திருப்பாவை – 7

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 22 Dec, 2018 09:38 am

thiruppaavai-7

மனித குணத்தைத் துறந்து பேய் குணம் பூண்டதால் மாயைத் தூக்கத்திலிருந்து இன்னும் எழாமல் கிடக்கிறாயே எழுந்து கொள் நாராயணனின் உண்மைத் தன்மை அறிய நல்ல காலம் பிறந்து விட்டது என்று எழுப்புகிறார். 

பேய்ப் பெண்ணே என்பது மனித நோக்கம், குணம் போன்றவற்றை இழந்திருக்கும் தன்மை.

எழுந்து கவனி, ஆனைச் சாத்தன் குருவிகள் தங்கள் இணையுடன் கலந்து பேசும் ஒலி, நாம் நாராயணனின் நாம கீர்த்தனை பாடி அவனுடன் கலக்கத் தூண்டுகின்றன. ஐந்தறிவு ஜீவன்களையும் விட தாழ்ந்து மதிமயங்கிக் கிடக்கலாமோ?
 
தேவர்களும் அசுரர்களும் ஆளுக்கொரு பக்கம் இருந்து கொண்டு மேருமலையை மத்தாகக் கொண்டு, அதைத் தாங்க கூர்ம அவதாரமான ஆமையை அடியிற்கொண்டு பாற்கடலைக் கடைந்து நல்லோர் வாழ அமிர்தம் சமைத்தனரே… அப்படி மத்தினைக் கொண்டு தயிர் கடையும் சத்தம் உனக்குக் கேட்கவில்லையா? 
அமிழ்தம் என்றொன்று இருக்கிறது. அதை அடைய வேண்டும் என்ற ஆவல் பிறக்கவில்லையா?

ஆய்ச்சியர் அணிந்திருக்கும் அணிகலன்கள் ஓசை எழுப்பும் அளவிற்கு கடைகிறார்கள். கை வலிக்கும் அளவுக்கு கடைந்தால் தான் வெண்ணெய் என்ற உட்பொருள் கிடைக்கும். நீ இப்படி சோம்பித் தூங்கிக் கிடந்தால் உண்மைத் தன்மை அறியாமல் போய் விடுவாய். 

நீ நம் நாயகனின் பெண்ணாகிய திருமகளைப் போன்றவள்.

பெண்ணே கேசவனாக அவதாரம் கொண்ட நாராயணனின் புகழ் பாடுவதைக் கேட்டுக் கொண்டும் இப்படி மதிமயங்கி கிடக்கலாமோ? 

எழு, விழி,  உனக்குள் தேங்கியிருக்கும் ஒளியினைத் திற. 
“கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய். “

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.