திருப்பாவை – 3

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 18 Dec, 2018 05:44 pm
thiruppaavai-3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி…
இந்தப் பாசுரத்தில் எதற்கு வாமன அவதாரம் முன்னிறுத்தப்படுகிறது? 

மஹாபலிச் சக்கரவர்த்தியிடம் மூவடி நிலம் யாசிக்க வந்த வாமனமூர்த்தி மூன்றாம் அடியாகப் பெற்றது என்னது? 

 “மஹாபலியின் சரணாகதி” 

பிரபஞ்ச சக்கரவர்த்தியின் மகிமையுணர்ந்து அவன் தாள் சரணடைந்து அவன் புகழ் பாடி, நம் நோம்பினை நோர்த்தோமென்றால், நாமிருக்கும் இந்த பூமியைச் செழிப்பாக்கும் வண்ணம், யாருக்கும் சிரமம் கொடுக்காத மழையாக மாதம் மூன்று முறை பெய்து நெற்கதிர்களை நன்றாக உயரமாக வளரச் செய்வார். அந்த நெல்வயல் முழுவதும் நீர் நிரம்பித் ததும்பி இருக்கும். மாதம் மும்மாரிப் பெய்வதால் தேக்கி வைத்த நீரை வயலுக்கு அனுப்பத் தேவையில்லை. ஆற்றினில் ஓடும் தெளிந்த நீர் அப்படியே வயல்களுக்குத் திறந்து விடப்படுகிறது. வயலுக்குத் திறந்து விடப்பட்ட நீரும் ஆற்றின் போக்கு தான் என்ற மயக்கத்தில் வந்த மீன்கள் நெற்கதிர்களின் இடையில் புகுந்து புகுந்து ஓடுகிறதாம். அதீதமாக மழை பொழிந்தால் வெள்ளம் ஏற்படும். அப்படியான வெள்ளம் வயல் பக்கம் பாய்ந்தால் கதிர்கள் அழிந்து விடும். அளவாகப் பெய்ததால் கலங்கல் இல்லாத நீரில் தடம் பார்த்து மீன்களால் புகுந்து புகுந்து போக வசதியாக இருக்கிறது.  

பொதுவாக வண்டுகள் நிறைய அலைந்து பல பூக்கள் தேடி ஒவ்வொன்றிலும்  தேன் சேகரித்துக் கொண்டு செல்லும். இங்கே பூவில் தேனுண்ட வண்டு, அந்தப் பூவிலேயே படுத்துறங்கி விட்டதாம். அத்தனை பெரிய பூக்கள் பூப்பது மட்டுமல்ல, ஒரு வண்டு வயிறு நிறைந்து மந்தத்தில் பூவிலேயே உறங்கி விடும் அளவிற்கு தேன் சுரக்கும் பூக்கள், பூத்துக் குலுங்குமாம்.

அப்படியே மாட்டுத் தொழுவத்திற்குள் புகுந்து பசுக்களின் மடிக்காம்பினைப் பற்றி வாங்கினால், போதும் போதும் என்று மனித மனமே சொல்லும் அளவிற்கு குடம் நிறைய பாலை ஈயும் பெரிய பசுக்கள் நிறைந்திருக்கும். 

பொதுவாக பால்  “கறப்பது” தான் இயல்பு. அதாவது பசுவின் மடிக்காம்பினைப் பற்றி அழுந்த இழுப்பது தான் பால் கறப்பது. இங்கே சும்மா காம்பினைப் பற்றினால் போதும் சுரந்து கொட்டும். அப்ப கறக்கத் தேவையில்லை வாங்கினால் போதும். அத்தனை செழிப்பான பூமியும் அதில் வாழ் உயிரினங்களும் மிகுந்த பூமி நீங்காத செல்வமாக இருக்கும்படி நாராயணன் நமக்கு வளம் கொடுப்பார். 

முக்தி வேண்டி இருக்கும் நோம்பில் உலக செல்வத்தின் மீது ஆர்வப்பட்டா கோதை நாச்சியார் பாடியிருப்பார்? ஆம்! முக்தி கிடைப்பது என்பது பூலோகத்தை விட்டு கிளம்பிய பிறகே! அது வரை பூமியில் வாழும் அனைத்துயிர்களும் இன்பமுற வாழ வேண்டும் அல்லவா? அதனால் தான் இந்த நோம்பும் வேண்டுதலும்.

“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். “

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close