திருப்பாவை – 2

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 18 Dec, 2018 02:21 pm
thiruppaavai-2

முக்தி என்பதை மறந்து விட்டு, இந்த வையத்து வாழ்வே பெருவாழ்வு என்று வாழ்ந்து கொண்டிருப்பதால், உங்கள் செவிகளும் மனதும் உண்மையைக் கேள்விப்படாமல் இருக்கின்றது. நம்முடைய இலக்கு இந்த உலகத்து இன்பத்துள் உறைந்து கிடைப்பது இல்லை. முறையான விரதம் இருந்து பரமபதம் அடைவதே! 

திருப்பாற்கடல் என்று ஒன்றிருக்கிறது. அதில் அமைதியாக ஆடாமல் அசையாமல் மென்மையாக துயில் கொண்டிருக்கும் பரந்தாமனுக்கு உள்ளே தான் அண்டசராசரங்கள் அத்தனையும் அடங்கியிருக்கிறது. நம் நோக்கத்தை நிறைவேற்றித் தர அவனுடைய தாளினை வேண்டி இருக்கப் போகும் நோன்பினை சில கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்.

 இந்த விரத காலத்தில் நாம் நெய் பால் முதலியவற்றை உண்ணப் போவதில்லை. ஆயர்பாடியில் மலிந்து கிடக்கும் பாலையும் நெய்யையுமே சாப்பிடப் போவதில்லை என்றால் பிற உணவுகளை நாம் எப்படிப் பார்க்கணும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். இந்த நிரந்தரமில்லா உடலின் மீது குவிந்துள்ள நம் கவனத்தை விலக்க வேண்டும். அதிகாலையிலேயே நீராடிவிட வேண்டும். குளித்து விட்டவுடன் வழக்கமாக நம்மை அலங்காரப்படுத்திக் கொள்வது போல் கண்களுக்கு மைதீட்டுவது, மலர்கள் சூடிக் கொள்வது போன்றவற்றை எல்லாம் செய்யப்போவதில்லை. அவையாவும் சக மனிதர்கள் கவனத்தைப் பெறச்செய்யும் செயல்களாகும். 

நம் நோம்பின் காலத்தில் நம் நோக்கம் பரமனின் கவனத்தை ஈர்ப்பதே! ஆகவே, நாம் வேத சாஸ்திரங்கள் செய்யக்கூடாது என்ற அறிவுறுத்தியவற்றைச் செய்யாமலும், சுடும்/கடும் சொற்களை பயன்படுத்தாமல் நாராயணன் புகழ் மட்டுமே பாடித் திளைத்திருப்போம்.

இப்படியான மனநிலையில், இயலாதவர்களுக்கு நம்மாலான உதவிகளையும், உயர்ந்த பொருள்களைக் கற்றுக் கொடுக்கும் குருமார்களுக்குத் தகுந்த காணிக்கைகளையும் கொடுக்க முடிபவர்கள் கொடுக்க வேண்டும். அதற்கு வசதியில்லாதவர்கள் வருத்தப்பட வேண்டாம், வசதியாக இருந்து அப்படிக் கொடுப்பவர்கள் யார் என்று வழிகாட்டினால் கூடப் போதும். இவற்றையெல்லாம் செய்வது தான் நம் பரமனடி செல்லும் பாதை என்று மனம் மகிழ்ந்து செய்ய வேண்டும்.

 “வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்."

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close