நவக்கிரகங்களை எப்படி சுற்றினால் நன்மை உண்டாகும்… 

  தனலக்ஷ்மி   | Last Modified : 27 May, 2019 04:29 pm
how-to-revive-innovations-will-benefit-navagraham

இறைவன் ஒருவனே அவனே நம்மை காக்கிறான். நமது கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதை தீர்த்துவைக்கிறான். அவனின்றி ஒரு அணுவும் இயங்காது இவை எல்லாமே நமக்குத் தெரியும். எனினும் விஷ்ணு, சிவன், பிரம்மா, பிள்ளையார், முருகன், லஷ்மி, சரஸ்வதி, பார்வதி தேவி என்று பல பெயர்களில் பல உருவங்களைக் கொண்டு வழிபாடு செய்தாலும் இறைவன் ஒருவனே.

மனிதர்கள் தன்னுடைய கர்மாவால் துன்புறும் நிலைக்கு தள்ளப்படும்போது இறுதியாக சரணடைவது இறைவனைத்தான். முக்காலங்களையும் உணர்ந்திருப்பவர் இறைவன் என்றாலும் முன்னெச்சரிக்கையாக தங்களது வாழ்க்கையை பற்றி அறிந்துகொள்ள ஜோதிடத்தையும் கணித்து தெரிந்துகொள்கிறார்கள். பூர்வ புண்ணிய பலன்களுக்கேற்ப நவக்கிரகங்கள் ஜாதகத்தில் சாதகமாகவோ அல்லது ஒரு வித தோஷம் கொண்டோ அமைந்திருக்கிறது. அத்தகைய தோஷத்தை நீக்கும் பொருட்டு நவக்கிரகங்களை வணங்கி அதற்கான பூஜைகளையும், வழிபாடுகளையும் செய்து நிம்மதியை தேடுகிறார்கள்.

நவக்கிரக பரிகாரங்களை செய்யும் அனைவருக்கும் நவக்கிரகங்களை வழிபடுவதிலும் அதைச் சரியாக சுற்றுவதிலும் பொதுவான சந்தேகம் உண்டு.  சிவாலயங்களில் அமைந்திருக்கும் நவக்கிரகங்களை வழிபடுவதற்கு முன்பு முழு முதற் கடவுளான விநாயகரையும்,  மூலவரையும் தாயாரையும் தரிசித்த பிறகு இறுதியாக நவக்கிரகங்களைத் தரிசிக்க வேண்டும் என்பதே பொதுவான விதி. பிரகாரத்தை மூன்று முறை வலம் வருபவர்கள் நவக்கிரக சன்னிதிக்குள் வரும் போது எத்தனைச் சுற்றுகளை எப்படிச் சுற்ற வேண்டும் என்ற குழப்பத்துக்கு உள்ளாவார்கள். சிலர் கிரகத்துக்கு ஒன்று என்று 9 சுற்றுகளைச் சுற்றுவார்கள்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுகின்றன. ராகு, கேது இரண்டும் வலமிருந்து இடமாக சுற்றுகின்றன. அதனால் நவக்கிரகங்களைச் சுற்றும் போது  7 சுற்றுகளை  வலமாகவும், எஞ்சிய 2 சுற்றுகளை இடமாகவும் சுற்றவேண்டும் என்றும் சொல்வார் கள். ஆனால் நவக்கிரகங்களில் இடம், வலம் என்பது கிடையாது என்பதால் அதைக் குறித்து பார்க்க வேண்டியதில்லை. பொதுவாக 9 சுற்று சுற்றினால் போதும். 

நவக்கிரகங்களைப் பொதுவாக சுற்றியபிறகு பரிகாரத்துக்குரிய நவக்கிரகத்துக்கு மட்டும் அந்த கிரகத்துக்குரிய மந்திரங்களைச் சொல்லியபடி   அதற்குரிய சுற்றுகளை அதிகரித்து வணங்கினால் போதும். வியாழன் - 3 சுற்றுகள், ராகு- 4 சுற்றுகள், புதன் -5 சுற்றுகள், சுக்கிரன் - 6 சுற்றுகள், சனி- 8 சுற்றுகள், கேது, செவ்வாய்-9 சுற்றுகள், சூரியனுக்கு 10 சுற்றுகள், சந்திரனுக்கு 11 சுற்றுகள் சுற்றினால் வேண்டுதலுக்குரிய நவக்கிரகங்கள் நன்மை தரும்.

நவக்கிரகங்களை வழிபடும் போது நேருக்கு நேர் நின்று வழிபடக்கூடாடு. அதைத் தொட்டு வணங்கவும் கூடாது என்பது ஐதிகம். 
இனி நவக்கிரகங்களைச் சுற்றும்போது குழப்பமடையாதீர்கள். தோஷங்களை நிவர்த்தி செய்ய பிரார்த்தனை மட்டும் செய்யுங்கள். நன்மைகள் தேடி வருவதை உணர்வீர்கள்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close