பக்தி இருக்கட்டும்… கடவுள்  என்ன கேட்டாலும் கொடுப்போமா..

  தனலக்ஷ்மி   | Last Modified : 07 May, 2019 03:44 pm
let-s-be-devout-what-will-god-give-us

இந்த உலகிலேயே நான் தான் கடவுள் பக்தி அதிகம் கொண்டவன் என்று சொல்பவர்கள் நம்மில் பலருண்டு. பக்தி என்பது இருக்கட்டும் கடவுள்  என்ன கேட்டாலும் கொடுப்போமா.. நம் உயிரை அல்லது நாம் உயிராய் நேசிக்கும் ஒருவரை.. இப்படி கேட்டால் எப்படி என்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்தக் கதை...

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மீது பைத்தியம் கொண்ட பக்தன் ஒருவன் இருந்தான். பக்தன் என்றால் சாதாரணமானவனில்லை. பகவானுக்கு நேரம் கிடைத்தால் இவனிடம் வந்து விடும் அளவுக்கு இருவருக்குள்ளும் அப்படியொரு பாசப் பிணைப்பு இருந்து வந்தது. 
ஒருமுறை ஸ்ரீ கிருஷ்ணர் தன் பக்தனை பார்க்க வந்திருந்தார். இவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. வரவேற்று உபசரித்தவன் ஸ்ரீ கிருஷ்ணரது திருமுகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். சிறிது நேரம் கழித்து ஸ்ரீ கிருஷ்ணர் பக்தனிடம் “நான் ஒன்று கேட்பேன். எனக்கு கொடுப்பாயா?” என்றார்.

பக்தனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.” ஜீவ ராசிகளைக் காக்கும் கடவுள் உங்களுக்கு என்னிடமிருந்து பெறுமளவுக்கு ஏதேனும் இருந்தால் அதைவிட பெரிய பாக்கியம் எனக்கு எதுவுமில்லை.. என்ன வேண்டும் கேள் கிருஷ்ணரே. நான் தருவது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றால் எப்பாடுபட்டாவது அதைத் தர விரும்புகிறேன்” என்றான்.

“உனக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறானே., அவன் தான் எனக்கு வேண்டும். அவனை எனக்குத் தருவாயா?” என்று கேட்டார். பக்தனுக்கு மேலும் மகிழ்ச்சி உண்டாயிற்று. “எனக்கும் என் மகனுக்கும்  இதைவிடப் பெரும் பேறு வேறு என்ன உள்ளது. நான் இப்போதே சென்று என் மகனை அழைத்து வருகிறேன்” என்று  மனைவியையும், மகனையும் அழைத்து வந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் அந்த சிறுவன் வந்ததும் “எனக்கு உன் மகனின் வலது பாகம் மட்டுமே போதும். நீயும் உன் மனைவியும் ரம்பத்தால் அறுத்து வலது பாகத்தை தந்தால் போதும். ஆனால் எள் முனையளவு நீங்கள் கவலைக்கொண்டாலும் எனக்கு எதுவும் தேவையில்லை” என்று சொல்லி அவனை உற்று நோக்கினார். அப்போதும் அந்த பக்தனின் கண்களிலோ முகத்திலோ எவ்வித வேறுபாடும் இல்லை.

“இதிலென்ன இருக்கு கிருஷ்ணரே எங்களுக்கு பரிபூரண சம்மதம் என்று  பக்தனும் மனைவியும் மகனின் தலையில் ரம்பத்தை வைத்து அறுக்க ஆரம்பித்தனர். அப்போது மகனது இடது கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது. இதைக் கவனித்த கிருஷ்ணர் “என் நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்டீர்கள். எனக்கு உங்கள் மகன் வேண்டாம். அவன் கண்களில் இருந்து  கண்ணீர் கொட்டுகிறது” என்றார். பக்தனும் மனைவியும் மகனை உற்றுநோக்கினார்கள். “என்னவாயிற்று பயமாக இருக்கிறதா” என்று கேட்டார்கள். மகன் சொன்னான்.

” ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவை செய்ய என் வலது புறம் மட்டும் புண்ணியம் செய்திருக்கிறது. இடது புறம் புண்ணியம் செய்யவில்லையே என்று நினைத்தேன். அதனால் தான் அழுதேன்” என்றான். ஸ்ரீ கிருஷ்ணர் தாவி அந்த சிறுவனை அணைத்துக்கொண்டார். பக்தனின் பக்தி எதுவரை என்பதை உணர்த்தவே இப்படி செய்ததாக கூறினார். கடவுள் மீதான பக்தி இப்படித்தான் இருக்க வேண்டும்.  

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close