மாவிளக்கு போடுவதும் உண்டு.

இவ்வளவு மகத்துவம் வாய்ந்த மாவிளக்கு செய்ய தெரியாதே என்று வருத்தப்படுபவர்களுக்காக இதை செய்வது எப்படி என்று பார்ப்போம். 

ஒரு கிலோ அரிசி கொண்டு செய்வது என்றால், அதனை நன்றாக களைந்து ஒரு துணியில்  காயவைக்க வேண்டும். சற்று ஈரப்பதத்துடன் இருக்கும் போதே மிக்ஸியிலோ அல்லது மிஷினிலோ கொடுத்து நான்கு, ஐந்து ஏலக்காயை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். ரொம்பவே சன்னமாக இருக்க வேண்டும் என்பதில்லை.சற்று கொரகொரப்பாக இருந்தாலும் சரி. 

ஒரு கிலோ அரிசி என்றால்,முக்கால் கிலோ வெல்லத்தை துருவி அரைத்த அரிசி மாவுடன் கலக்க வேண்டும்.தேவைப்பட்டால்,சிறிதளவு பால் ஊற்றி,நன்றாக பிசறி உருண்டையாக உருட்ட வேண்டும். அதன் மத்தியில் குழி போல் அழுத்தி, ஓரத்தில் மூன்று இடத்தில் குங்குமம் பொட்டு வைத்து நெய் விட்டு விளக்குகேற்றி வைக்கவும்.பொதுவாக ஒற்றை படை எண்ணிக்கையில் தான் மாவிளக்கு போட வேண்டும். 

வெள்ளிக் கிழமைகளில் மாவிளக்கேற்றி அம்பிகையின் அருளைப் பெறுவோம். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.