திருவோணம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்

  தனலக்ஷ்மி   | Last Modified : 07 Apr, 2019 08:49 pm
thiruvonam-nakshthras-which-temple-to-go

27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரை நட்சத்திரமும் மட்டுமே திரு என்னும் அடைமொழியில் அழைக்கும் சிறப்பை பெற்றிருக்கின்றன. சாபம் பெற்ற சந்திரனை சாபத்திலிருந்து விடுவிக்க சந்திரனின் மனைவிகளான 27 நட்சத்திரங்களில்  திருவோண நட்சத்திரத்தை உடையவள் மட்டும் மிகுந்த வருத்தமடைந்தாள்.

பூலோகத்தில் உள்ள திருப் பாற்கடலில்  வீற்றிருக்கும் இத்தலத்துக்கு வந்து  பெருமாளை  வேண்டி தவம் இருந்தாள். இவளது தவத்தை மெச்சிய பெருமாள்  மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார். அதனாலேயே இத்தலம் திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு  உரிய தலமாக மாறிற்று...

வேலூர் மாவட்டம் திருப்பாற்கடலில் உள்ள பிரசன்ன  வெங்கடேசபெருமாள் திருக்கோயிலே திருவோண நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம். மூலவர் பிரசன்ன வெங்கடேச பெருமாள். தாயார்  அலர்மேல் மங்கை. 108 திவ்ய தேசங்களில் 107-வது திவ்யதேசமாக திருப்பாற்கடல் விளங்குகிறது. இவற்றை சென்று பார்க்க முடியாது என்பதால் இத்தலத்துக்கு வந்து பிரசன்ன வெங்கடேச பெருமாளைத் தரிசித்தால் திருப்பாற்கடலைத் தரிசித்த பேறு கிடைக்கும். 

புண்டரீக மகரிஷி  வைணவத்தலத்துக்கு யாத்திரை சென்றார். அப்போது நாராயண சதுர்வேதி மங்கலத்துக்கு வந்தார். அங்கு சிவலிங்கத்தைக் கண்டதும் மாறி வந்துவிட்டோமோ என்று தலத்திலிருந்து வெளியே வந்தார். சிவன்  வயோதிக தோற்றம் கொண்டு மகரிஷி முன்பு வந்தார்.

”ஏன்  இறைவனை வணங்காமல் வெளியே வந்துவிட்டீர்கள்?” என்று கேட்டார். ”நான் பெருமாளை பார்க்க வந்தேன். சிவத்தலம் என்று தெரிந்ததால் வெளியே வந்துவிட்டேன்” என்றார். ”இல்லை தாங்கள் பார்த்தது பெருமாள் தான்”  என்று கூறி மீண்டும் மகிரிஷியை உள்ளே அழைத்து சென்றார்.

மூலஸ்தானத்தில் சென்று ஆவுடையின் மேல்  நின்று பெருமாளாக காட்சி தந்தார். சிவனும் பெருமாளும் ஒன்று. அதோடு நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் என மூன்று கோலங்களிலும்  உங்களுக்கு தரிசனம் தந்ததால் இது திருப்பாற்கடல் என்று அழைக்கப்படும் என்றும் கூறினார். மகரிஷிக்காக பெருமாள் முன் தோன்றியதால் இவர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்று அழைக்கப்பட்டார்.

ஹரியும் சிவனும் ஒன்றுதான் என்னும் தத்துவத்தைக் குறிக்கும் வகையில் இத்தலம் விளங்குகிறது. மூலவருக்கு சொர்க்க வாசலுடன் சேர்த்து மூன்று வாசல்கள் இருப்பது சிறப்பு. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கும் போது  மூலவரை நேரிடையாக தரிசிக்கும் பேறு கிடைக்கும். 

திருவோண நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்துகொள்ள வாழ்நாளில் ஒருமுறை அல்லது ஜென்ம நட்சத்திரத்தன்று இத்தலத்துக்கு வந்து பிரசன்ன பெருமாளை வணங்கினால் எண்ணிய வெல்லாம் எண்ணம் போல் ஈடேறும்.

 

newstm.in


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close