திருப்பாவை - 21

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 04 Jan, 2019 10:02 pm
thiruppaavai-21

கோகுலமே செல்வத்திற்குப் பெயர் போனது. அவர்களின் பாத்திரங்கள் அத்தனை சிறியதாகவா இருந்துவிடப் போகிறது? அவ்வளவு பெரிய பாத்திரங்களைக் கொண்டு போய் பசுக்கள் முன் வைத்தால் அத்தனையும் நிறைந்து பொங்கி வழியும் அளவிற்குப் பாலைச் சொரியுமாம் பசுக்கள். கவனிக்கவும், கறக்க வேண்டாம். அப்படியே பொழியும். வள்ளல் போல பொழியும் பாலினை மனமுவந்து பொழியும் பெரிய பசுக்களாம். அது போன்ற பசுக்களை ஏராளமாகக் கொண்டுள்ள செல்வம் மிக்க நந்த கோபனுடையத் திருமகனே! உன் வாசல் தேடி வந்திருப்பதை உணர்வீராக!

இதற்கு முன்னால் நந்தகோபர் அக்கறைக்காகவும், வீரத்திற்காகவும் புகழப்பட்டார். இங்கே அவருடைய செல்வச் சிறப்பிற்காகப் புகழப்படுகிறார். (இவ்வளவு செல்வம் வச்சிருந்து என்ன பண்ண, களவானிக் கண்ணன் அண்டை வீட்டு வெண்ணெய்க்கு அல்லவா அலைந்தான்?) 

தன் அடியவர்களைக் காப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவனே! இப்படிக் காத்துக் காத்து உன் பெருமை அளவிலாமல் பெருகிக் கிடக்கிறது. உலகம் தோன்றுமுன் ஆதியில் தோன்றிய ஜோதியை யாரும் கண்டதில்லை என்ற குறை போக்க இவ்வுலகில் அவதரித்த ஒளி பொருந்தியவனே! எழுந்திரு கண்ணா!

உன்னை வெல்ல முடியாதென்று உணர்ந்த உன் எதிரிகளெல்லாம் வேறு அடைக்கலம் ஏதுமின்றி உன்னையே அடைக்கலமாக உன் வீட்டின் வாசலில் வந்து சரண் புகுவது போல, உன் அடியவர்களாகிய நாங்களும் உன்னைத் துதித்துப் பாடிப் போற்ற உன் இல்லம் வந்திருக்கிறோம்.  எழுந்தருள்வாய் கண்ணா!

 “ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்

ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.”

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close