புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்

  கோமதி   | Last Modified : 15 Dec, 2018 03:28 pm

for-those-who-want-to-celebrate-the-vaikunda-ekadasi-fasting-newly

மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி திதியில் கடைப்பிடிக்கப்படும் வைகுண்ட ஏகாதசிக்கு  மூத்த தலைமுறையின் வழிமுறைகளோடு விரதமிருப்பவர்கள்  விரதத்தின்  மகிமையும் வழி முறைகளையும் அறிவார்கள்.  இந்த வருடம் முதல் வைகுண்ட ஏகாதசி விரதத்தைக்  கடைப்பிடிக்க நினைக்கும்  பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி விரதத்துக்கான விரத வழிமுறைகளைக் கொடுத்திருக்கிறோம்.  ஏகாதசி விரதம் 10 வது  திதியாகிய தசமி,  11 வது திதியான ஏகாதசி, 12 வது திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஏகாதசி விரதம் தொடக்கம்: (தசமி -17-12-2018)

வருடம் முழுவதும் ஏகாதசி விரத்தத்தைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள்  18 ஆம் தேதியன்று வரும் வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளை வழிபட்டு  விரதம் மேற்கொண்டு சிறப்பான பலனை பெறலாம். ஏகாதசியன்று விரதமிருப்பவர்கள் அதற்கு முன்தினம் (17-12-2018)  தசமியன்றே விரதத்தைத் தொடங்க வேண்டும் என்று ஆன்மிக நூல்கள் அறிவுறுத்துகின்றன. இந்நாளில் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும்.  அதிலும் தாளிகை இல்லாமல் பத்திய உணவாக இருக்க வேண்டும். அன்றைய நாள் பெருமாளை நினைத்து தியானத்தில் ஈடுபட்டு பகவான் திருநாமங்களை ஓதியபடி இருக்க வேண்டும். வயதானவர்கள், இயலாதவர்கள் ஏகாதசி அன்று விரதத்தைத் தொடங்கலாம்.

வைகுண்ட ஏகாதசி வழிபாடு: (ஏகாதசி- 18-12-2018)

தசமி முடிந்து  ஏகாதசி  அன்று அதிகாலையில்  எழுந்து நீராடி தூய்மையுடன்  வழிபாட்டைத் தொடங்குங்கள். அன்றைய தினம் முழுக்கவே  உணவு எதுவும் உட்கொள்ளாமல் உபவாசம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் துளசி தீர்த்தம் மட்டும் குடிக்கலாம். ஏகாதசியன்று துளசிச்செடியில் இருந்து துளசியைப் பறிக்க கூடாது என்பதால் முன்தினமான தசமி அன்றே துளசியைப் பூஜைக்கு பறித்து வைப்பது நல்லது. முதியோர்கள், நோயாளிகள் மட்டும் பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

வெறும் உபவாசம் மட்டுமே விரத்தத்தின் பலனை அளித்துவிடாது. அன்றைய தினம் முழுவதும் திருமாலின் திருநாமங்களை உச்சரித்தப்படி இருக்க வேண்டும். திருமாலின் பெருமைகளை விளக்கும் இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை போன்றவைகளைப் படிக்கலாம். இன்றைய தினம் உறக்கத்தையும் உணவையும் மறந்து முழுக்க முழுக்க திருமாலை மட்டுமே மனத்தில் நிறுத்த வேண்டும். இரவு நேரங்களில் உபன்யாசம், திருமாலின் நாமாவளிகளைக் கேட்கலாம். இன்றைய தினம் விஷ்ணு கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபட வேண்டும். ஏகாதசி அன்று பூஜை புனஸ்காரம் செய்வதற்கு உடல் ஒத்துழைக்க வில்லையென்றாலும் முதியோர்கள் வீட்டிலேயே இருந்து நாமஜெபம் செய்யலாம். மனத்தை ஒருமுகப்படுத்தி வீட்டில் இறைவழிபாடு செய்ய சிறுதடங்கல் இருந்தாலும் அருகிலுள்ள விஷ்ணு ஆலயத்தில் தங்கி விஷ்ணு புராணம், நாம ஜெபம்செய்வது அலைபாயும் மனத்தைக் கட்டுபடுத்தும். அன்றைய தினம் திறக்கப்படும் சொர்க்கவாசலைக் கடந்து பெருமாளோடு பரமபதத்தினை அடைவது சிறப்பு.
ஏகாதசி விரதமிருப்பவர்கள் கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. விரதமிருப்பவர்களை வற்புறுத்தி உண்ணச் செய்பவன் நரகத்திலும் கீழ்மையான நரகத்துக்குச் செல்வான்.

பாரணை எனப்படு விரத நிறைவு : (துவாதசி-19-12-2018)

ஏகாதசியன்று உணவைத் துறந்து உபவாசம் இருந்து பிறகு துவாசியன்று உணவு உட்கொள்வதை பாரணை என்று சொல்வார்கள். அன்றைய தினம்   அதிகாலையில் நீராடி சூரியன் வருவதற்குள் 21 விதமான காய்கறிகளைச் சமைத்து  இறைவனுக்கு படைத்து உண்ண வேண்டும். இந்த 21 காய்களுக்குள் கண்டிப்பாக பரங்கிக்காய், நெல்லிக்காய், அகத்திக்கீரை போன்றவைக் கட்டாயம் இடம்பெற வேண்டும். இந்த உணவை உண்டு முடித்து அன்றைய தினமும் திருமாலை மட்டும் தியானித்து சூரியன் மறையும் வரை உறங்காமல் இருந்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

பிறப்பில்லாத பேரின்ப நிலைக்குக் கொண்டு செல்லும் பரந்தாமனின் திருவடியை அடைய ஏகாதசி விரதமிருந்து பெறுவதற்கரிய பேரை பிறப்பில்லா நிலையை அடைவோம். 

ஓம் நமோ நாரயணாய...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.