திருப்பாவை-1 

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 17 Dec, 2018 10:57 pm

thiruppaavai-1

மார்கழி மாதம் எந்தளவு சிறப்பானதாக இருந்திருந்தால், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையை போதிக்கச் சிறப்பான காலமாக மாழ்கழியைத் தேர்ந்தெடுத்திருப்பார்?

 பிதாமகர் பீஷ்மர், இது விழித்திருக்க வேண்டிய காலம். இதில் நெடுந்துயில் கொண்டுவிடக் கூடாது என்று மார்கழி கடக்கும் வரை அம்புப்படுக்கையில் கிடந்து சகஸ்ரநாமம் அருளியிருப்பார்? அது மட்டுமல்ல...
 
மார்கழி என்பது தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தம். அதாவது, தட்சணாயணத்தின் இறுதி மாதம். தை மாதம் முதல் தேதியில் அவர்களுக்குச் சூர்யோதயம் எனும் உத்தராயணம் தொடங்குகிறது. அப்படியென்றால், மார்கழி என்பது பிரம்ம முகூர்த்த காலம் தானே? 

தேவர்களின் பிரம்ம முகூர்த்தமான மார்கழியில், மனிதர்களின் பிரம்ம முகூர்த்தமான அதிகாலைப் பொழுதான -  மார்கழித் திங்கள், 

இரவு முழுவதும் நல்ல ஓய்வெடுத்ததால், தேவர்களும் மனிதர்களும் நல்ல விழிப்புணர்வு நிலையில் இருப்பார்கள். ஆகவே மனதும் சலனமில்லாமல் தூய்மையாக இருக்கும் -  மதி நிறைந்த நன்னாளாக இருப்பதால், இவ்வுலக இன்பங்களை அணிகலன்களாக விரும்பி அணிந்திருக்கும், செழிப்பு மிக்க ஆயர் குலச் சிறுமிகளே, அகம்/புறம் நிறைந்த குற்றங்கள், அழுக்குகளைக் கலைய  விருப்பமுள்ளவர்கள் அனைவரும் வாருங்கள் நீராடப் போகலாம்.

எதற்காக நீராட வேண்டும்? 

இந்த மாதத்தில் நாராயணனை நோக்கி எல்லாரும் வியக்கும் வண்ணம் நோம்பிருப்பதற்கு அகம் புறம் தூய்மை வேண்டும். ஆகையால் கிளம்பி வாருங்கள். பூவுலக இன்பத்தில் லயித்துக் கிடக்கும் சிறுமிகளே, விஸ்வரூபத்தைக் கண்ட அர்ஜுனன் போல,  நாராயணன் என்றால் யாரோவென்று மிரட்சியாக நிற்க வேண்டாம். அவர் வேறு யாருமல்ல, கூர்மையான வேலினைக் கொண்டு வேட்டையாடும் வேடுவனின்  கவனம் குவிந்த தொழில் சிரத்தை போல,  ஈ, எறும்பு கூட கடித்து விடாமல் சிரத்தையுடன் பாதுகாத்த நந்தகோபர் மகனுமான, சிங்கம் போல எந்த பயமும் இல்லாது மிடுக்காக ஆய்ப்பாடி முழுவதும் தன் சேட்டைகளால் அலைக்கழிக்க வைத்த மகனை,  மலர்ந்த மலர் போல, துளியும் உறங்காது விரிந்த கண்களுடன் ஒவ்வொரு வினாடியும் கண்காணித்து வந்த யசோசையின் மகனுமான நம்ம கண்ணனைப் போலவே கரும் மேனியும், சூரியன் போன்ற ஒளி பொருந்திய முகமும், செந்தாமரைப் போன்ற கண்களையும் உடையவர் தான் நாராயணன். கண்ணனைப் போலவே நம் மீது மிகுந்த கருணை கொண்டவர். 

அவரின்பால் தூய நோம்பிருக்கும் நமக்கே, இந்தச் சிற்றின்பத்திலிருந்து மீட்டு நல்ல முக்தியைத் தருவார் என்று முதல் பாசுரத்திலேயே முக்திக்கான முழு மந்திரத்தையும் ஒரே வார்த்தையில் நமக்கு அருளி விட்டார். அதென்ன ஒரே வார்த்தை?

ஓம் நமோநாராயணா!  

இந்த ஒற்றை மந்திரத்தில் உருகிச் சரணடைந்தால் மோட்சம் நிச்சயம்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.