புண்ணியக் கணக்கில் சேர்வது தானமல்ல...தர்மம் மட்டுமே...

  Newstm Desk   | Last Modified : 26 Mar, 2019 04:47 pm
what-in-donor-and-donation

புண்ணியக் கணக்கில் சேர்வது தானமல்ல...தர்மம் மட்டுமே...
                     
இந்துமதம் பெரும்பாலும் வலியுறுத்துவது தானமும் தர்மமும் செய்ய வேண்டும் என்பது தான். இறைப்பணியில் மூழ்கி இறைவனையே நினைத்துக் கொண்டிருக்கும் பக்தர்கள் சாஸ்திரப்படி பிறந்தநாளில், திருமணநாளில், முன்னோர்கள் இறந்த திதியில் என்று இயன்ற  அளவு அன்னதானங்களை செய்கிறார்கள். தானங்களில் எத்தனையோ வகைகள் உண்டு. தர்மம் என்று எடுத்துகொண்டால் ஒன்றுதான். தானத்துக்கும் தர்மத்துக்கும் வேறுபாடு உண்டு

 நான் தான தர்மம் செய்ய விரும்புகிறேன் என்று சொல்வதில் சிலர் பெருமிதம் கொள்வார்கள். உதவி என்று யார் கேட்டு வந்தாலும் நான் தர்மம் செய்கிறேன் என்றும் சொல்வார்கள்.

இயலாதவர்களுக்கு உணவிடுவதும், ஏழை குழந்தைகளைப் படிக்க வைப்பதும், முதியோர்களுக்கு ஆடைகள் தருவதையும் தானத்திலும் தர்மத்திலும் சேர்த்துக்கொள்பவர்கள் முதலில் தானம் வேறு தர்மம் வேறு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். 

தானம்:

தானத்திலும் தர்மத்திலும் சிறந்து விளங்குபவன் கர்ணன் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். கர்ணன் தன்னிடம் யாசகம் கேட்டு வருபவர்களுக்கு அவர்கள் விரும்பியது எதுவாயினும் மகிழ்ச்சியோடு அளிப்பான்.

கேட்டதைக் கொடுக்கும் அளவுக்கு தன்னை இறைவன் வைத்திருப்பதை எண்ணி மனம் மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தவும் தவற மாட்டான். இப்படி கேட்பவர்களுக்கு  செய்யும் உதவியானது  தானத்தில் தான் சேரும்..   புண்ணியத்தைக் கொண்டு வராது.

தருமம்:

ஆனால் அதே கர்ணன் கொடை வள்ளல் என்றும் அழைக்கப்பட்டான்.  உதவி என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து அவர்கள் கேளாத நிலையில் அவர்களுக்கு வேண்டியதை மனமுவந்தும் செய்து வந்தான். இப்படி செய்யும்  உதவிகளே தர்ம கணக்கில் வந்து சேரும். ஆனால் இந்த தர்மம் புண்ணியத்தைத்  தரவல்லது.

இத்தகைய புண்ணியத்தை அதிகம் சம்பாதித்தான் கர்ணன். ஆனால் கிருஷ்ண பரமாத்மா வயோதிக பிராமணனாய் வேடமிட்டு கர்ணனிடம் வந்து புண்ணியத்தைக் கேட்டு பெற்றுகொண்டார்.  கேட்டு பெற்றதால்  கர்ணன்  தர்மத்தால் பெற்ற புண்ணியம் அனைத்தும் தானக்கணக்கில் சேர்ந்துவிட்டது.  கர்ணனை மரணமும் எளிதில் சூழ்ந்துகொண்டது.
இப்படி தர்மம் இருக்கும் இடங்களுக்கேற்ப மாறுபடும். ஒரு போர்வீரரின் தர்மம் என்பது  அவர் இருக்கும் நாட்டைக் காப்பது. மனிதன் இல்லறத்தில் ஈடுபடும் போது மனைவி,  பிள்ளைகள், பெற்றோர்களை கவனிக்காமல் கடவுளுக்கு தொண்டு செய்வது  தர்மக்கணக்கில் சேராது. தர்மம் என்பது கடமையைச் சரியாக செய்வது ஆகும்.

எனவே  இந்நாளில் இறைவனை நினைத்து 1000 பேருக்கு அன்னதானம் செய்து தானம் தர்மம் செய்தேன் என்று சொல்வதை விட வறுமையால் வாடி பசி என்னும் கொடுமையைச் சொல்வதற்கு முன்பும்,  கல்வியைத் தொடரமுடியவில்லை என்று சொல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு கல்வியும் என கேட்கும் முன்பே நீங்கள் செய்வதே தர்மம் என்று சாஸ்திரம் சொல்கிறது.
 தர்மம் என்னும் புண்ணியக்கணக்கைப் பெற  கேளாமலேயே உரியவருக்கு உரிய நேரத்தில் செய்துவிடுங்கள். இதுதான் தர்மம்... இதுதான் புண்ணியம்..  

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close