திருப்பாவை – 5

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 19 Dec, 2018 08:27 pm

thiruppaavai-5

அண்டசராசரங்களையெல்லாம் படைத்து அவற்றையெல்லாம் தன்னுள் கொண்டு எங்கும் வீற்றிருந்தாலும் நம் கண்களுக்குப் புலப்படாத மாயனாகிய பரப்பிரம்மம் விரும்பி வந்து பிறந்ததால் அது மாண்பிற்கும் புகழுக்கும் உரிய வடமதுரையாகியது.  மக்களின் அன்பிற்குக் கட்டுப்பட்டு வடமதுரை மக்களுக்கெல்லாம் மைந்தனாக மகிழ்வித்த மாயக் கிருஷ்ணன் அவன். 

கிருஷ்ணன் யமுனையில் உறைபவனாக இருப்பதால் அந்தப் பெரிய ஆறு தூய்மை பெற்றது. அந்தத் தூய யமுனைத் துறைக்கு உரியவனான கிருஷ்ணன், அங்கேயிருக்கும் ஆயர் குலத்திற்கே அழகு சேர்த்தவன். ஆயர்குலத்தினரை  “அறிவொன்றும் இல்லாத ஆயர்குலம்” என்று சொல்வார்கள். அது இழிவன்று. நாம் எல்லாரும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது நம் அம்மாவைப் பார்த்து சும்மா இரும்மா உனக்கு ஒன்னும் தெரியாதுனு சொல்லியிருப்போம். ஆம்! நம் அம்மாக்கள் ஒன்றும் தெரியாத அறிவில்லாதவர்கள் தான். அன்பு நிறைந்திருக்கும் இடத்தில் அறிவுக்கு வேலையே கிடையாது. அப்படி அறிவுக்கு வேலை கொடுக்காத ஆயர்குல மக்களின் அன்பை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய மாயக் கண்ணன் அவன். 

அவன், தன்னை வளர்த்தவர்களுக்கு மட்டுமல்ல, தன்னைப் பெற்றதால் தேவகியின் வயிற்றினையும் புனிதமாக்கியவன். இன்னொரு பக்கம் வளர்த்தவளின் பாசத்திற்குக் கட்டுப்பட்டு உரலில் கட்டுண்ட தாமோதரன் அவன். 

ஒரே நேரத்தில், ஒரு ஊருக்கே செல்லப்பிள்ளையாகவும், ஒரு பெரிய நதியின் தூய்மைக்குக் காரணமானவனும், தான் பிறந்த குலத்திற்குப் பெருமை சேர்ப்பவனாகவும், தன்னைப் பெற்ற தாயின் கர்ப்பத்தைப் புனிதமாக்கியாக்கியவனும், வளர்த்தவளின் அன்பிற்குக் கட்டுப்பட்டு கட்டுண்டு நடித்துக் கொண்டிருந்தவனை மாயன் என்று சொல்லாமல் என்ன சொல்வதாம்? 

அப்படியான மாயனை, தூய மனத்துடனும் வந்து மலர்த்தூவி வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தால் இது வரை நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் தீயில் விழுந்த தூசி பொசுங்கும் நேரத்திற்குள் நீக்கிவிடுவான்.

எப்படி வேண்டணும் என்பதைக் கவனியுங்கள். 
அலுவலகம் முடிந்ததும், வாகனத்தில் ஏறி உட்கார்ந்து ஓட்ட ஆரம்பித்தால், நம்மையறியாமல், அநிச்சையாக எல்லா சாலைகள் சந்துகளைக் கடந்து நம் வீட்டினை வந்து சேருவோம் இல்லையா? அது போல,  கண்ணனை ஆழ்மனதில் முழுமையாகத் தரித்துக் கொண்டோமானால், வாயானது தானாக அவன் புகழ் பாடிக் கொண்டேயிருக்கும், அவனைப் பூஜிப்பதும் அநிச்சையாகி விடும். 

  “மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்”

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.