மந்திரங்கள் என்பது மாயமல்ல: அவை சரணாகதிக்கான மார்கம் 

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 02:36 pm
mantras-is-not-about-magic-but-explains-about-surrender

 

ஆனந்தன் அமிர்தன்

 

ஓரிரு நாட்களில் நடந்த நான்கு சம்பவங்கள் இதனை எழுதத் தூண்டியது. உங்கள் வாழ்க்கையிலும் இது போல் நிகழ்ந்திருக்கலாம்.

 

முதல் சம்பவம் : அண்ணன் திரு. வில்லவன் கோதை ஒரு சிறு கோவிலில் தான் நேரில் பார்த்ததை ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார்.

“ வனாந்திரத்தில் ஓர் ஐய்யனார் கோவில், வழிபட உள்ளே நுழையும் முன் சற்றே உரத்த குரலில், ‘சாமீய்ய்… உன் கண் அவிஞ்சா போச்சு…? எனக்கொரு மாலை எடுத்து தரமாட்டியா?’ என்று சத்தம் கேட்கிறது. யாரென்று பார்த்தால் அங்கே, தன் இளமைத் தனிமையை சக மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத ஓர்  “ஆடு மேய்க்கும் முதிர்கன்னி” “. மனதிற்குள் வேண்டி வேண்டி கடவுள் செவிடாகி விட்டார் போல என்று நினைத்துக் கொண்டு, குருடா(கவும்)யிட்டியா என்று உரக்கத் திட்டுகிறாள்.

 

சம்பவம் இரண்டு : “ சகோதரர் திரு. பவானி ஆனந்த் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது பகிர்ந்து கொண்ட விசயம், அவரது அமெரிக்க நண்பர் ஒருவர் ஆன்மீக நாட்டத்தில் இந்தியா வந்து ஒரு குருவை நாடி சிஷ்யராக ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறார். குரு, பிறகு பார்க்கலாம் பிறகு பார்க்கலாம் என்று 7-8 வருடங்கள் அலைய விட்டிருக்கிறார். அதன் பிறகு அவருக்கு ஞான உபதேசம் செய்திருக்கிறார். ஏழு வருடங்கள் அலையோ அலைன்னு அலைந்து அவர் கற்றுக் கொண்டது வெறும் ஓர் ஐந்தெழுத்து தானாம். அது “நமசிவாய”. அதனை கற்ற பின் வந்து கண்ணீருடன் சொன்னாராம்,! இவ்வளவு பெரிய விசயத்தை இத்தனை சீக்கிரம் அறிந்து கொண்டேனே, இன்னும் ஐந்து வருடங்கள் அலைந்திருந்தாலும் தகும் என்று ஆனந்தப் பட்டிருக்கிறார்.  பாரத தேசத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஓம் நமசிவாய என்ற மந்திரம் கண்ணில் படும் அல்லது காதில் கேட்டு விடும். அதுக்கெதுக்கய்யா ஏழெட்டு வருடங்கள் அலைய விட்டார் அந்த குரு நாதர்? என்று கேள்வி எழலாம். மிச்ச சம்பவங்களைச் சொல்லி விட்டு விளக்குகிறேன்.

 

சம்பவம் மூன்று : திருக்கோஷ்டியூர் சென்றிருந்தேன். ஞானம் பெற வேண்டி ஸ்வாமி ஸ்ரீ ராமாநுஜர், ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு 17 முறை  நடந்தே அலைந்த கதையையும் “ நான்” செத்த பிறகு வா கற்றுத் தருகிறேன் என்று ஸ்வாமி ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி அலைய விட்டு, பிறகு கற்றுக் கொடுத்ததை, கோவில் மாடத்தில் ஏறி நின்று கொண்டு குருநாதர் கற்றுக் கொடுத்த அஷ்டாச்சர மந்திரமான ஓம் நமோ நாராயணாய – வை உரக்க எல்லாருக்கும் கற்றுக் கொடுத்ததையும் (மீண்டும்) கேட்டேன்.

 

சம்பவம் நான்கு : அன்று மாலையே மதுரை அழகர் கோவிலில் கள்ளழகரை தரிசிக்கச் சென்றிருந்தோம். பொதுவாக எந்த கோவிலிலும் சிறப்பு/கட்டன தரிசனம் செய்வதில்லை. நேற்று பொது தரிசனம் செல்லும் போது தெரியாமல் தவறுதலாக ஒரு ஜப்பானியக் குழுவினருடன் சேர்த்து சிறப்பு தரிசனத்திற்குள் தள்ளப்பட்டோம். சுமார் பத்து பன்னிரண்டு ஆண் – பெண் குழுவில் ஒரு பெண்மணி மட்டும் மூலவரைப் பார்த்து அரை முதுகு வளைந்து கும்பிட்டு அழுது கொண்டிருந்தார் முதலில் ஜப்பானியர்களுக்கேயுரிய முக பாவனை என்று திரும்பி விட்டேன், பிறகு சற்று கூர்ந்து கவனித்த போது,  கொலை செய்ய வந்தக் கூட்டத்தில் தனியாக சிக்கிக் கொண்டால் தன்னை விட்டு விடும்படி எப்படி மன்றாடுவோமோ அப்படி பெருமாளைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டே தாரை தாரையாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கோலம் என்னை உலுக்கிவிட்டது. கண்முன் ஒரு சரணாகதி அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

 

 

மொழி/ எல்லை/ இனம் என்று எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு பெண் ஒரு விக்கிரஹத்தில் பெருமாளை தரிசித்துக் கொண்டிருக்கிறார். தனக்கும் இறைவனுக்குமான பந்தத்தை உணர்வது அவரது உடல்மொழியிலும் கண்ணீரிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. ஏனோ மனதில் ஆண்டாளும், வில்லவன் கோதை அண்ணா குறிப்பிட்டிருந்த அந்த முதிர்கன்னியும் ஒருசேர மனதில் வந்து நின்றனர்.

 

இனி விசயத்திற்கு வருவோம் :

 

அதென்ன ஐந்தெழுத்து மந்திரம், எட்டெழுத்து மந்திரம், சரணாகதி என்றெல்லாம் சொல்லிட்டு இருக்காங்க?  இந்த மந்திரங்களைச் சொன்னால் விரும்பியதெல்லாம் நடந்திடுமா இல்லை மோட்சம் தான் கிடைச்சுடுமா?

அப்படி கிடைப்பதாக இருந்தால் இந்தியாவில் பிறந்த முக்கால்வாசி பேர்கள் செல்வந்தர்களாகவும், மறுபிறப்பற்றவர்களாகவும் தானே இருந்திருப்பார்கள்?

 

அப்படியான அந்த மந்திரத்தின் விளக்கம் தான் என்ன? (இது குறித்து ஒரு சதம் விளக்கும் அளவுக்குக் கூட அடியேனுக்கு அறிவு பத்தாது என்பதால், ஆங்காங்கே படித்ததில் புரிந்ததை மேலோட்டமாகக் கோடிட்டுக் காட்டுகிறேன்).

 

 

ஓம் நமசிவாய! : ஓம் நமோ நாராயணாய!!

 

ஓம் என்பது பிரணவ மந்திரம். அதாவது பிரபஞ்சமெங்கும் கேட்கும் ஒலி. அனைத்து ஒலிகளுக்கும் மூலம். தொடர்ந்து உச்சரிக்கும் போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் இணைய உதவுகிறது.

 

நம/நமோ என்பது பணிந்து வணங்குகிறேன், சரணடைகிறேன், உணர்ந்து வணங்குகிறேன் என்பதான பொருள் கொண்டது.

 

சிவாய / நாராயணாய என்பது பரம்பொருளுக்கான குறியீடாக நாம் வைத்துக் கொண்ட பெயர்.

 

கோடான கோடி அண்டங்களைக் கொண்ட பிரபஞ்ச நாயகனே! உன்னைப் பணிந்து வணங்குகிறேன் என்பதானது தான் அந்த மந்திரம். இவ்வளவு தானா? இது தான் நமக்குத் தெரியுமே இதுக்குப் போயி இத்தனை பெரிய பில்ட்-அப் எல்லாம் கொடுக்குறீங்க என்று மனதில் எழலாம்.

 

இந்த மந்திரம் என்பது என்னவெனில், உதாரணத்திற்கு நான்கு வேத நூல்களையும் ஒன்றாக இணைத்து ஒரு புத்தகமாகப் போட்டு, அதன் மேல் ஒரு அட்டை(COVER) போட்டு, அந்த அட்டை மேல் “சதுர்வேதம்” என்று எழுதி வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெயரை ஒருவர் வாசித்து விட்டு ஓ அவ்வளவு தானா நான்கு வேதங்களும் என்றோ, நான்கு வேதங்களும் எனக்குத் தெரியும் என்று சொன்னாலோ அவரை எப்படி பார்ப்போம்? அது போலவே இறைவனின் திருக்குணத்தையும் மானுடராகிய நம்மைப் பற்றிய உண்மைப் பொருளையும் உணர்ந்தால் (படித்தால், கேட்டால் அல்ல! உணர்ந்தால்) மட்டுமே, இந்த ஐந்தெழுத்து, எட்டெழுத்து வார்த்தைகளானது மந்திரம் என கொள்ளப்படும்.

 

அப்படி இல்லாது இம்மந்திரங்களை உச்சரிப்பது என்பது, கடைக்குப் போகும் குழந்தை மறக்காமல் இருக்க சீரகம் ஐம்பது , சீரகம் ஐம்பது, சீரகம் ஐம்பது என்று சொல்லிக் கொண்டே போவது போல, சிவாயநம, நமோ நாராயணாய மந்திரத்தை உணராமல் இந்த ஜென்மத்தை முடித்துக் கொள்ளக் கூடாது என்று நம்மை நாமே நினைவுபடுத்திக் கொள்வதற்காக, நம்மைச் சுற்றிலும் இம்மந்திரங்களை வியாபிக்கச் செய்திருக்கிறார்கள். இப்பொழுது கொஞ்சம் புரிந்திருக்கும் ஏன் அந்த அமெரிக்கரும், ஸ்ரீ ராமாநுஜரும் அத்தனை தூரம் அலைந்திருக்கிறார்கள் என்று!

 

பரம்பொருள் பற்றிய உண்மை என்பது ஏதோ பசிக்குது ரெண்டு இட்லி கொடுங்க என்று கேட்டுப் பெரும் விசயமில்லை. அது நம் ஆன்மா விழித்தெழுந்து ஆர்வமாகக் கேட்க வேண்டியது. உடல் சுருங்கி, உயிர் விரிந்து மனம் குவிந்து மண்டியிட்டு இரைந்து கேட்பவர்களுக்கு மட்டுமே குருநாதர் கற்றுக் கொடுப்பார்.

 

அப்படியென்றால்,  படித்தவர்களுக்கு மட்டும் தான் மோட்சம் முக்தி இதெல்லாம் கிடைக்குமா? குருநாதர் இல்லாமல் முக்தியடைய முடியாதா? வேதம் தெரியாத பாமரர்களுக்கு பரந்தாமன் அருள மாட்டாரா என்று யோசிக்க வேண்டாம்.

 

ஒன்று முன்னோர்கள் உணர்ந்து ஓதி வைத்துச் சென்ற வேத விசயங்களைப் படித்து அதன் படி நடந்து உண்மையை அறியலாம். ஐந்தெழுத்து மந்திரம் கற்றுக் கொண்ட அந்த அமெரிக்கர் போலவோ, எட்டெழுத்து மந்திரம் கற்றுக் கொண்ட எம்பெருமானார் ஸ்ரீ ராமாநுஜர் போலவோ படித்துணர்ந்து இறைவனுடன் பேசலாம்.

அல்லது மொழியறிவு கூட இல்லாத அந்த ஆடு மேய்க்கும் முதிர்கன்னி போலவோ, அழுது தொழுத ஜப்பானியப் பெண் போலவோ உணர்வால் இறைவனிடம் பேசலாம்.

 

இறைவன் மீது நம்பிக்கையும் நாட்டமும் இருந்தால் மட்டும் போதும் மொழி, இனம், எல்லை எல்லாம் மனிதர்களுக்கு தான். படித்த விவேகாநந்தரையும் படிக்காத ரமணரையும், மகரிஷிகளாகக் கொண்டது தான் சநாதான தர்மம்.

 

ஓம் நமசிவாய! ஓம் நமோ நாராயணாய!!

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close