நாயன்மார்கள் - இடங்கழி நாயனார்

  தனலக்ஷ்மி   | Last Modified : 17 May, 2019 02:33 pm
naayanmargal-idangazahi-naayanar

63 நாயன்மார்களுள் ஒருவரான இடங்கழி நாயனார் சோழநாட்டின் சிறிய நாடான கோனேட்டில் கொடும்பாளூர் என்னும் ஊரை ஆண்டு வந்தார். இவரது காலத்தில் தான்  சிவாலயங்கள் அதிகம் எழுப்பப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிவ வழிபாட்டினை போற்றி வந்தவர் இவர். 
 

அந்த ஊரில் இருந்த சிவனடியார் ஒருவர், வாழ்வதே  சிவனுக்காகத்தான் என்று வாழ்ந்துவந்தார். சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதைத் தவிர வேறு எந்த பணியையும் கொண்டிருக்காமல் வாழ்ந்து வந்தார்.  சிவ நாமம் சொல்லி வரும் அடியார்கள் எல்லோருமே அவருக்கு சிவபெருமான் தான்.  அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து அவர்களுக்கு அமுது படைத்து அனுப்பி இன்புற்று  இருந்துவந்தார்.
 

சிவனடியார்கள் இவரது அன்பில் கட்டுண்டு செல்லும் இடமெல்லாம் இவர் புகழை பரப்பினார்கள். இதனால் அந்த ஊருக்கு வரும் அனைத்து சிவனடியார்களும் இந்த அடியாரின் வீட்டில் அன்னதானம் உண்பதை பெரும்பேறாக கருதினார்கள். சிவனின் மீது எவ்வளவு பக்தி இருந்தால் இத்தகைய பணி விடையை அவர் செய்வார் என்று மகிழ்ந்தார்கள் சிவனடியார்கள்.

சிவனடியார்களின் வருகையால் மூட்டிய அடுப்பு அணையாமலேயேஅன்னங்கள் படைத்துகொண்டிருந்தது. வருபவர்களுக்கு சுவையாக சூடாக உணவுகள் பரிமாறப்பட்டது. சிவனடியாரிடம் இருந்த செல்வம் சிறிது சிறிதாக கரைந்தது. ஆனாலும் மூட்டிய நெருப்பு அணையாமல் பார்த்துக் கொண்டிருந்தார். செல்வம் முற்றிலும் கரைந்தது.
 

அடியார்களுக்கு அன்னதானத்தை எக்காலத்திலும் நிறுத்தக்கூடாது அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்த சிவனடியார் அந்நாட்டின் அரண்மனை கருவூலத்துக்குள் திருட்டுத்தனமாக நுழைந்தார். நெல்மணிகள், ஆபரணங்கள், தங்கக்காசுகள் என்று கையில் பட்டதை மூட்டை கட்டி எடுத்து வந்தார். அதனால் அன்னதானமும் குறைவின்றி தொடர்ந்து வந்தது. சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதை இலட்சியமாக கொண்டு வாழ்ந்தவருக்கு தன்னுடைய இலட்சியத்தில் குறையில்லாமல் அன்னதானம் நடக்கிறதே என்ற உவகை ஏற்பட்டது.
 

மறுபுறம் அரண்மனையில் பொக்கிஷங்களிலிருந்து பணமும் பொருளும் குறைகிறது என்று அரசர் இடங்கழியாரிடம் புகார் சென்றது. அரசர் காவலை பலப்படுத்தினார். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதற்கேற்ப பொருளை கொண்டுவரும்போது ஒருநாள் சிவனடியார் கையும் களவாக பிடிபட்டார். அரசரிடம் அழைத்து சென்றார்கள்.

”சிவனடியாராக இருந்து கொண்டு இத்தகைய செயலை செய்யலாமா? எதற்காக களவாடினீர்கள்?” என்று கேட்ட மன்னர் இடங்கழியாரிடம் அச்சமின்றி ”சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்ய பொருள் வேண்டுமே அதனால் தான்” என்றார். அதைக் கேட்டதும் அரசர் இடங்கழியார் சிவனடியாரின் அருகில் வந்து அவர் காலில் விழுந்து வணங்கினார்.

”எவ்வளவு பெரிய செயல். சிவனை வணங்கும் நான் கூட அடியார்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும் என்று நினைக்கவில்லையே. அவ்வளவு செல்வம் என்னிடமிருந்து என்ன பயன். என்னிடமுள்ள அனைத்து செல்வங்களும் சிவபக்தரில் சிறந்தவரான உங்களிடம் தான் இருக்க வேண்டும்” என்று தன்னிடமிருந்த செல்வத்தை அடியாருக்கு வழங்கினார்.

இடங்கழியாரின் வள்ளல் குணத்தைக் கண்டசிவபெருமான் அவருக்கு காட்சி தந்து அருளினார். இந்த சிற்றரசர்தான் சிவனடியார்களுக்கு தொண்டு செய்த 63 நாயன்மார்களில் இடங்கழி நாயன்மாராக வணங்கப்பட்டார். சிவாலயங்களில் ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் இவருக்கு குருபூஜை செய்யப்படுகிறது.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close