அனைத்து விஷ்ணு கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்படுவதற்கான தாத்பரியம்

  கோமதி   | Last Modified : 17 Dec, 2018 07:22 am

the-reason-behind-the-sorga-vasal-ceremony-in-al-vishnu-temples

வைகுண்ட ஏகாதசி விரதத்தின் முக்கிய நிகழ்வே சொர்க்க வாசல்திறப்பு தான்.  சொர்க்க வாசல் திறப்பைக் காண பக்தர்கள் இலட்சக்கணக்கில் திரண்டு வருவார்கள். வாழ்வு முழுதும் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொண்டாலும் சொர்க்க வாசல் திறப்பைக் காண முடியாவிட்டால் அந்த விரதம் முழுமை பெறாது என்பார்கள் பக்தர்கள். சொர்க்க வாசல் அவ்வளவு சிறப்பா என்பவர்கள் தொடர்ந்து சொர்க்க வாசல் திறப்புக்கான காரணத்தைப் படியுங்கள்.

வைகுண்டத்தில் விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரண்டு காதுகளிலிருந்து மது மற்றும் கைடபர் என்னும் இரண்டு அசுரர்கள் தோன்றினார்கள். விஷ்ணுவின் காதுகளிலிருந்து தோன்றியதால் செருக்கு கொண்டு கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொடுமை செய்தார்கள்.  தேவர்களும் இதிலிருந்து தப்பமுடியவில்லை. தேவர்கள் முயற்சி செய்தும் அசுரர்களை அடக்க முடியாமல் போயிற்று. ஆனால் எப்படி இவர்களை அழிப்பது.. விஷ்ணுவின் சக்தியால் உருவான இவர்களை சாட்சாத் விஷ்ணுபகவானால் மட்டுமே அடக்க முடியும் என்று அனைவரும் விஷ்ணுவை சரணடைந்து அசுரர்களைப் பற்றி முறையிட்டார்கள். 

விஷ்ணு அசுரர்களுடன் போர் செய்ய தொடங்கினார். ஸ்ரீ மந் நாராயணனின் சக்தியால் உருவானவர்கள் அவரிடம் போர் செய்து வெற்றி பெற முடியுமா என்ன? விஷ்ணுவின் பலத்தைத் தாங்க முடியாமல்  விஷ்ணு பகவானையே சரணடைந்தார்கள். நாங்கள் உங்கள் சக்தியிலிருந்து தோன்றியவர்கள். எங்களை வதம் செய்யாதீர்கள் என்று வேண்டினார்கள். அவர்கள் வேண்டுதலுக்கு செவி சாய்த்து அவர்களைத் தன்னிடமே வைத்துக்கொண்டார். நாங்கள் வைகுண்டத்தில் தங்களுடன் இருக்கும் பாக்கியத்தைத் தங்கள் பக்த கோடிகளும் பெற வேண்டும் என்று அசுரர்கள் வேண்டினார்கள். மேலும் விரதங்களில் சிறந்த விரதமான வைகுண்ட ஏகாதசியன்று தங்கள் ஆலயங்களில் அர்ச்சாவதாரத்தில் பவனி வரும்போது தங்களைத் தரிசிக்கும் பக்தர்களுக்கும், பின் தொடரும் பக்தர்களுக்கும் அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த அனைத்து பாவங்களையும் நீக்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர்களது வேண்டுகோளை ஏற்ற விஷ்ணுபகவான் அதன்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதித்தார். அதனாலேயே வைகுண்ட ஏகாதசியன்று அனைத்து விஷ்ணு கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பூலோக வைகுண்டம் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலிலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும், காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலிலும் சொர்க்க வாசல் திறப்பு மிக விசேஷமாக இருக்கும். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு பரமபத வாசல் வழியாக வெளிவரும் திருமாலை வணங்கி அருள் பெறுவார்கள். வரும் 18 ஆம் தேதி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு, அதிகாலை 4.15 மணிக்கு பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசலைக் கடந்து  திருக்கொட்டகையில் பக்தர்களுக்கு காட்சிதருவார்.

விரதங்களுக்குள் தலையாய விரதமாய் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து பெருமாளின் அருளைப் பெற்று  சொர்க்க வாசலைத் தரிசித்து மோட்ச பிராப்தியை அடைவோம். 

ஓம் நமோ நாராயணாய...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.