திருப்பாவை – 18

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 01 Jan, 2019 10:27 pm

thiruppaavai-18

இன்றைக்கு ரொம்ப விசேஷம். பரமாத்மாவை ரொம்ப நெருங்கி விட்டோம். ஏனென்றால், நாராயணன் தன் மார்பிலும் மடியிலும்  வைத்துக் கொண்டாடும் அவரின் பிரியமான மகாலக்ஷ்மியை, உலக மக்களின் தாயாரை அழைக்கப் போகிறோம். 

உந்து மதக்  களிற்றன்  தோள் வலியன் நந்தகோபன் மருமகளே…

கிருஷ்ணனை வர்ணித்து இன்னாரின் மனைவியே என்று அழைத்தால் தானே கூடுதல் பெருமை? அதென்ன நந்தகோபருக்கு மருமகளே? உந்து மதக் களிற்றன் என்று வந்ததால், யானையை வைத்தே காரணம் பார்ப்போம். பெண் யானை தான் கருவுறத் தயாராகி விட்டால்  ஒரு மாதிரி மீயொலி எழுப்பிப் பிளிருமாம். அது பல நூறு கிமீ தாண்டியும் ஆண் யானைகளுக்குக் கேட்கும். அப்படி சத்தம் கேட்ட யானைகள் பிளிரிய பெண் யானையை நோக்கி வரும். இடத்தை நெருங்க நெருங்க ஆண் யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு, இறுதியில் ஜெயிக்கும் யானை தான் பிளிரிய பெண் யானையுடன் கலவ அனுமதிக்கும். தன் வயிற்றில் வளர வேண்டிய வித்தினைத் தேர்ந்தெடுப்பதில் அத்தனை கவனம் பெண்மைக்கு. இத்தனை யானைகளைக் கடந்து வர வேண்டும் என்றால், அந்த யானையின் சந்ததி எத்தனை வலிமையானதாக இருக்க வேண்டும் என்று யூகித்துக் கொள்ளுங்கள். 

மதம் பொங்கும் ஆண் யானைப் போன்றவனும், புறமுதுகு அறியாத மிகுந்த பலத்தையுடைய தோள்களைக் கொண்டவனுமாகிய நந்தகோபனின் மருமகளே என்பதில், அவள் எப்பேர்பட்டவனின் மனைவி என்பதும், எப்படியான மகவைப் பெறப் போகிறாள் என்ற பெருமையையும் ஒருங்கே தெரியப்படுத்தியாகி விட்டது. 

அப்படிப்பட்ட கணவனுக்கு வாய்த்த மணாட்டி மட்டும் சாதாரணமானவளா? பரிமளம் மணக்கும் கூந்தலுடையவள். உறங்கி எழும் போதுகூட மணம் வீசும் கூந்தலுடைய நல்ல பெண்ணே நப்பின்னை வந்து கதவைத் திற தாயே...

கோழிகளெல்லாம் விழித்து இரை தேட விரவி ஒன்றையொன்று சத்தமிட்டு அழைத்துக் கொள்கின்றன பார், தூங்கிய குயில்கள் எல்லாம் எழுந்து பலமுறை கூவி விட்டன. இரவெல்லாம் மலர்களைப் பந்தாக விளையாடிய விரலை உடையவளே! உன் கணவனைத் தான் துதித்துப் பாட வந்திருக்கிறோம். அது உனக்கு மகிழ்வான விசயம் இல்லையா? ஆகவே, உன் செந்தாமரைப் போன்ற கைகளில் உள்ள வளையல்கள் ஒலிக்க மகிழ்ச்சியாக வந்து கதவைத் திற தாயே!

 "உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்

கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்

வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்

செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்"

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.