திருப்பாவை -12

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 26 Dec, 2018 06:22 pm

thiruppaavai-12

ஒரு குழந்தையின் மீதான பாதுகாப்பினை அதன் தாத்தா பாட்டிகள் அரவணைத்து, கைகளைப் பற்றிக் கொண்டு காட்டுவர். அந்தக் குழந்தையின் தந்தை குழந்தை எங்கெங்கே சென்றாலும் தன் பார்வையை அகற்றாமல் கண்காணித்துக் காப்பார். அதுவே தாய், அந்தக் குழந்தையைப் பற்றியிருக்கவோ, பார்வையால் கண்காணிக்கவும் கூட அவசியம் இல்லை. மனதால் நினைத்தே காப்பாள்.

தீட்சை வழங்குவதில் மூன்று வகை இருக்கிறது. ஸ்பரிச தீட்சை (தொட்டு வழங்குவது, நயன தீட்சை(கருணைப் பார்வையால் வழங்குவது), பாவன தீட்சை (மனதால் நினைத்து தொடாமல் பார்க்காமல் வழங்குவது). இதனை பறவைகள் முட்டை மீதமர்ந்து குஞ்சு பொறிப்பது, மீன் பார்த்தே தன் முட்டைகளைப் பொறிப்பது, ஆமை எங்கோ தொலைவிலிருந்து நினைவாலேயே தன் முட்டைகளைப் பொறிக்கச் செய்வது என்பதனை உதாரணத்திற்குக் கொள்வர்.

அதே போல், கருணைக்கடலான நாராயணன் நம்மைக் காக்க நேரில் கூட வரவேண்டாம் நினைத்தாலே கருணை மழை பொழிந்து நம்முடன் சேர்ந்து உலகமக்களும் உய்யச் செய்வாராம். அதைத் தான் இங்கே எருமை, தன் கன்றுகளை நினைத்த மாத்திரத்தில் பால் சொரிந்து அது தரையெல்லாம் விரவி வீடெல்லாம் சேறாகி விடுகிறதாம். எங்கோ தூரத்தில் இருப்பவரை மனதார வாழ்த்தும் போது கூட அதீத அன்பில் வாய்விட்டு நல்லாயிருப்பா என்று சொல்வார்கள். அப்படியான அன்பில் கனைத்துச் சொரியும் அளவிற்கு கருணையும் செல்வமும் உடையவனின் தங்கையே!

மீண்டும் கவனிக்க வேண்டிய விசயம். எருமை இங்கே எமனுக்கான குறியீடு. அவன் உன் மீதுள்ள கருணையால் இன்னும் விட்டு வைத்திருக்கிறான். உனக்கேதும் நிகழ்ந்து விடக் கூடாது என்று பனியில் நனைந்து நடுங்குவது போல் பயந்து காத்திருக்கிறோம். நீயோ வாயே திறக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய். 

கடுங்கோபம் உடைய இலங்கை வேந்தனான ராவணனை கொன்றழித்தது போல் நம் துன்பத்தை அழித்து நம்மைக் காக்க வல்ல ஸ்ரீராமனைப் பாடச் சொல்லாமல் உனக்காகக் காத்திருக்கிறோம். சுற்றியிருக்கும் வீட்டாரெலாம் எங்கள் சூழலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது கூட புரியாமல் இது என்ன பேருறக்கம்? எழுந்து வா பெண்ணே! 
 
 "கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்".

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.