மும்மலங்களை அகற்றும் கந்த சஷ்டி பெருவிழா ( முதல் பாகம் ) யார் இந்த சூரபத்மன் ?

  கோமதி   | Last Modified : 13 Nov, 2018 11:23 am
kandasashti-festival-first-part-who-is-this-surabhatma

உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்களால்,பக்திப் பெருக்குடன் கொண்டாடப்படும் திருவிழாவே கந்த சஷ்டி பெருவிழா.சிவ மைந்தன் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவன் சகோதரர்களை வதம் செய்த திருவிளையாடலே கந்தசஷ்டி விரத விழாவாகக்கொண்டாடப்படுகிறது. “நான்” என்கின்ற அகங்காரமும், “எனது” என்கின்ற மமகாரமும் மொத்த உருவாக அமையப் பெற்றவன் சூரபத்மன்.சூரபத்மன் ஆணவ மலம் கொண்டவன் அவன் சகோதரன் தாரகாசுரனோ மாயா மலம்உடையவன். சிங்கமுகன் கன்ம மலத்தின் வடிவம். இவர்களை ஞானத்தின் வடிவான முருகனது வேல் வெல்கிறது. அசுரர்கள் வெளியில் இல்லை. நம் மனதில் படிந்திருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்ற குணங்களே நாம் வெல்ல வேண்டியது. இவற்றை வெல்ல இறை சக்தி நம்முடன் துணை நின்றால் மட்டுமே முடியும். 

யார் இந்த சூரபத்மன் ?

நான்முகக் கடவுளான பிரமதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள்.அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்ததால், ஆணவம் கண்களை மறைக்க, வரம் கொடுத்த சிவனை அழைக்காது யாகம் நடத்தினான்.இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாகி,முடிவில் அவரால் தோற்றுவிக்கப்பட்ட வீரபத்திர கடவுளால் அழிக்கப்பட்டான். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான வரங்களைப் பெற்ற போதிலும் “மாயை” என்னும் அரக்கப்பெண்ணின் அழகில் மயங்கி, தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.

இதனைத் தொடந்து காசிபனுக்கும் மாயை என்னும் அசுரப் பெண்ணுக்கும் மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானை முகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகள் பிறந்தனர். இவர்களுள் சூரபத்மன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து,108 யுகங்கள் உயிர்வாழவும், 1008 அண்டங்களையும் ஆரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேறு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான். சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை மணந்து வீரமகேந்திரபுரியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். சூரனுக்கும் பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன்,இரணியன், 10 தலைகளைக் கொண்ட-வச்சிரவாகு ஆகிய நாங்கு புதல்வர்கள் பிறந்தனர். 

சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்து அதர்ம வழியில் ஆட்சி செய்யலானான்.அசுரர்களின் இக்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரிக்க,இதனை தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம்சென்று முறையிட்டனர். ஈசனும் அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார். 

சிவகுமாரனின் பிறப்பு

தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க, ஈசானம், தத்புருஷம், அகோரம்,வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய ஐந்து முகங்களுடன், ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய “அதோமுகம்” என்னும் ஆறாவது முகத்தில் இருந்தும் ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை ஈசனின் கட்டளைப்படி வாயுபகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.அந்த தீப்பொறிகள் ஆறும் அழகே வடிவான ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறுகார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வரும் வேளை உமையன்னை தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்திட, அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினார். 

ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் “ஆறுமுகசுவாமி” எனப் பெயர் பெற்றார். இந்த ஆறுதிருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம்,புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவனிடம் இருந்து தோன்றிய அக்னிப் பொறியில் இருந்து தோன்றியவன். அதனால் “ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்” எனக் கூறுவது சாலப் பொருந்தும். 

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்க முடியாது சிவனருகில் இருந்த பார்வதிதேவி பாய்ந்து ஓடலானார். அப்போது பார்வதி தேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் வீரவாகுதேவர் முதலான இலட்சத்து ஒன்பதுமர் (100009) தோன்றினர். இவர்கள் அனைவரும் பின்பு முருகனின் படைவீரர்களாயினர்.

அன்னையின் அம்சமான சக்திவேல்:

சூரனை அழிக்கப் புறப்பட்ட முருகனுக்கு அம்மை,தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலை முருகனிடம் வழங்கினார். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு உருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கெ இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி செல்கையில், விந்தியமலை அடிவாரத்து மாயாபுரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் கிரௌஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறித்தான். முருகனின் கூர்வேல் பாய தாருகன் அழிகின்றான்.
போருக்கு புறப்படுவதற்கு முன்பு, ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி பாசுபதம் என்னும் அஸ்திரம் வழங்குகின்றார். முருகன் அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும் திருச்செந்தூர் சென்றடைந்தார்.

கந்தன் கருணை தொடரும் ....

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close