உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்

  கோமதி   | Last Modified : 26 Dec, 2018 02:26 pm

this-is-the-picture-we-should-have-in-our-puja-room-wherever-point-in-the-world


எல்லா பிரச்னைகளுக்குமே தீர்வு காண முடியும் என்பதால் தான் இறைவன் பாரபட்சமின்றி அனைவருக்கும் உரிய நேரத்தில் அதை எதிர்கொள்ளவும்,  ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து அவற்றிலிருந்து வெளிபடவும் செய்கிறான். தீர்வே காண முடியாத பிரச்னை உண்டு என்று புலம்புபவர்களிடம் உங்கள் குலதெய்வத்தை வழிபட்டீர்களா என்று கேட்டால்... இல்லையே என்று தான் சொல்வார்கள். குலத்தையும் குடும்பத்தையும் வழிவழியாக காக்கும் குலதெய்வத்தால் மட்டுமே ஒருவனது தீர்க்க முடியாத பிரச்னைகளளையும் தீர்க்க முடியும். ஜாதக ரீதியாக கிரகங்களும் நற்பலன்களைக் கொடுக்க முடியாமல் கைவிடும்போதும் எத்தகைய பரிகாரம் செய்தாலும் அதன் பாதிப்பிலிருந்து மீளவே  முடியாதோ என்று ஒடுங்கும் போதும் நம்மை மீட்டெடுக்க நமது பாட்டனார் முப்பாட்டனார் என பரம்பரை பரம்பரையாக வாழையடி வாழையாக அவர்கள் வணங்கிவந்த ஊர் தெய்வமான குலதெய்வத்தை வணங்கினாலே போதும்.  

உக்கிரமான தெய்வமாக இருந்தாலும், சாந்தமான கடவுளாக இருந்தாலும், ஐயனாராக இருந்தாலும் எத்தகைய பிரச்னைகளிலிருந்தும் ஒருவனுடைய குலதெய்வத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும். பரிகாரங்களை உரிய கடவுளுக்குச் செய்யாமல் குலதெய்வத்தை வழிபட்டால் எப்படி மீள முடியும் ஒருவனது குலத்தை வாழையடி வாழையாக தழைத்து,வாழும் ஒவ்வொரு நொடியிலும் துணைநிற்பது அவனது குலதெய்வம்தான். குலதெய்வத்தைத் திருப்திபடுத்தாத எந்தவொரு வழிபாடும், செய்தொழிலும் நிச்சயம் பயன் தராது. குலதெய்வத்தை விட்டு உலகின் ஏதோ ஒரு மூலையில் நீங்கள் வசித்தாலும் உங்கள் பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய உருவப்படம் உங்கள் குலதெய்வம்தான்.

மனம் அமைதியை நாடும் போதெல்லாம் குலதெய்வ கோயிலுக்கு சென்று பூஜை செய்து வழிபடுங்கள். வெளியூரில் வசித்தாலும் வருடம் ஒருமுறையாவது குலதெய்வத்தைத் தரிசனம் செய்து, அவரவர்கள் வழிபாட்டுக்கேற்றபடி பொங்கல் வைத்து படையிலிட்டு,குலதெய்வத்துக்கு புதிய ஆடைகளுடன் அபிஷேகம் செய்து, இயன்ற காணிக்கையை அளிப்பதைக் கட்டாயமாக்கி கொள்ளவேண்டும். உங்களது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உங்கள் குலதெய்வத்துக்கு உண்டு. உங்கள் பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் முதலில் உங்கள் குலதெய்வத்தை வணங்கிய பிறகே பிடித்த கடவுள்களிடம் வேண்டுங்கள். ஏனெனில் இஷ்ட தெய்வ வழிபாட்டில் விரும்பும் நலன்கள் கூட,நாம் வணங்கும் குலதெய்வ வழிபாட்டில் தான் அடங்கியுள்ளது.

வேண்டும் வரமும், விரும்பிய வாழ்க்கையும் அடைய,தவறாமல் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் தொடர்ந்து கடும் சோதனைகளைச் சந்தித்து வந்தால் நிச்சயம் குலதெய்வத்தின் கோபத்தை சம்பாதித்திருக்கிறோம் என்பதை உணரலாம். பிரார்த்தனைகள் பலிதம் அடைந்தால் நேர்த்திக்கடனாக இதைச் செய்கிறென் என்று வேண்டி, சொன்னபடி அதை செய்யவும் வேண்டும். குலதெய்வத்துக்கு குறைவைத்தால் வம்சம் விருத்தியாகாது என்று வீட்டுப்பெரியவர்கள் சொல்வது இதனால்தான்.

தீராத கடன் பிரச்னை இருப்பவர்கள் ஒன்பது பெளர்ணமிக்கு விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும் என்பது ஐதிகம். பெளர்ணமியன்று பூஜையறையில் குலதெய்வ படத்தின் முன்பு ஐந்துமுக விளக்கில் நெய்தீபம் ஏற்றி குலதெய்வத்துக்குரிய வழிபாட்டின்படி படையல் இட்டு வழிபட வேண்டும். பிரார்த்தனை முழுவதும் கடன் பிரச்னை தீரவேண்டும் என்று மனமுருக வேண்டினால், நினைத்தது நினைத்தப்படி கடன் பிரச்னை தீர குலதெய்வம் அருள் புரியும்.

குலதெய்வம் வழிபட்டால் கஷ்டமே கிடையாதா என்று கேட்காதீர்கள். அப்படியல்ல, கஷ்டங்களை குறைத்து,அதை தாங்கும் வல்லமையையும்  அதை தாண்டி வரும் சக்தியையும் குலதெய்வத்தால் அருள முடியும்.ஆயிரம் கோயில்களுக்குச் சென்றாலும் கிடைக்காத பேறு குலதெய்வ கோயிலில் அந்த சன்னிதியில் சென்று வழிபட்டால் கிட்டிவிடும். பக்தி என்பதையும் ஆண்டவனையும் அறிவதற்கு முன்பே நாம் குலதெய்வ வழிபாட்டை பெற்றோர்கள் மூலம்  செய்திருக்கிறோம். நமக்கு முன்னோர்கள் விட்டுப்போன மதிப்புமிக்க சொத்து குலதெய்வம் தான். குடும்பத்தில் ஏற்படும் அத்தனை தடைகளையும் நீக்கி வாழ்வில் வளம் பெற குலதெய்வத்தை  வழிபடுவோம். வரும் சந்ததியினருக்கும் கற்றுதருவோம். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.