திருப்பாவை-24 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி...

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 08 Jan, 2019 12:06 am

thiruppavai-24

மிகவும் எளிய பாசுரம். நேரிடையான பொருள் கொண்ட இனிமையானதும் கூட! நாலாயிரத்தின் முதல் பாசுரத்தைப் போல, இது கிருஷ்ணருக்குப் பாடும் பல்லாண்டு பாசுரம் குறிப்பாக கண்ணனின் திருவடிகள் மற்றும் திருக் கைகளுக்கான பல்லாண்டு பாடலாக அமைந்திருக்கிறது. கண்ணனுக்கு அடுத்தபடியாக வாமனரைத் தான் அதிகம் பிடித்திருக்கிறது கோதை நாச்சியாருக்கு. காரணம் திருப்பாவையின் சாரமான சரணாகதியை அடிப்படையாகக் கொண்ட அவதாரமாக இருக்கலாம். இந்தப் பாசுரத்துடன் மூன்றாவது முறையாக வாமனரைக் குறிப்பிட்டிருக்கிறாள்.

அன்று சிறிய மூர்த்தியாக வந்து உலகையே அளந்த வாமனரே! உன் திருவடிக்குப் பல்லாண்டு!

தெற்கே இருக்கும் இலங்கைக்கு நடந்தே சென்று வெற்றி கொண்ட உன் திறனுக்கும் பல்லாண்டு!

சடகாசுரன் பெருஞ்சக்கரமாக உருவெடுத்து நீ குழந்தை தானே என்று எள்ளி உன் மீதேறி அழிக்க வந்தான். அப்பொழுது காலை உதைத்து அழுவது போல சடகாசுரனை ஒரே உதையில் நொறுக்கி அழித்தாயே… அந்தப் பாதங்களுக்கும் பல்லாண்டு!

ஒவ்வொருத்தராய் வந்து கண்ணனை அழிக்க முடியாததால், கபித்தாசுரன் மற்றும் வத்ராசுரன் ஆகிய இருவரும் கன்றும் விளாமரமுமாக மாயத் தோற்றம் கொண்டு கண்ணனை முடிக்கத் திட்டம் போட்டார்கள். மாயக் கண்ணனோ, கன்றாக இருந்த வத்ராசுரனின் கால்களைப் பிடித்து விளாமரமாக நின்ற கபித்தாசுரன் மீது வீசி ஒரே நேரத்தில் இருவரையும் முடித்தான். அந்த வீரக் கழலுக்கும் பல்லாண்டு! 

இந்திரன் ஏவிய மழையிலிருந்து கோவர்த்தனகிரியை உன் விரல் நுனியில் குடையாகத் தூக்கி ஆயர்குலத்தைக் காத்த அந்த குணத்திற்கும் பல்லாண்டு!

எத்தகைய பகையினையும் அழித்தொழிக்கும் நின் கையிலிருக்கும் வேலினுக்கும் பல்லாண்டு!

இத்தனை சாதித்த கண்ணா, இன்று நாங்கள் உன் முன் வந்து நிற்கிறோம் எங்களுக்கானதைச் செய்து அருள்புரிவாயாக!

 “அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி

சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி

கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.”

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.