வைகுண்ட ஏகாதசி விரதம் ஏன் இருக்க வேண்டும்?

  கோமதி   | Last Modified : 15 Dec, 2018 12:27 pm

why-should-we-have-vaikuntha-ekadasi-fast

கங்கைக்கு ஈடாக தீர்த்தம் எதுவுமில்லை. தாய்க்கு நிகரான தெய்வம் எதுவுமில்லை. காயத்ரி மந்திரத்துக்கு ஈடான மந்திரம் எதுவுமில்லை. ஏகாதசிக்கும் ஈடான விரதமும் எதுவுமில்லை என்கிறது. அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் ஏகாதசி விரதம் என்கிறது புராணங்கள்.மூன்று கோடி ஏகாதசி விரத பலனை அளிப்பதால் முக்கோடி ஏகாதசி என்றும் வைகுண்ட ஏகாதசி அழைக்கப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசியை மோட்ச ஏகாதசி என்றும் சொல்வார்கள். இந்த விரதத்தின் மகிமையை சிவப்பெருமானே பார்வதி தேவியிடம் எடுத்துக் கூறியதாக புராணங்கள் சொல்கிறது. அனைத்து ஏகாதசியிலும் விரதமிருந்து பெறும் பலனை இந்த வைகுண்ட ஏகாதசி அன்று ஒருநாள் இருந்தாலே கிடைத்துவிடுகிறது என்கிறது விஷ்ணுபுராணம்.ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோறாம் நாள் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. திருமாலின் இருப்பிடமாகக் கருதப்படும் வைகுண்டத்தின் கதவுகள் இந்நாளில் திறக்கப்படுவதாக பக்தர்கள்  நம்புகின்றனர். புராணத்தில் இதற்கு கதையும் உண்டு.

சக்ரவர்த்தி அம்பரீஷன் என்பவன் ஏகாதசி விரதத்தைத் தவறாது கடைப் பிடித்தான். ஒருமுறை ஏகாதசி விரதத்தின் போது மறுநாள் துவாதசியன்று யமுனை நதிக்கரையில் துர்வாச முனிவரைச் சந்தித்தான். அவருக்குப் பாத பூஜை செய்து அவரையும் தன்னுடன் உணவருந்த அழைத்தான் சக்ரவர்த்தி. துர்வாசர் நான் நீராடிவிட்டு வருகிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். சக்ரவர்த்தி நீண்ட நேரம் துர்வாசருக்காக காத்திருந்தார். துர்வாசர் வர தாமதமாகியது. அங்கிருந்த ரிஷிகள் “துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை  முடித்துக்கொள்ளுங்கள். துர்வாசர் வந்ததும் உணவருந்தலாம்” என்றனர்.

நீராடிவிட்டு வந்த துர்வாசர், அம்பரீஷ் துளசி தீர்த்தம் அருந்தி விரதம் முடித்ததைக் கேட்டு கோபம் கொண்டு சக்ரவர்த்தி மீது சடை முடி ஏவினார். அது பூதமாக மாறி சக்ரவர்த்தியைத் துன்புறுத்த தொடங்கியது. ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்கும் பக்தன் துன்பப்படுவதைச் சகிக்காமல் விஷ்ணு பகவான் தனது சுதர்சனச் சக்கரத்தை ஏவினார். அச்சக்கரம் பூதத்தையும் அதை ஏவிய துர்வாசரையும் துரத்திற்று. துர்வாசர் தவறை உணர்ந்து விஷ்ணுவிடம் சரணடைந்தார். ”ஏகாதசி விரதத்தில் உள்ளத் தூய்மையுடன் மனம் முழுக்க  என்னை நிரப்பி பக்தியுடன் வேண்டும் பக்தனின் இதயத்தில் நானே குடியிருக்கிறேன்,அவர்களைக் காப்பதும் என் கடமையாகிறது. நீங்கள் என்னைச் சரணடவதை விட என் பக்தனிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்போதுதான் சுதர்சனச் சக்கரத்திடமிருந்து விடுதலை கிடைக்கும்” என்றார் மகாவிஷ்ணு. துர்வாசர் சக்ரவர்த்தி அம்பரீஷிடம் சென்று தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். சக்ரவர்த்திக்கு பல வரங்களையும் தந்து அருளினார் துர்வாச முனிவர். 

துன்பங்கள் எவ்வளவு இருந்தாலும் அதைத் தாங்கும் சக்தியும், இறைவனை அடையும் பேறையும் தரும் வல்லமை மிக்கது ஏகாதசி விரதம் என்பதை இப்புராணக்கதை விளக்குகிறது. ஏகாதசி விரதத்துக்கே இத்தனை மகிமை என்றால் வைகுண்ட வாசலுக்குச் செல்லும் மோட்ச ஏகாதசியான வைகுண்ட ஏகாதசியைக் கடைப்பிடித்து மனதில் பக்தியைப் பரப்பி, உள்ளத்தில்  இறை வனை மட்டுமே நினைத்து பூஜித்தால்.., விஷ்ணுவின் பாதத்தில் ஐக்கியமாகும் பேறை பெறுவோம் 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.