இராமா என்று அழைத்தால் துன்பம் தரும் சனியும் அச்சம் கொண்டு  விலகிவிடுவான்

  தனலக்ஷ்மி   | Last Modified : 30 Mar, 2019 01:42 pm
if-you-call-rama-rama-sani-bagawan

சனித்திசையும், ஏழரைச் சனியும் வந்துவிட்டால் வாழ்க்கையில் அனுபவிக்காத பல துன்பங்களும் வந்துவிடும் என்பது பொதுவான கருத்து. ஆனால் இராமா இராமா என்று சொன்னால் சனீஸ்வரன் இறங்கி வந்து துன்பங்களைக் குறைத்துவிடுவான் என்பதை உணர்த்தும்  சம்பவம் ஒன்று  இராமாயணத்தில் நடந்தது.
 

ஸ்ரீ இராமனுக்கும், இராவணனுக்கும் போர் நடந்த சமயம் இலட்சுமணன் மயங்கிவிட்டான். அப்போது லட்சுமணன் உயிரைக் காப்பாற்ற தேவையான மூலிகை சஞ்சீவி மலையில் இருப்பதாக ஜாம்பவான் கூறினார். அங்கிருந்த அனுமன் ஸ்ரீஇராமனிடம் ”நான் சென்று மூலிகைகளைக் கொண்டு வருகிறேன்” என்று கூறினான்.  ஸ்ரீஇராமனும் அனுமனை வாழ்த்தி ”வெற்றி உண்டாகட்டும்.. கடும் இக்கட்டான சூழலில்  என்னை நினைவில் வைத்துக்கொள்” என்றார். அனுமனும் மகிழ்ச்சியாக விடைபெற்று சஞ்சீவி மலையை நோக்கி பயணப்பட் டான்.

அப்போது இராவணன் தனது தவவலிமையால் நவக்கிரகங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தான். இலட்சுமணனுக்கு தேவையான மூலிகைகளை அனுமன் எடுத்துச்செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது. அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி நவக்கிரகங்களுக்கு மட்டுமே உரியது. அவற்றிலும் நவக்கிரகங்களில் பெரியவனான சனிபகவான் தான் அதைச் செய்ய முடியும் என்று இராவணனுக்கு அறிவுறுத்தினார்கள். இராவணன் சனிபகவானை அழைத்து மூலிகையை எடுத்துச் செல்லாமல் அனுமனைத் தடுத்து நிறுத்துவது உன்னு டைய  பொறுப்பு என்று கட்டளையிட்டான். 

தர்மத்தை மீறிய செயல் இது என்று தெரிந்திருந்தும் சனிபகவான் இராவணனின் கட்டளையை ஏற்று அனுமனை நாடிச்சென்றார். அனுமன் சஞ்சீவி மலையில் மூலிகையைத் தேடிக்கொண்டிருந்தார். நெடுநேரம் ஆகியும் மூலிகையைக் கண்டறிய இயலாததால் அனுமன் சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்தார். சஞ்சீவி மலையையே பெயர்த்து தன் ஒற்றை விரலில் நிறுத்தி லட்சுமணனைக் காப்பாற்ற விரைந்து சென்ற அனுமனை வழியில் தடுத்தார் சனி பகவான்.

”வீண் விவாதம் செய்யவோ உன்னிடம் போர் புரியவோ நான் இங்கு வரவில்லை. எனக்கு அதிக வேலையிருக்கிறது” என்று அனுமன் சனிபகவானை எச்சரிக்கை செய்தார். ஆனால் அனுமன் என்ன சொல்லியும் கேளாமல்  சனி பகவான் அனுமனைத் தடுக்கவே சனியை கீழேதள்ளி தன் பலம் அனைத்தையும் கொண்டு சனிபகவானை நசுக்கினார் அனுமன். தாங்க முடியாத  வலியால் சனி பகவான் கதறினார். தம்மை விட்டுவிடும்படி அனுமனிடம் கெஞ்சினார்.

அனுமன் தான் இராம பக்தனாயிற்றே. அதனால் சனிபகவான் “இராமா.. இராமா” என்று அழைத்தார். அனுமனின் பிடி சிறிது சிறிதாக இறங்கிற்று... ஸ்ரீ இராமன் நாமத்தால் தப்பி பிழைத்தாய். உன்னால் பீடிக்கப்பட்டவர்கள் துன்புறுத்தும்போது ஸ்ரீ இராமனின் திருநாமத்தைச் சொல்பவர்களைத் தொல்லை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை செய்து சனிபகவானின் சம்மதம் பெற்றபிறகே சனிபகவானை விடுவித்தார்.

ஆஞ்சநேயன் சனிபகவானை காலால் அழுத்தும் திருக்கோலத்தை கொண்டிருக்கிறது  வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அமைந்திருக்கும் பெரிய ஆஞ்சநேயர் கோவில். சனிதிசை நடப்பவர்களும், சனி தோஷம் உள்ளவர்களும், ஏழரைச்சனியால் பீடிக்கப்பட்டவர்களும் இத்திருத்தலத்துக்கு வந்து வழிபட்டால் சனிபகவானின் தொல்லையிலிருந்து மீளலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close