12 ராசிக்காரர்களையும் பாதுகாக்கும் சிவ அம்சம் 30.11.2018 கால பைரவர் ஜெயந்தி

  கோமதி   | Last Modified : 30 Nov, 2018 11:52 am

lord-siva-s-form-to-protect-12-rasis-30-11-2018-kala-bhairava-jayanthi

முதலாளிகளிடம் காரியம் சாதிக்க அவருக்கு வேண்டுபவரிடம் சிபாரிசுக்கு போவது போல் கடவுளின் கருணை நம் பக்கம் திரும்ப நாமும் கடவுளின்   செல்லப்பிள்ளைகளை உரிய நேரத்தில் சிரத்தையுடன், கவனமாக தரிசனம் செய்துவிட வேண்டும். ஒவ்வொரு தினமும் யாருக்கு உகந்த நாள் என்று  பார்த்து அந்த வேண்டுதலுக்குரியவரை கோவிலில் சந்தித்து நம் குறைகளைச் சொல்லி ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும். இன்றைய நாளின் சிறப்பை பற்றி தெரிந்துக் கொள்வோமா?. 

ஜாதக ரீதியாக 12 ராசிக்காரர்களையும் பாதுகாக்கும் இவரை இன்று வழிபட்டால் தீராத தொல்லைகள் தீரும், செல்வம் குவியும்,வேண்டுதல் வேண்டியபடி நடக்கும். இவருக்கு சிவாலயங்களில்,ஈசானிய மூலையில் வடகிழக்கு திசையை பார்ப்பது போல் சன்னிதி அமைந்திருக்கும்.  நீலமேனியாய் நின்ற கோலத்தில் ஆடைகள் எதுவுமின்றி பன்னிரு கைகளுடன் நாகத்தைப் பூணூலாகவும், சந்திரனை தலையில் கொண்டும் சூலாயுதம்,அங்குசம், பாசக்கயிறு போன்ற ஆயுதங்களுடன்  நாய் வாகனத்துடன் காணப்படுவார். காலையில் கோயில் நடை திறந்தது முதல், இரவு கோயிலை சாத்தும் வரைக்கும் இவருக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுவதில் இருந்தே இவருக்கான முக்கியத்துவத்தை தெரிந்துக் கொள்ளலாம். அவர் தான் சிவ பெருமானின் அம்சமாக வழிபடப்படும் கால பைரவர். 

தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டிற்கு உகந்த நாள் என்பது ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் தெரிந்த செய்தி தான். ஆனால், கார்த்திகை மாதம்  வருகின்ற தேய்பிறை அஷ்டமி பைரவரின் ஜெயந்தி நாள்.இன்று ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜெபிப்பது மிகவும் விஷேசம்.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி திதி அன்று மஹா கால பைரவப் பெருமான் ஈசனிடம் இருந்து உதயமானார். இன்று பைரவர் சந்நிதியில் நாள் முழுவதும் நேரம் கிடைக்கும் சமயத்தில் மற்றும் வீட்டில் மாலை வேளையில் பிரதோஷ நேரம் முழுவதும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபித்தால் நமது இப்பிறவியில் செய்த அனைத்து பாவங்களும் நம்மைவிட்டு ஓடிவிடும் என்று சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் தெரிவித்திருக்கின்றார். இன்று முடிந்த வரை  ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ! ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ !ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என சொல்ல சொல்ல  நமது பிறவிப் பிணி அகலும். 

கால பைரவர்:

காலச்சக்கரங்களில் அடக்கமான 12  ராசிகள்,எட்டு திசைகள், பஞ்சபூதங்கள், நவக்கிரகங்கள், சனியின் குரு , காலம் என அனைத்தையும் கட்டுப்படுத்துவதில் முதன்மையானவர் என்பதால் கிரகதோஷம் கொண்டவர்கள் இவரை வழிப்பட்டால் தோஷம் ஓடிவிடும். காலபைரவர் சிவபெருமானின் 64 மேனிகளுள் ஒருவர். சிவனின் ருத்திர ரூபமாக செயல்படுபவர்.பயம் தரக்கூடியவர், எதிரிகளை அஞ்ச வைப்பவர்.  கால பைரவர், கோர பைரவர், உக்ர பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், ஜுர பைரவர் என பல்வேறுவிதமான பெயர்களில் அருள்பாலிக்கிறார். அந்த வகையில் அன்ன வாகனம்,ரிஷப வாகனம், மயில் வாகனம், கருட வாகனம்,குதிரை வாகனம், யானை வாகனம்,சிம்ம வாகனம்,  நாய் வாகனம் என பைரவரின் எட்டுவிதமான தோற்றங்களை ஒரே ஆலயத்தில் தரிசிக்க விரும்புபவர்களை கைகூப்பி அழைக்கிறார் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள அழிவிடை தாங்கி கிராமத்தில் வீற்றிருக்கும் பைரவர். 

ஒவ்வொரு பெளர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை அஷ்டமி இவருக்கும் பிடித்த நாள். அன்றைய தினம் ஆலயங்களில் இவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நந்நாளில் இலுப்பை எண்ணெய் தீபம், விளக்கு எண்ணெய் தீபம், தேங்காய் எண்ணெய் தீபம், நல்லெண்ணெய் தீபம் மற்றும் பசுநெய் தீபம் என பஞ்ச தீபங்களை ஏற்றி வழிபட்டால் காலத்தால் தீர்க்கமுடியாத தொல்லைகள் மற்றும் கஷ்டங்கள் தீரும். 5 மண் அகல் விளக்குகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு எண்ணெய் விட்டு திரியிட்டு தனித்தனியாக ஏற்ற வேண்டும். சிலர் ஒரு அகல் விளக்கை மற்றும் ஏற்றிவிட்டு அதைக் கைகளில் ஏந்தி மற்ற தீபத்தை ஏற்றுவார்கள். அப்படி ஏற்றாமல் தனித்தனியாக தீபமேற்றி வணங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளைக் கொண்டு இவரை பூஜித்தால் ஒவ்வொரு பலனை பெறலாம் என்றாலும் அவரை மனதில் நினைத்து அன்புடன் வேண்டினாலே போதும் காலபைரவர் ஓடோடி வருவார். கண்ணின் இமைபோல் நம்மை காக்கும் இவரது அருள் இல்லாமல் நமக்கு முக்தி கிட்டாது. 

கால பைரவருக்கு பிடித்த சிவப்பு ஆடையை அணிவித்து, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி செளபாக்கியம் கிடைக்கும். குழந்தைபேறு வேண்டி ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் செவ்வரளி கொண்டு பூஜித்து வழிபட்டால் குழந்தை செல்வம் கிட்டும். பெளர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை அஷ்டமியில்  காலபைரவரை வணங்கி வேண்டுவதைப் பெறுவோம். பொதுவாக நம்முடைய வேண்டுதலை வெளியே சொல்லக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் காலபைரவரைப் பொறுத்தவரை அவரை வழிபடுவதையே சொல்லக்கூடாது என்று சொல்லப்படுகிறது.  

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.