திருப்பாவை - 10

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 25 Dec, 2018 01:09 pm

thirupavai-10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்… 
இவள் மனதளவில் கிருஷ்ணனே வந்து தன்னை ஆட்கொண்டதாக வரித்துக் கொண்டு மையல் கொண்டிருக்கிறாள். அதாவது, ஜீவாத்மா தானே முயன்று சென்று பரமாத்மாவை அடைய வேண்டும். ஆனால், இவளோ வேறொரு சுகானுபவத்தை மனதிற் கொண்டு அதிலிருந்து மீளாமல் தனக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். 

இப்படி மனதிற்குள்ளேயே வாழ்ந்து கிடக்காமல் அந்த நிலையிலிருந்து மாறி நாராயணனை போற்றிப் பாடித் துதிக்கக் கிளம்பி வா. 
உடல் போகத்தை ஊக்குவிக்கும் மற்ற மலர்களில் வீழ்ந்து கிடக்காமல், நாராயணனின் பூஜைக்குரிய துளசி மீது நாட்டம் கொண்டு பக்தி கொள்ள வா. 
மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, வாயாலும் பாடினால் தான் நாராயணனின் பரமபதம் அடையலாம்.

இதுவெல்லாம் புரியாமல் சோம்பிப் போய் படுக்கையிலேயே கிடக்கிறாயே? தூங்கிக் கிடக்கிறாயே… அவ்வளவு பெரிய தூக்கத்தை உனக்குக் கொடுத்தது யாராக இருக்க முடியும்? தூக்கத்திலும் சோம்பலிலும் தன் பெரும்பாலான வாழ்வைக் கழித்த கும்பகர்ணனாகத் தான் இருக்க முடியும். 
ஸ்ரீராமனால் வெல்லப்பட்ட, “கும்பகர்ணன் ரூபத்திலிருந்த தூக்கம்” அங்கிருந்து தப்பி உன்னிடம் வந்து சேர்ந்ததோ? 

 (ஸ்ரீராமர் மானுடனாகவும், ராவணன் பத்து பெருந்தீய குணங்கள் எனவும் ராவணனின் பரிவாரங்களில் கும்பகர்ணன் என்பது தூக்கம் எனவும், மாரீசன் பெண்ணாசை எனவும், தாடகை என்பது அறியாமை/கல்லாமை/அவிக்த்யை என்றும் உட்பொருள் கொண்டு பார்த்தால் ராமாயணம் நமக்கு வேறொரு பரிமாணம் காட்டும்.) 

மிகவும் சோம்பலும் உறக்கத்திலும் திளைத்திருப்பவளே, நீ அதற்காகப் படைக்கப்படவில்லை. அரிய வாழ்வைப் பெற்ற போற்றுதலுக்குரிய பெண். அந்த மயக்கத்திலிருந்து தெளிந்து உன் மன மாயையை விலக்கிவிட்டு கிளம்பி வா!

 “நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால்

பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த

கும்ப கருணனும் தோற்றும் உனக்கே

பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற

அனந்தல் உடையாய் அருங்கலமே

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.”

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.