அக்ஷய திருதியில் தானம் செய்தால் பலமடங்கு பலன்கள்…

  தனலக்ஷ்மி   | Last Modified : 06 May, 2019 05:16 pm
donations-in-akshaya-thirudhi

தானங்கள் செய்தால் வளரும் என்று சொல்வார்கள். அத்தகைய தானங்கள் செய்ய உகந்த நாளாக  அக்ஷய திருதியைப் பற்றியும் சொல்வார்கள். இந்த நாள் எப்படி உருவானது என்று தெரியுமா?

பூரியசஸ் என்னும் மன்னன் ஒருவன் இருந்தான். அவனுடைய ஆட்சியின் கீழ் இருந்த நாடு திடீரென களை இழந்தது. அவனிடம் இருந்த சேனைகள் பிணியால் பீடிக்கப்பட்டிருந்தன. இதுதான் சமயம் என்று பக்கத்து நாட்டை சேர்ந்த அரசன் பூரியசஸ் நாட்டின் மீது படையெடுத்து வந்தான். நாட்டை அபகரித்துக்கொண்டு மன்னனையும் அவன் மனைவியையும் காட்டுக்குள் துரத்திவிட்டான். பல வருடங்கள் துன்பப்பட்டு காட்டிலேயே வாழ்ந்தார்கள். மன்னன் எந்நேரமும் தன்னுடைய குருவின் நினைவாகவே இருந்து வந்தான்.

ஒருமுறை அவன் குடிலை கடந்து யாஜகர், உபயாகர் ஆகியவர்கள் கடக்கும் போது மன்னன் பரவசமடைந்து அவர்கள் காலில் வீழ்ந்து வணங்கி தன்னுடைய நிலையை எடுத்து சொன்னான். அவன் மீது பரிதாபம் கொண்ட அவர்கள் ஞானதிருஷ்டியினால் மன்னனின் முற்பிறவியில் அவன் செய்த பாவங்களை அறிந்து கொண்டார்கள்.

இவ்வளவு துன்பத்துக்கும் காரணம் முற்பிறவியில் நீ செய்த பாவங்கள் தான் என்றவர்கள் காரணத்தை சொல்ல ஆரம்பித்தார்கள். “பத்து  பிறவியும் நீ வேடனாக பிறப்பெடுத்து இருந்தாய். முற்பிறவியில் நீ காட்டு வழி வந்தவர்களின் பொருள்களை அபகரித்து இந்த வழியில் வந்த சாதுக்களை அவமானப்படுத்தி மகிழ்ச்சியடைந்தாய். அதன் பயனைத்தான்  இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்.

ஒருமுறை வைசியர்களும், அந்தணர்களும் இந்த வழியாக வந்த போது அவர்களிடமிருந்த செல்வங்களை அபகரிக்க துரத்தினாய். உன்னிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள ஓடும்போது கீழே விழுந்த அந்தணர் மயக்க மடைந்துவிட்டார். அப்போது  பொருள்களை எங்கு வைத்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள அவருக்கு நீர் தந்து எழுப்பினாய் அதன் பலனாகவே அரசனாக பிறந்தாய். வைகாசி மாதத்தில் இந்நிகழ்வு நடந்தது” என்றார்கள்.

நீர் தானத்துக்கு இவ்வளவு மகிமையா என்று வியந்த பூரியசஸ் மன்னன் தன் விதியை நினைத்து ஸ்ரீமந் நாராயணனை வேண்டி தியானம் செய்தான். வெயிலில் வருவோருக்கு நீர் தானம் அளித்து தங்க இடம் கொடுத்து உபசரித்தான். மன்னனின் வேண்டுதல்களோ என்னவோ மன்னரின் நலன்விரும்பிகள் மன்னரிடம் வந்து நாட்டை மீட்கலாம் என்று இணைந்து போராடினார்கள். மன்னன் நாட்டை திரும்ப பெற்றான். மக்கள் குறையில்லா ஆட்சியை பெற்றார்கள். மன்னனும் மகிழ்வுடன் பிள்ளைப்பேறு பெற்று ஸ்ரீமந் நாராயணனை விடாமல் பற்றியிருந்தான்.

மன்னனின் பக்தியில் மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் மன்னர் முன் தோன்றி “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். “வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்றிருக்கிறேன். எனக்கு எந்த குறையுமில்லை. எப்போதும் உன் திருநாமம் தவிர வேறு எதையும் எண்ணி பார்க்க கூடாது” என்று வரம் பெற்றான். பூரியசஸ் மன்னனுக்கு ஸ்ரீமந் நாராயணன் காட்சி தந்த நாள் திருதியை. அன்றைய தினம் செய்யும் தான தருமங்கள் அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால் இந்த திருதியை அக்ஷய திருதி என்று பெயர் பெற்றது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close