திருப்பாவை  – ஒரு முகப்பு...!

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 17 Dec, 2018 02:13 am

thiruppavai

பள்ளிக் கூடம் படிக்கும் போது, எல்லாரும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியடையணும். ஒரு வரி கூட படிக்காமல் பரீட்சைக்குச் சென்றால் என்னவாகும்? தோல்வியடைவான். காரணம் என்ன? அவன் படிக்காமல் சென்றது என்று எளிமையாகச் சொல்லிவிடலாம். 11ம் வகுப்புக்கு முன்னேற என்ன செய்யணும்? மறுபடியும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதணும். மீண்டும் பத்தாவது படிக்கணும், தேர்வு எழுதணும். பாஸாகிற வரை இந்தச் சுழற்சியே திரும்பத் திரும்ப நிகழும். பரீட்சை எழுதுறவருக்கு முதல் ஒன்றிரண்டு முறை கூட பொறுத்துக் கொள்ள முடியும். அது தொடர்ந்து பலமுறை என்றானால்....?

ஒரு மனிதன் பிறக்கிறான் – இறக்கிறான். இறப்பு என்பது பரீட்சை. பரீட்சையில் தோற்றால் மீண்டும் பிறப்பு. ஐம்பது வருஷமோ, நூறு வருஷமோ வாழ்ந்து விட்டு மீண்டும் இறப்பு எனும் தேர்வு.... பாஸ் பண்ணணும்னா, சரியா படிச்சிருக்கணும். நாம படிச்சுட்டு இருக்கோமா இல்லையானு தெரியாது. ஆனால் ஒரு விஷயம் தெளிவா தெரியும். நமக்கான பாடத்திட்டமே என்னனு தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறோம். இது கொஞ்சம் சுடும் உண்மை / கசக்கும் உணவு / முகத்தில் தேங்கியிருக்கும் அழுக்கினைப் பட்டவர்தனமாகக் காட்டும் கண்ணாடி. இதை மனதார ஒப்புக்கொள்ளாமல் பரீட்சையைப் பற்றி கூட நினைத்துப் பார்க்கக் கூடாது. 

இந்தப் பிறப்பைக் கடக்க பாடத்திட்டம் என்ன?

முழுமையாக நான்கு வேதங்களிலும் சொல்லியிருக்கிறார்கள். படிச்சுத் தெளிஞ்சு அதன் படி நடந்துக்குங்க, பாஸ் பண்ணிடலாம் என்று சொன்னால், நிச்சயம் உங்களுக்குக் கோபம் வரும். நாம என்ன கிருதயுகத்தில் இருக்கிறோமா இல்லை திரேதா யுகத்தில் இருக்கிறோமா? கலியுகத்தில் இருக்கும் நமக்கு நான்கு வேதங்களையும் முழுமையாகப் படிக்கும் அளவுக்கு நமக்கு ஆயுள் இருக்கிறதா என்று எதார்த்தமான கேள்வி எழத்தான் செய்யும். 

சரி, அப்ப ஐந்தாம் வேதமான மகாபாரதத்தை மட்டுமாவது படித்துவிடுங்கள் போதுமே… ?

இல்லீங்க… அதெல்லாம் அவ்வளவு எளிதல்ல, ஒன்னேகால் லட்சம் ஸ்லோகங்கள் கொண்டதாமே மகாபாரதம்? நமக்கு பதினெட்டு அத்தியாயம் உடைய பகவத் கீதையைப் படிக்கவே நேரமில்லை. அப்புறம் விதுரநீதி, சகஸ்ரநாமம் உட்பட பீஷ்மர் போதனைகள்…. அப்பப்பா நினைச்சாலே மூச்சு முட்டுது…. 

அதற்கும் எளிமையாக என்ன செய்யலாம்?

ஒன்னு செய்ங்க… தட்சகனால் கடிக்கப்பட்ட பரீட்சித் இருக்கும் ஏழு நாளில் முக்தியடைய வழி கேட்ட போது அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வழி நாராயணனின் விஸ்வரூபத்தை ஒரேவீச்சில் முழுமையாகப் பார்ப்பது. இதென்ன விளையாட்டு… தாயின் கர்ப்பத்திற்குள் இருந்து கொண்டு, தாயின் முழுவுருவத்தை எப்படி தரிசிப்பது? ஆகாது என்று பரீட்சித் சொன்னதும், அப்ப பாகவதம் கேள் முக்தி கிட்டும் என்று ஆற்றுப்படுத்தப் பட்டதாம். அது போல கலியுகத்தில் குறைவான ஆயுளுடைய தம் குழந்தைகளின் நேரம் கருதி, பூமாதேவியே மீண்டும் அவதரித்து ஒரு முப்பதே முப்பது பாசுரத்தில் மொத்த வேதத்தையும் தமிழென்னும் சர்க்கரையில் சமைத்து பிரபந்தத் தட்டில் எடுத்து வைத்து விட்டுப் போயிருக்கிறார். ஒரே மூச்சில் சாப்பிடணும் என்று கூட அவசியமில்லை. தினமும் ஒரு கவளம் வீதம் முப்பது நாட்களுக்குச் சாப்பிட்டுக் கொள்ளலாம். திருப்”பா”வை கோத்து வைத்தக் கோதை திருவடியைத் தொழுது, அவள் கொடுத்த அமுதம் பகிர்வோம். 

குறிப்பு : பெரியவர்கள் பலர் ஆழ்ந்துணர்ந்து அறிவுறுத்தியதை, அடியேன் எனக்குத் தெரிந்த மொழியில், என் சிற்றறிவுக்குப் புரிந்தவரை எடுத்துரைக்க முயல்கிறேன். இதில் ஏற்படும் குற்றங்களையும் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டி திருத்த பெரியவர்களை வேண்டிப் பணிகிறேன்.

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் 
வாழியே.

ஆண்டாள் திருவடிகளே சரணம் !

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.