இந்திரனுக்கு ஆயிரம் கண்.... வந்த கதை தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 03 Apr, 2019 05:46 pm
story-of-thousand-eyes-indiran

கவுதம முனிவரின் மனைவி அகலிகை அழகில் சிறந்த பேரழகி. கற்புக்கரசி. அவளது அழகை வர்ணிக்காதவர்கள் யாருமில்லை. நாரதரின் வழியாக இந்திரனின் காதுகளிலும் அகலிகையின் அழகு  எட்டப்பட்டது. அகலிகையை எப்படியாவது அடைய வேண்டும் என்று விரும்பினான் இந்திரன். பதிவிரதையான அகலிகையைச் சூழ்ச்சியின் மூலமே அடைய முடியும் என்று நினைத்து பூலோகத்துக்கு வந்தான்.

அதிகாலையில் ஆற்றில் நீராடி ஜபதபங்கள் செய்வது முனிவர்களுக்கு வழக்கம்... இதைப் பயன்படுத்திக்கொள்வோம் என்று கவுதம முனிவரின் ஆசிரமம் முன்பு வந்து நடுஜாமத்தில் சேவல் போல் கூவினான். அதிகாலைப் பொழுது  புலர்ந்துவிட்டது என்றெண்ணி கவுதம முனிவர் ஆற்றங்கரைக்குச் சென்றார். அகலிகையும்  உடன் எழுந்து தன் பணிகளை செய்ய துவங்கினாள். அந்நேரத்தில் இந்திரன் கவுதம முனிவர் வேடத்தில் உள்ளே நுழைந்தான். ”ஆற்றங்கரைக்கு சென்று இவ்வளவு சீக்கிரம் திரும்பிவிட்டீர்களா?” என்று கேட்டாள்.. ”இல்லை  ஏதோ பறவையின் ஒலியை கேட்டு சேவல் என்று நினைத்து எழுந்துவிட்டேன். இன்னும் பொழுது புலரவில்லை. வா படுக்கலாம்” என்று அருகில் அழைத்து இன்பம் கொண்டான்.

ஆற்றங்கரை சென்ற முனிவர் இருள் விடியாதது கண்டு குழப்பம் அடைந்து தன் ஞானதிருஷ்டியால் நடந்ததை அறிந்து வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். திடுக்கிட்ட அகலிகை  அருகில் இருந்த இந்திரனை பார்த்தாள். அதற்குள் கவுதம முனிவரின் உருவில் இருந்த இந்திரன் சுய உருவம் பெற்று அகலிகையிடம் மன்னிப்பு கேட்டான். அகலிகை தலைவிரிகோலமாக முனிவரின் காலில் விழுந்து ”தவறு நேர்ந்துவிட்டது” என்று கதறினாள்.  

வேறு உருவம் கொண்டு  வெளியேற நினைத்த இந்திரனை கோபமாக அழைத்தார் கவுதமமுனிவர். ”மாற்றான் மனைவியின் மீது மையல் கொண்டு செய்யதகாத காரியத்தைச் செய்ததால் உன் உடம்பெல்லாம் பெண் குறியாக மாறட்டும்” என்று சாபம் கொடுத்தார். அகலிகையை நோக்கி ”கட்டிய கணவனுக்கும் அயலானுக்கும் வித்தியாசம் தெரியாத நீ கல்லாக மாறுவாய்” என்று சாபமிட்டார். ”நான் தெரியாமல் செய்த பாவத்துக்கு விமோசனமே கிடையாதா” என்று கதறினாள் அகலிகை... ”ஸ்ரீமந் நாராயணன் இராம அவதாரம் தரித்து இவ்விடத்துக்கு வரும்போது அவர் பாதம் பட்டு விமோசனம் பெறுவாய்” என்று வெளியேறினார் கவுதம முனிவர்.

பெண்குறிகளோடு வெளியில் வர  அசிங்கப்பட்டு மறைந்து வாழ்ந்தான் இந்திரன். தேவலோகத்தில் இருந்தவர்கள் எல்லோரும் இந்திரனுக்காக  கவுதம முனிவரிடம் சென்று மன்னிப்பு கேட்டனர். சாபத்தை திரும்ப பெற இயலாது. இந்திரன் பிரகஸ்பதியிடம்  சென்று விநாயக பெருமானுடைய  ” ஷடாட்சமந்தி ரத்தைக் கேட்டு  உபதேசம் பெற்று ஜபிக்கட்டும்” என்று கூறினார்.

இந்திரனும் அவ்வாறே செய்தான்.  அவர் அருளால் அவன் உடலில் இருந்த பெண்குறிகள் எல்லாம் கண்களாக மாறியது. அதனால்தான்  அவனுக்கு ஆயிரம் கண்கள் ஏற்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close