பொங்கல் ஸ்பெஷல் - துயரங்களைப் போக்கும் போ(க்)கி பண்டிகை

  கோமதி   | Last Modified : 13 Jan, 2019 11:29 am

pongal-special-the-festival-that-removes-sorrow-in-our-life

மார்கழி மாதத்தின் இறுதி நாளை போகிப் பண்டிகையாக கொண்டாடுகிறோம்.  வீட்டிலும் மனதிலும் அழுக்குகளைச் சேர விடக் கூடாது. இவை எப்போதும்  நம்மை விட்டு நீங்கியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ருத்ர கீதை ஞான யக்ஞம் என்று சொல்வார்கள். அன்றைய தினம் வேண்டாத பொருள்களை அக்னி குண்டத்தில் இட்டு பொசுக்குவார்கள். இதன் மூலம் மனதில் வேண்டாத எண்ணங்களும் தீயில் பொசுங்கி நல்லது நடைபெறும் என்பது ஐதிகம். பழையன கழித்து புதியனவற்றை புகவிடும் போகிப்பண்டிகையன்று மனதில் உள்ள அழுக்குகள், தொல்லைகள், மனதை வறுத்தும் செயல்களைப் போக்கி வாழ்வில் இன்பங்களும், செல்வமும், ஆரோக்யமும் நுழைவதற்கு வழிபட ஏற்ற நாள். துயரங்களைப் போக்குவதாலேயே இது போக்கி பண்டிகை என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் இது மருவி போகி என்று அழைக்கப்படுகிறது.  இந்திர தேவனுக்கு போகி என்ற பெயரும் உண்டு. 

தேவலோகத்தில் வசித்த இந்திரனுக்கு கடவுள்களுக்கு எல்லாம் அரசர் தாம் தான் என்ற மமதை  இருந்தது. குறும்புத்தனம் மிகுந்த ஸ்ரீகிருஷ்ணன் சும்மா இருப்பாரா? இரு .. இரு.. உன்னை கவனிக்கிறேன் என்று தன்னுடைய திருவிளையாடலைத்  தொடங்கினார். ஆடு, மாடுகளை மேய்க்கும் ஆயர்களிடம் இனிமேல் இந்திரனை வணங்க வேண்டாம், மாறாக கோவர்த்தன மலையை வழிபடுங்கள் என்று கட்டளையிட்டார்.ஏற்கனவே மக்கள் கண்ணனின் அழகில் கட்டுண்டு கிடந்தனர். கண்ணனின் சுட்டித்தனமும்.. குறும்புத்தனமும் தினம் தினம் பார்த்து ரசிப்பவர்கள் ஆயிற்றே... நீ சொன்னால் சரி என்று மகுடிக்கு அசைந்த பாம்பாய் தலையாட்டி தங்கள் வேலையைக் கவனித்தார்கள்.

ஏற்கனவே மமதையில் இருந்த இந்திரன் விட்டேனா பார் என்று மக்களைத் துன்புறுத்தும் வகையில் வருணனை அனுப்பி கடும் மழையும், புயலையும் உண்டாக்கி தன்னுடைய சாகசத்தை தொடங்கினான். ஸ்ரீ கிருஷ்ணன் என்ன சுட்டிக் குழந்தையா..  விண்ணையும் மண்ணையும் தன் பாதத்தில் அளந்தவனாயிற்றே.. இது என்ன பிரமாதம் என்று கோவர்த்தன மலையை சற்றே அசைத்து சுண்டு விரலில் தூக்கிவிட்டார். மக்கள் அனைவரும் பாதுகாப்பாய் அடைக்கலமாகி ஸ்ரீ கிருஷ்ணரை துதிபாடினார்கள். கண்ணனின் குறும்புத்தனம் இந்திரனின் மனதையும் பதம் பார்த்துவிட்டது. ஸ்ரீ கிருஷ்ணா உன் சக்தி அறியாமல் அடியேன் செய்த தவறை மன்னியேன் என்று சரணடைந்தார். கூடவே உன் மீது அன்பு செலுத்தும் மக்கள் என் மீதும் கொஞ்சம் வைக்க அருள் புரியுங்களேன் என்று தன்னுடைய விண்ணப்பதையும்  கடவுளிடம் வேண்டினார். பகிர்ந்து கொடுக்கும் ஸ்ரீ கிருஷ்ணனும் சரி என்று சம்மதித்தார். அன்றைய தினம் சூரிய நாராயண பூஜை. தை முதல் நாளுக்கு முன் தினம் இந்திர வழிபாட்டை  ஆயர்கள் கொண்டாடினார்கள்.

இந்த வருட போகிப் பண்டிகைக்கு நாம் அனைவரும் செய்ய வேண்டியது ஒன்றுதான். வளம் குன்றிய ஆரோக்யமும், மன உளைச்சலும் போக்கி மனதை புத்துணர்வோடு புதியதாக வைத்திருங்கள் என்று வழிபடுவதுதான். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.